புதிய அரசாங்கத்தின் சில சக்திகள் தனது புகழுக்கும் நன்மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்துவதற்கு போராடிக்கொண்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
இந்த சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே தானும் தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக் ஷவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது நாட்டுக்காக நான் அனைத்தையும் தியாகம் செய்தேன். பாதுகாப்பு செயலாளர் என்ற வகிபாகத்தை வகித்தேன். இந்நிலையில் அரசாங்கத்தில் இருக்கின்ற மிகவும் சக்திவாய்ந்த தனிப்பட்டவர்கள் என்னைப் பழிவாங்குவதற்கு முயற்சிக்கின்றனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் நான் ஏற்கனவே பிரகடனம் செய்துவிட்டேன். அரச ஊழியராக எந்தவொரு சட்டவிரோதமான செயற்பாட்டையும் நான் மேற்கொண்டதில்லை. மேலும் எந்தவொரு சட்டவிரோதமான அல்லது இரகசியமான வங்கிக் கணக்குகளை வெளிநாட்டு வங்கிகளில் நான் பேணவில்லை. ஹுணுப்பிட்டியில் உள்ள அரச வங்கி ஒன்றின் கிளையிலேயே எனது சம்பளமும் ஓய்வூதியமும் வைப்பு செய்யப்பட்டுள்ளது. அது முப்பது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்காகும். 2005 ஆம் ஆண்டு நான் இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக அமெரிக்காவில் இருந்த எனது இல்லத்தை விற்பனை செய்து விட்டேன். அது எனது மனைவியின் வங்கிக்கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை விடுத்து என்னிடம் கடனட்டை ஒன்று கூட இல்லை.