யுத்தகளத்தில் இடம் பெற்ற உயிரிழப்புக்களை யுத்த குற்றமாக பார்க்க முடியாது. ஆனால் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை கொலை செய்திருந்தால் அல்லது கடத்தி கொலை செய்திருந்தால் அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையில் ஆராயப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனராட்ன தெரிவித்தார்.
ஐ.நா.அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதுடன் அது குறித்து அமைச்சரவை விரிவாக ஆராயும். அதில் எவற்றை ஏற்றுக்கொள்வது, எவற்றை நிராகரிப்பது என்பது குறித்து அரசாங்கம் அதன் பின்னரே தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட் டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
கேள்வி:- வடக்கு மாகாணத்துடன் இணைந்து உள்ளக விசாரணை மேற்கொள்ளப்போவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார் இது குறித்து ?
பதில்:- இந்த ஜீ.எல். பீரிஸ் தான் நாட்டுக்கு சமஷ்டியை வழங்கவேண்டுமென்று கூறி தாமரைப்பூவை ஏந்திக்கொண்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவர். இன்று இனவாதத்திற்காக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கின்றார். எவ்வாறு தான் அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றுகின்றனரோ தெரியவில்லை.
வடக்கில்தான் இறுதி யுத்தம் நடந்தது. எனவே வட மாகாணசபையையும் இணைத்துக்கொண்டு உள்ளக விசாரணை செய்வதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. இதேவேளை சர்வதேச தரம் வாய்ந்த சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்ளக விசாரணையை மேற்கொள்ளுவது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே ஐ.நா.வின் அறிக்கை வந்ததும் தனது நிலைப்பாட்டை எடுப்போம்.
கேள்வி:- வடமாகாணசபையை இணைத்துக்கொண்டு உள்ளக விசாரணையை மேற்கொள்வதாக ஐ.நா. விற்கு ஏற்கனவே அறிவித்துள்ளீர்களா?
பதில்:- முதலில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை வெளிவரவேண்டும். அது ரகசிய அறிக்கையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைக்கப்படும். அந்த அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதுடன் அது குறித்து அமைச்சரவை விரிவாக ஆராயும்.
அதில் எவற்றை ஏற்றுக்கொள்வது, எவற்றை நிராகரிப்பது என்பது குறித்து அரசாங்கம் அதன் பின்னரே தீர்மானம் எடுக் கும். அவ்வாறு தீர்மானம் எடுத்த பின்னர் நாம் உள்ளக விசாரணை மேற்கொள்ளும் முறை குறித்து செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரின் போது அறிவிப்போம். இது தான் எமது நிலைப்பாடாகும்.
கேள்வி:- உள்ளக விசாரணையூடாக இராணுவ வீரர்களை சிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றதே?
பதில்:- யுத்தத்தின் போது இடம் பெற்ற உயிரிழப்புக்கள் யுத்தகுற்றமாகாது. அவ்வாறு அவற்றை யுத்தகுற்றமாக பார்த்தால் யுத்தம் செய்ய முடியாது. எனவே யுத்த களத்தில் இடம் பெற்ற உயிரிழப்புக்களை யுத்த குற்றமாக பார்க்க முடியாது. ஆனால் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை கொலை செய்தால் அல்லது கடத்தி கொலை செய்திருந்தால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.
அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையில் ஆராயப்படும். குறிப்பாக றக்பீ வீரர் தாஜுதீனின் கொலை
தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் யுத்தகாலத்தில் இடம் பெற்ற உயிரிழப்புக் களுக்காக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்த
முடியாது.