முஸ்லிம் கூட்டமைப்பு என்பது, இன்னுமொரு ‘அரசியல் கூத்துக்கான அமைப்பாக’ இருக்கக் கூடாது!

                                     முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பு

 

உலக வரலாற்றில் செய்ய முடியாதது – நடக்க மாட்டாது என்று எதுவும் இல்லை. முயற்சிதான் அதை தீர்மானிக்கின்றது என்பதை முஸ்லிம் கூட்டமைப்பின் உருவாக்கம் இயற்பியல் ரீதியாக நிறுவியிருப்பதாக தெரிகின்றது.

 

நிகழ முடியாத அற்புதங்கள் சிலவேளைகளில் நிகழ்ந்து விடுவதுண்டு. சாத்தியமே இல்லை எனக் கூறப்பட்ட எத்தனையோ காரியங்கள் காலம் வரும்போது கூடிவருவதும் உண்டு. அவ்வாறு நடந்து விட்டால், அது யாருக்கு நன்மை பயக்குமோ அந்த மக்கள் கூட்டம் அதனால் பெரிதும் மனத் திருப்தியும் மகிழ்ச்சியும் கொள்வார்கள். ஆனால் இது யாருடைய பிழைப்பின் உண்மைத்தன்மையை, சுயரூபங்களை வெளியில் கொண்டு வருமோ அவர்களுக்கு பெரும் ஆத்திரத்தையும் வெஞ்சினத்தையும் உண்டுபண்ணும். முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட விடயத்திலும் இதனை காண முடிகின்றது.

 

‘மனிதன் இயற்கையிலேயே ஒரு அரசியல் விலங்கு’ என்று கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில் சொன்னார். ஆனால், ஐந்தறிவு படைத்த விலங்குகளிடையே இருக்கின்ற ஒற்றுமை கூட இலங்கை முஸ்லிம்களிடையே இல்லை என்ற ஒரு கவலை முஸ்லிம் சமூக சிந்தனையாளர்களுக்கு ஏற்பட்டு கனகாலமாயிற்று. மதத்துக்கு எதிராக யாராவது அடக்குமுறையைப் பிரயோகித்தால் அதற்கெதிராக எழுந்து நிற்பதற்காக மட்டுமே முஸ்லிம்கள் ஒன்றுபடுகின்றார்கள். மற்றப்படி யார் என்ன சொன்னாலும், முஸ்லிம்கள் சமூக, அரசியல் விடயங்களில் பிளவுபட்டு துண்டங்களாகி ஒற்றுமையற்று இருக்கின்றார்கள் என்பதே நிதர்சனமாகும்.

 

இந்த ஒற்றுமையின்மையின்; மேல் பெருந்தேசிய சக்திகள் பிரித்தாளும் அரசியலைச் செய்து கொண்டிருக்கின்றன. சியோனிச மற்றும் வெளிநாட்டு கும்பல்கள் இதில் தீ வளர்த்துக் கொண்டிருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி சில முஸ்லிம் கட்சிகளும் கிட்டத்தட்ட எல்லா அரசியல்வாதிகளும் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த உண்மை பல வருடங்களுக்கு முன்னரே உணரப்பட்டது. ஆனால் பிரித்தாளும் அரசியல் போதையில் முஸ்லிம் சமூகம் மூழ்கித் திளைத்திருந்தமையால், பிரிந்து நிற்கின்ற ஒவ்வொரு அரசியல்வாதியும் அவரை வழிபடுகின்ற ஆதரவாளர்களும் மந்திரித்து விடப்பட்டவர்கள் போல தமது கொள்கையே சரியென திரும்பத்திரும்ப பிதற்றிக் கொண்டே இருந்ததால் அரசியல் ரீதியாக ஒன்றுபடமுடியவில்லை.

