இருபது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தாருங்கள். 2016 இல் தீர்வைத் தருகிறோம் என்ற பாணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கும் கருத்து மீண்டும் ஒரு தடவை தமிழர்களை உசுப்பேத்தி, நம்பவைத்து வாக்குகளைச் சுரண்டும் தந்திரமின்றி வேறில்லை என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஊடகவியலாளருமான என்.வித்தியாதரன் குற்றம் சுமத்தினார்.
2016 இல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான தனது திட்டம், தந்திரோபாயம், உத்தி குறித்தெல்லாம் வெளிப்படையாக எதுவும் சொல்லாமல் மீண்டும் ஒரு தடவை ஏமாற்று வாக்குறுதிகள் மூலம் பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்ற அவர் எத்தனிக்கின்றார்.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் அந்தக் கட்சியின் சார்பில் சுயேச்சைக் குழுவாக சிலந்திச் சின்னத்தில் போட்டியிடும் அணியின் தலைமை வேட்பாளரான அவர், இவ் விடயம் குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு,
பாராளுமன்றக் கதிரைகளை அடையும் நோக்கோடு தமிழர்களுக்குத் தனிநாடு என்ற உசுப்பேத்தலை எழுபதுகளில் முன்வைத்த மிதவாதத் தலைவர்கள், அந்த இலக்கை அடைவதற்காக எதுவுமே செய்யவில்லை. வெற்றுக் கோஷங்களை முன்வைத்து, இளைஞர்களையும் மக்களையும் தூண்டிவிட்டு தாங்கள் பதவி சுகம் அனுபவித்தமையைத் தவிர. அப்போது முதல் ஒரு சில தமிழ்த் தலைவர்கள் தாங்கள் ‘வாழ்நாள் எம்.பிக்களாக’ பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருப்பதற்காக ஒவ்வொரு தடவையும் பாராளுமன்றத் தேர்தல் வருகின்றபோதெல்லாம் ‘ஐக்கியம்’, ‘ஒற்றுமை’, ‘ஒன்றுபட்ட சக்தி’ என்றெல்லாம் பேசுவார்கள். இது வழமை இதைத்தான் இப்போதும் செய்கின்றார்கள்.
தங்களுக்குள் ஒன்றுபட்டு ஓர் அரசியல் கட்டமைப்பையே நிறுவி அதனைக் கொண்டு நடத்த லாயக்கற்றவர்கள் மக்களைப் பார்த்து நீங்கள் ஒன்றுபட்டு எங்களுக்கு வாக்களியுங்கள், தீர்வைத் தருகிறோம் எனப் பூச்சாண்டி காட்ட முயல்கிறார்கள். எழுபதுகளின் இறுதியிலே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டம் ஒன்றில் பேசிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம், ‘அடுத்த மேதினம் தமிழீழத்தில்’ என்று அறிவித்தார். அதேபாணியில் இப்போது சம்பந்தன் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் – 2016 இல் – தீர்வு என அறிவிக்கின்றார்.
ரணில், சந்திரிகா, மைத்திரி அணியுடன் சேர்ந்து ஜனாதிபதி பதவியிலிருந்து மஹிந்தவை அனுப்பும் முயற்சியில் சம்பந்தனும் ஈடுபட்டார் என்பது உண்மையே. அவர் அன்று என்ன முடிவை எடுத்திருந்தாலும், அதற்கு முன்னரே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புவதில் தென்னிலங்கையுடன் ஒன்றுபடுவது என்ற தீர்மானத்தை வடக்கு, கிழக்குத் தமிழர்கள் எப்போதோ – சம்பந்தன் அணி அந்தத் தீர்மானத்தை அறிவிப்பதற்கு முன்னரே – எடுத்துவிட்டனர்.
