ரிசாத் பதியுதீனின் முகத்திரையை கிழித்து வீசுவேன் : ரவூப் ஹக்கீம் காட்டம் !

 

 அஹமட் இர்ஸாட் , இஸ்மாயில் முபாறக்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக மிகப் பெரும் சதியை குருநாகல் மாவட்டத்தில் அரங்கேற்றிய ரிசாத்பதியுதீனுக்கு விரைவில் மருந்து கட்டுவேன்-அவரது முகத்திரையை கிழித்து வீசுவேன் என்று சிறிலங்கா முஸ்லிம்காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவ்ப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர்ஷாபி ரஹீமை ஆதரித்து மல்வானையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதேஅமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு மேலும் கூறுகையில்,

unnamed (1)_Fotor

 முஸ்லிம் காங்கிரசுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலே உள்ள உறவில் பாரிய விரிசல் ஒன்றுஏற்படும்வகையில் மிக மோசமான சம்பவம் ஒன்று நடந்தது.ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் வைத்தே எமக்கு எதிரான  சதி அரங்கேற்றப்பட்டது.

 முஸ்லிம் காங்கிரசின் ஊடாக  அரசியலுக்கு  வந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று தானே  முஸ்லிம்களின் தேசியதலைவர் என்று கூறிக் கொண்டு திரியும் ரிசாத் பதியுதீன்தான் இந்தச் சதியைச் செய்தவர்.ஐ.தே .க -முஸ்லிம்காங்கிரஸ் உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கு இதைவிடவும் மிகவும் மோசமான சம்பவம் இருக்க முடியாது எனச்சொல்லும் அளவுக்கு அந்தச் சம்பவம் அமைந்தது.

 அவருக்கு  சரியான மருந்து கட்டாமல்  நான் விடமாட்டேன்.குருநாகல் வைத்து ஐக்கிய தேசிய கட்சிக்கும் இவருக்கும் சேர்த்துத்தான் அந்த மருந்தைக் கட்டுவேன்.

 ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து  குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு எமது கட்சியின் வேட்பாளர் ஜவாஹர் ஷாவின் பெயர் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

 சிறிகொத்தாவில் இருந்து இரவு 3 மணிக்கு நாங்கள்  வந்த பிறகு  ஜவாஹர் ஷாவின் பெயரை அழித்துவிட்டு  அவரதுகட்சியின் சார்பில் ஒருவரின் பெயரை ரிசாத் சேர்த்துள்ளார்.

 இது அறிந்து நான் ரணில் விர்கமசிங்கவிடம் முறையிட்டேன். அவருக்கும் தெரியாமல் ஐக்கிய தேசிய கட்சியின் சில நிர்வாகிகள் சிலரின் உதவியுடன் இந்தச் சதி நடந்து இருக்கின்றது.அது மிகப் பெரிய தவறு என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.

  ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவைப்போல் நேர்மையான ஓர் அரசியல்வாதியை எனது வாழ்வில் நான்கண்டதில்லை.அவரிடம் இருந்து ஓர் உத்தரவாதம் எடுப்பது கல்லில் நார் உரிப்பது போன்றது. வாக்களித்தால் அதைக்காப்பாற்றாமல் விடமாட்டார்.அப்படிப்பட்டவரின் பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் ரிசாத் பதியுதீன் செயற்பட்டுள்ளார்.

 ஐக்கிய தேசிய கட்சியை வெல்ல வைப்பதற்காக இரண்டு தடவைகள் அமைச்சுப் பதவிகளைத் தூக்கி வீசியவன் நான்.அப்படிப்பட்ட எனக்கு இதைவிடவும் பெரிய அவமானத்தை ஐக்கிய தேசிய கட்சியால் செய்ய முடியாது.

 வெறும் 25ஆயிரம் வாக்குகளைக் கொண்டுள்ள ஒரு சில்லரைக் கட்சி மிகப் பெரிய வாக்குப் பலத்துடன் உள்ள எமதுகட்சியை அவமதிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் இடங்கொடுக்கக்கூடாது.

இந்தச் சதிக்குத்   துணையாக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாகிகள் யார் என்பதை அக்கட்சி விசாரணைகள் செய்து வெளிப்படுத்த வேண்டும்.

 அது மாத்திரமன்றி இதற்கு நட்டஈடாக எமக்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்று வழங்கப்பட வேண்டும். அரசியல்வங்குரோத்து நிலையை அடைந்துள்ள ரிசாத் இது தொடர்பில் மிகவும் கேவலமான கதையைச் சொல்லித்திரிகின்றார்.நான் தான் ஜவாஹர் ஷாவின் பெயரைத் தூக்கச் சொன்னேன் என்று கதை அவிழ்த்துவிட்டுள்ளார்.

 குருநாகல் மாவட்டத்தில் இரண்டு முறைகள் மகான சபைத் தேர்தலில் வெற்றி பெற்று அங்கு நல்ல பல சேவைகளைச்செய்து அதிக செல்வாக்குடனும் அந்த மாவட்ட முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்குகிற தகுதியுடனும் இருக்கும்ஜவாஹர் ஷாவின் பெயரை நானே நீக்கச் சொன்னேன் என்றால் நம்பக்கூடிய கதையா?

 சினிமாவில் வருகின்ற கோமாளி நடிகர் வடிவேலின் நிலைக்கு அவர் சென்றுவிட்டார்.இவ்வளவு காலமும் மஹிந்தவுக்கு கூஜாத் தூக்கி பசிலின் எடுபிடியாக இருந்து மைத்திரி வெல்லப்போகிறார் என்று தெரிந்தவுடன் அங்கு ஒட்டிக்கொண்ட ரிசாத் இன்று நேர்மையாக அரசியல் செய்யும் எம்மை அவமதித்துத் திரிகின்றார்.

 குருநாகல் மாவட்டத்தில் உறுதிசெய்யப்பட்ட எமது ஆசனம் பறிக்கப்பட்டு இருக்கின்றது.அந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற வேண்டும் என்று எல்லோரையும் விட நாமே அதிகம் விரும்புகிறோம். நாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் நேர்மையாக அரசியல் செய்கின்ற கட்சி.

 நாம் இல்லாமல் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை நாம் உருவாக்குவோம்.10 ஆசனங்களைப்பெற்று மிகப் பெரும் சக்தியாக நாம் மாறுவோம்.அப்போது ரிசாத் பதியுதீனின் முகத் திரையைக் கிழிப்போம் என்றார்.