எம்எச் 17 விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள்!

mh17கிழக்கு உக்ரேனில் எம்எச் 17 விமானம் விபத்துக்குள்ளான பகுதியில், ஏவுகணை ஒன்றின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது ரஷ்ய ஏவுகணை என்று சந்தேகிக்கப்படுகிறது.

இவை தரையிலிருந்து விண்ணுக்கு ஏவப்படும் பக் ரக ஏவுகணையின் பகுதிகளாக இருக்கும் சாத்தியம் இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இந்த விமானத் தாக்குதலில் யார் ஈடுபட்டார்கள் என்பதை தீர்மானிக்க உதவும் என்று கூறியுள்ளனர்.

கடந்த வருடம் ஜீலையில் 298 பேருடன் பறந்துகொண்டிருந்த எம் எச் 17 விமானம், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வான்பரப்பில் விபத்துக்குள்ளானது.

80 குழந்தைகள் உட்பட, 283 பயணிகளும் 15 ஊழியர்களும் இந்த விமான விபத்தில் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள். மீதமிருப்பவர்கள் மலேசியாவையும் அவுஸ்திரேலியாவையும் சேர்ந்தவர்கள்.

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களே விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக யுக்ரேனும் அனேக மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டியதுடன் அவர்களுக்கு ரஷ்யா பக் வகை ஏவுகணையை வழங்கியிருக்கக்கூடும் என்றும் தெரிவித்தனர்.

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் ரஷ்யாவும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் யுக்ரேன் படையினரே தாக்குதலுக்கு காரணம் என பழி சுமத்தினர்.

நெதர்லாந்து, யுக்ரேன், மலேசியா, ஆஸ்திரேலியா, ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, ரஷ்யா ஆகியன கூட்டு விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்கின்றன.

விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த வரைவு அறிக்கையைத் தயாரிக்க இவர்கள் ஹெய்க் நகரில் சந்திக்கின்றனர்.

இறுதி அறிக்கை அக்டோபரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போயிங் 777 ரக விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது டோனெட்ஸ்க் பிரதேசத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.