ஆனால், இப்போது தென்னிலங்கை நிலைமை மாறிவிட்டது. ரணில் – மைத்திரி தரப்புக்கு பெரும் சவால் விடும் அரசியல் தலைமையாக மீண்டும் மஹிந்த கிளம்புகின்றார் என்று தென்னிலங்கை செய்திகள் கூறுகின்றன. அதை மீறி ரணில் – மைத்திரி தரப்பு பாராளுமன்ற தேர்தலில் முன்னணிக்கு வந்தாலும் அந்தத் தரப்பினர் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையைத் திரட்டி அரசு அமைப்பது கூட கஷ்டமான விடயம் என்றே ஆரூடம் கூறப்படுகின்றது.
தமிழர்களுக்கு இணக்கமாக ஒரு தீர்வு எட்டப்பட வேண்டுமானால் அதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பு மாற்றப்பட அல்லது திருத்தப்பட வேண்டும். தனித்துப் பெரும்பான்மை பெறவே அல்லாடும் ஓர் அரசியல் தலைமையைத் தென்னிலங்கையில் வைத்துக்கொண்டு அரசமைப்பை மாற்றுவதற்கான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை – அதுவும் கடும் இனவாதப் போக்குடன் மஹிந்த தரப்பு நாடாளுமன்றத்தில் கணிசமான இடத்தைப்பெறலாம் என்று கணிக்கப்படும் சூழலில் – பெறுவது எங்ஙனம்?
அதைப்பற்றியெல்லாம் எதுவும் விளக் கம் தராமல் இருபது எம்.பிக்களைத் தாருங்கள், அடுத்த ஆண்டில் தீர்வு என்ற சம்பந்தனின் பேச்சு மந்திரத்தில் மாங்காய் பறிக்கும் சுத்துமாத்தின்றி வேறில்லை.
மீண்டும் ஒரு தடவை பொதுத் தேர்தலில் மக்களைச் சந்திக்கும் உத்தேசம், – தேவை, -எதிர்பார்ப்பு – வாய்ப்பு – சம்பந்தனுக்கு இல்லாமல் இருக்கலாம். அதனால்தான் திரும்பவும் மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்கவேண்டி நேராது எனக் கருதி எதுவும் பேசலாம், எப்படியும் வாக்குறுதி வழங்கலாம் என்று நினைத்து இப்படி ஓராண்டு காலக்கெடு குறிப்பிட்டு, நம்பிக்கை ஊட்டி, இந்தத் தடவை மீண்டும் வாக்குத்திரட்டி பதவிகளைப் பிடித்துக்கொள்ளலாம் என்று எண்ணிக் கருமமாற்றுகின்றார் போலும் அவர். ஆனால் மீண்டும் ஒரு தடவை பொதுத்தேர்தலில் பொதுமக்களைத் தாங்கள் சந்திக்கவேண்டியிருக்கும் என நம்பும் ஏனைய கூட்டமைப்பு தலைவர்கள் இந்த 2016 காலக்கெடு விடயத்தை அமர்த்தி – அமுக்கி – வாசிக்கின்றார்கள். அது குறித்துப் பேசுவதில்லை.
ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ள விடுதலைப் புலிகளை தமிழ்க் கூட்டமைப்பில் சேர்த்தால் தென்னிலங்கையில் இனவாதம் தமிழருக்கு எதிராகக் கிளம்பிவிடும். மஹிந்த ராஜபக்ஷ அதையே இனவாதமாக்கி தென்னிலங்கையில் விஸ்வரூபம் எடுத்து விடுவார் என்றெல்லாம் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறினார்கள்.
ஆனால் புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்பியமையை மஹிந்த உட்பட தென்னிலங்கையில் யாரும் இதுவரை இன வாத மாக்கவில்லை. ஒட்டுமொத்த தென் னிலங்கையே புலிக ளின் அந்த முடிவை வரவேற்கின்றது. மாறாக கூட்டமைப் பின் தேர்தல் விஞ்ஞா பன அறிவிப்புத்தான் தென்னி லங்கையில் பேரினவாதக் கிளர்ச் சியைத் தூண்டிவிட்டி ருக்கின்றது. – என்றார் அவர்.