ஆட்சியை மீண்டும் கைப்பற்றத் துடிப்பவர்களுக்கு இந்தத் தேர்தலிலும் மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டி மீண்டும் துரத்தியடிக்க வேண்டும் : ஹக்கீம் !

UDA_1079_Fotor

எம்.ஐ.எம் 

‘’இந்த நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும்,இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடிய விதத்தில் ஆவேசமாகவும்,இன வெறியுடனும் விஷமக் கருத்துக்களைக் கக்கி மக்களைத் தவறாக வழி நடத்தி ஆட்சியை மீண்டும் கைப்பற்றத் துடிப்பவர்களுக்கு இந்தத் தேர்தலிலும் மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டி மீண்டும் துரத்தியடிக்க வேண்டும்’’.

இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.அவர் ஆற்றிய உரைகளின் சிலவற்றின்  தொகுப்புக்கள் அடங்கிய ஆங்கில நூலின் வெளியீட்டு விழா நேற்று கண்டி ஓக்ரே ஹோட்டலில்  இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்,

தம்பர அமில தேரர் இங்கு ஆற்றிய நீண்ட உரையில் எனது நடத்தை தொடர்பில்  அப்பாவி நாட்டுப்புற சிங்கள பௌத்த மக்களைத் தவறான வகையில் திசை திருப்பி, என்னைப்பற்றி பெரும்பான்மையினர்  மத்தியில் பிழையான மனப்பதிவை ஏற்படுத்த பரவலான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதை கண்டித்துப் பேசியதோடு எனது சுயமானதும்,நிதர்சனமுமான நல்ல பக்கத்தை மக்களுக்குக் காண்பிக்காததைப்பற்றிக் கடிந்துகொண்டார்.

சூடான அரசியல் களத்தில் ஏற்படும் விவாதங்களின்போது எங்களைப்பற்றிய விமர்சனங்கள் வித்தியாசமானவையாக இருக்கலாம்.

எங்களைப்பற்றி சரிவரப் புரிந்துகொள்ள வேண்டுமானால் பல்வேறு கருத்துகளையும் உள்வாங்கி என்னைப்போன்றவர்கள் ஆற்றுகின்ற உரையில் இருந்து எங்களது உள்ளக்கிடக்கைகளை சரிவர அறிந்துகொள்ள முடியும்.அதனூடாக நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க எண்ணுகின்ற விடயங்களை நன்கு தெரிந்துகொள்ள முடியும்.

விசேடமாக இந்த நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு தம்பர அமில தேரர் கொண்டிருந்த நிலைப்பாட்டை நாங்கள் நன்கு அறிந்திருந்தோம்.ஆனால்,யுத்த வெற்றியின் பின்னர் நாட்டை நல்வழிப்படுத்துவதிலும்  கட்டியெழுப்புவதிலும் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதிலும் தேரர் கொண்டிருந்த நிலைப்பாடு முற்றிலும் வித்தியாசமானது.

யுத்தம் நடந்த காலத்தில் பெரும்பான்மை இன மக்களிடம் கொண்டு சென்ற அதே பிரசாரத்தையே இப்போதும் கொண்டு செல்கின்றனர்.அரசியல் நோக்கங்களுக்காக,முற்றிலும்  பொருத்தமில்லாத இந்தத் தருணத்தில் அவர்கள் இவ்வாறன பிரசாரத்தை முன்னெடுப்பது மிகப் பிழையானது .என்றார்.

அத்துடன்,தமிழர்களின் சாத்வீகப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றம் பெற நேர்ந்ததற்கான பின்னணியையும் அவர் விளக்கினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறி ஜெயவர்தன பல்கலைகழகத்தின் விரிவுரையாளர் தம்பர அமில தேரர் ,ரவுப் ஹக்கீமின் இந்தப் புத்தகத்தைப் வாசித்த பிறகு அவரைப்பற்றி தனக்கு இருந்த மனப் பதிவு முழுவதும் மாறிவிட்டது.-என்றார்.

அத்துடன்,இந்த நூல் தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என வேண்டுகோள் ஒன்றையும் முன் வைத்தார்.

இந்த நிகழ்வில் பங்களாதேசைச் சேர்ந்த பேராசிரியர் இம்தியாஸ் அஹம்மதுவும் உரையாற்றினார்.முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் இதில் கலந்துகொண்டார்.

UDA_1031_Fotor UDA_1026_Fotor UDA_1050_Fotor UDA_1023_Fotor