யஹ்யாகான்
“உள்ளுராட்சிசபைக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டால் 18000 வாக்குகள் வழங்குவோம் என்ற சாய்ந்தமருது மக்களின் வாக்குறுதி மீறப்படக்கூடாது”.
சாய்ந்தமருது மக்கள் தங்களது உள்ளூர் தேவைகளை நிவர்த்தித்துக் கொள்வதற்காக நீண்ட காலமாக உள்ளுராட்சிசபையை கோரிவருகின்றார்கள். குறித்த உள்ளுராட்சிசபை கோரிக்கைகள் கடந்த மகிந்த ஆட்சியில் சாய்ந்தமருது மக்களால் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களிடம் முன்வைக்கப்பட்டு இன்று தருகிறேன் நாளைத்தருகிறேன் என ஏமாற்றப்பட்டது.
இப்போது குறுகியகால இடைவேளைக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிடம் உள்ளுராட்சிசபை விவகாரம் முன்வைக்கப்பட்டன. சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் புத்திஜீவிகளால் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் மிகுந்த கரிசனையுடன் இம்மக்களின் நியாயங்களை உணர்ந்து சாய்ந்தமருதுவுக்கு உள்ளுராட்சிசபையை வழங்குவது என கட்சிசார்பாகவே முடிவெடுத்து அதற்க்கான முன்னெடுப்புக்களைச் செய்ததது. அனேகமான சந்தர்ப்பங்களில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை விடய முன்னெடுப்புகளின் போது குறித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நானும் இருந்தவன் என்ற அடிப்படையில் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கைக்கு முன்னின்று உழைத்ததற்க்கும் உள்ளத்தூய்மையுடன் செயட்பட்டதற்க்கும் நானும் ஒரு சாட்சியாகும்.
அண்மைக்காலமாக சாய்ந்தமருது மக்களின் உண்மையான நியாயமான கோரிக்கையான உள்ளுராட்சிசபை விடயத்தை தங்களது சுயநலன்களை அடைந்து கொள்வதற்காக கையில் எடுத்துள்ள சிலர் இம்மக்களின் நியாயமான கோரிக்கையை மழுங்கடித்து அதற்குப் பகரமாக தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்புரிமையை பெற முயற்சிப்பது கவலையளிக்கின்ற விடயமாகும்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுடன் கடந்தகாலங்களில் நானும் இருந்தவன் என்ற அடிப்படையிலும் அந்தக்கட்சியின் செயலாளர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்தவன் என்ற அடிப்படையிலும் நமது மக்களுக்கான நியாயமான கோரிக்கையை அவரால் பெற்றுத்தர முடியாது என்று எனக்கு நன்கு தெரியும். இதன்காரணமாகத்தான் சாய்ந்தமருத்தில் இடம்பெறும் மக்கள் சந்திப்புக்களில் எல்லாம் அம்மக்கள் உள்ளுராட்சிசபை விடயமாக கோரும்போது உள்ளுராட்சி சபை ஒன்றின் ஊடாக ஒரு தலைவரைத்தான் பெற முடியும் அதற்குப்பதிலாக தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்புரிமையை தரவுள்ளேன் என்கிறார்.
சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை தனிநபர்களை பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பது என்பதல்ல. இவ்வாறு தனிநபர்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக பதவி கிடைத்ததும் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நாடே அறியும். இன்று சிலர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துரோகம் செய்ததாக கூறுகிறார்கள் இதுவரையும் எவ்வாறான துரோகத்தைச் செய்தது என்று கூறவில்லை. இவ்வாறு கூறுபவர்கள் கடைசிவரையும் அந்தக்கட்சியிலேயே இருந்தார்கள் எனபதையும் அக்கட்சியின் ஊடாகவே முகவரிகளை பெற்றார்கள் என்பதையும் மறந்துவிட்டார்கள். கடந்த பலவருடங்களாக சாய்ந்தமருது மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அவர்களது அரசியல் செயற்பாட்டில் என்ன செய்துள்ளார்கள் என்பதையும் மக்கள் நன்கு அறிவர்.
சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சிசபைக் கோரிக்கை விடயமாக சாய்ந்தமருது பள்ளிவாசல் உள்ளிட்ட பிரமுகர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் குறித்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் அழைத்துச்சென்று சாய்ந்தமருது மக்களுக்கு உத்தரவாதத்தை பெற்றுக்கொடுத்ததார். அமைச்சர் தேர்தலைத் தொடர்ந்து சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரிடம் உறுதியளித்திருந்த நிலையில் சிலர் தங்களுக்கு பதவிகள் கிடைக்கவில்லை என்பதற்காக சாய்ந்தமருது மக்களை பிழையாக வழிநடத்தி எங்காவது பதவிகளை பெற்றால் போதும் சாய்ந்தமருது மக்கள் எப்படிப்போனாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துள்ளார்கள்.
அண்மையில் கல்முனைக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள நமது சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை தேர்தலைத் தொடர்ந்து பிரகடனப்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
இதற்குப் பிறகும் இவர்கள் என்ன சொல்லப்போகின்றார்கள்? உச்ச அதிகாரத்தில் இருக்கப்போகின்ற பிரதமர் அவர்களாலேயே உத்தரவாதம் பெறப்பட்டுள்ளது அடுத்து இறைவன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறுவார்களா?
இனிமேல் சாய்ந்தமருது மக்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் பிரித்து வைப்பதற்கு இவர்களிடம் ஒன்றுமில்லை.
பதவி ஆசை பிடித்தவர்களினால் தவறாக வழிநடத்தப்பட்ட நமது கட்சியை தோள்மீது சுமந்தவர்கள் மீண்டும் அவர்களது இடங்களில் இணைந்து கொள்ளுமாறும் மக்களை வழிகேடுத்தவர்கள் இக்கட்சிக்கு அவசியப்பட்டவர்கள் இல்லை என்பதையும் இங்கு கூற விரும்புகிறேன்.
சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சிசபை கோரிக்கை, தோணா அபிவிருத்தித் திட்டம் கரைவாகு வட்டை குடியிருப்பு திட்ட காணி விடயம் எல்லாம் முஸ்லிம் காங்கிரசினால் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும்.