” நாட்டுக்கும் தேசத்துக்கு வித்தியாசம் தெரியாத அரசியல்வாதிகள் பலர் உள்ளனர் ” !

aaa-e1423606963502

 

ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்ற எமது கட்சியின் கொள்கையில் தேசம் என்பதை தனிநாடு என்ற ரீதியில் சில அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் திரிபுபடுத்திக் கூறி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திங்கட்கிழமை (03) தெரிவித்தார்.

ஒரு நாடு இரு தேசம் என்பது வெற்றுக் கோஷம் எனவும் அது அர்த்தமில்லாது எனவும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியிருந்தார். இந்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இது அடிப்படையில் நேர்மையில்லாத பிரசாரம். இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்றது. இலங்கை அரசாங்கம் ஒரு நாடு, ஒரு தேசம் என்பதை வலியுறுத்தி வந்தது. பலாலி வீதிச் சந்தியில் பல காலங்களாக அந்த வாசகம் காணப்பட்டது.’ என்றார்.

‘நாட்டுக்கும் தேசத்துக்கு வித்தியாசம் தெரியாத அரசியல்வாதிகள் பலர் உள்ளனர். அதில் தமிழ் அரசியல்வாதிகள் அதிகம் உள்ளனர். சட்டத்தரணிகளுக்கு இது தொடர்பில் நன்றாகத் தெரிந்தும் அவர்களும் தேசத்தை நாடு என்றுரைக்கின்றனர். இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். மக்களை தொடர்ந்தும் முட்டாளாக்கி அவர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியம் என்ற பெயரில் கட்சியை வைத்து தேசம் என்பதை இல்லையென்கின்றனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுகின்றது. எமது கொள்கைக்கு முரணாக நாங்கள் சொல்கின்றோம் என்பது அப்பட்டமான பொய். தனிநாடு என்ற கோட்பாட்டின் கீழ் தீர்வை எட்ட முடியாத நிலையில், கட்சியின் யாப்பை சுயநிர்ணய உரிமை, தேசம் என்ற ரீதியில் கொண்டுவந்துள்ளோம். இது பலருக்குத் தெரியும். தெரிந்தும் ஞாபகமறதியில் கதைக்கின்றனர்’ என்று அவர் மேலும் கூறினார்.