 

தமிழர் முன்மாதிரி

 

தமிழ் மக்கள் அறுபது வருடங்களாக போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டம் என்பது அறிக்கை விட்டுக் கொண்டு வீராப்பு பேசிக் கொண்டு வாழாவிருந்த போராட்டம் அல்ல. மாறாக, பல்லாயிரக்கணக்கான உயிரையும் உடலையும் பலிகொடுத்த 30 வருட ஆயுத மோதலையும் உள்ளடக்கியது.
தமிழர்கள் எல்லோரும் சரி பிழைகளுக்கு அப்பால் ஒற்றுமையாக நின்று, போராடினார்கள். எந்தளவுக்கு என்றால், தமிழர்களின் ஒற்றுமையைப் பார்த்து முஸ்லிம் இளைஞர்களும் அவர்களது போராட்டத்தில் பங்கெடுக்குமளவுக்கு நிலைமைகள் இருந்தன. இப்போது ஆயுத மோதல் முடிவடைந்து விட்டாலும் அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது என்று யாராவது கூற முடியுமா?

 

ஆனால், ஆயுத மோதல் முடிவடைவதற்கு முன்னரே தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்பட்டு தேசிய அரசியல் நீரோட்டத்திற்குள் ஊடுருவ வேண்டியதன் அவசியத்தை தமிழ் சமூகம் பட்டறிந்து கொண்டது. இதனால் 2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்;டது. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுக் கருத்துக்களும் வேறு கூட்டணிகளும் தோற்றம் பெறுவதுபோல் தெரிந்தாலும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதில் அவர்களிடையே முரண்பாடுகள் இல்லை என்பதையும் அந்த இலக்கை அடைவதற்கான வேறு வேறு வழிமுறைகளே இவை என்பதையும் ஆறாம் அறிவைப் பயன்படுத்துவோர் அறிந்து கொள்வார்கள்.

 

சிறுபிள்ளை அரசியல்

இந்த பின்புலங்களில் நின்று முஸ்லிம்களின் அரசியலைப் பார்த்தால், தாயின் முந்தானைச் சேலையை பிடித்துக் கொண்டு திரியும் ‘பால்குடி மறவா’ சிறுவனின் ஞாபகமே ஏற்படுவதுண்டு. அதாவது, கிட்டத்தட்ட நூறு வருட வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் அரசியல் இன்னும் பக்குவமடையாத, சிறுபிள்ளைத்தனமான அரசியல் பண்போடுதான் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

 

இளைஞர்களை ஒற்றுமைப்படுத்தி அதன்மூலம் மக்களை ஒருவழியில் பயணிக்கச் செய்வதற்கான இயக்கமாகவே அஷ்ரஃபினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கருத வேண்டியிருக்கின்றது. தனித்துவ அடையாள அரசியல் என்ற கூடைக்குள் பெருமளவான முஸ்லிம்களை அவர் கொண்டு வந்தார். நாட்டில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான முஸ்லிம்கள் அவரது கொள்கைக்குப் பின்னால் நின்றார்கள்.

 

அவரது மரணத்தின் பின்னர் இந்த ஒற்றுமைக்கு கண்பட்டுப் போனது. அவர் சொன்னதுபோல கருத்து வேறுபாடு எனும் கறையான்கள் வந்து அரிக்கத் தொடங்கின. முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக றவூப் ஹக்கீமை தேர்ந்தெடுத்து, தோழ்மீது சுமந்தவர்களே அவர் தலைமைத்துவத்திற்கு பொருத்தமற்றவர் என்று குற்றம்சாட்டி, கட்சியைவிட்டும் வெளியேறினர். அதன்பிறகு அஷ்ரஃபின் பாசறையில் வளர்ந்தவர்களால் பல முஸ்லிம் கட்சிகள் உருவாக்கப்பட்டன.

 

தமிழ் மக்களின் நலனுக்காக, ஒருகாலத்தில் ஆயுத இயக்கங்களாக அறியப்பட்ட அமைப்புக்கள் கூட ஒரு கூட்டமைப்பான இணைந்து இயங்கிக் கொண்டிருந்த சமகாலத்தில் அஷ்ரஃபின் வழிவந்தவர்கள் தனித்தனி முகாம்களில் நின்றுகொண்டு அரசியல் செய்யும் நிலை உருவானது. ஆனால் இத்தனை அரசியல் கட்சிகள் இருந்தும் கூட, முஸ்லிம் சமூகத்தை அஷ்ரப் நிறுத்திவிட்டுப் போன இடத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட முன்கொண்டு செல்வதற்கு றவூப் ஹக்கீமினாலோ ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளாலோ முடியவில்லை என்பது ரகசியமல்ல.

 

உண்மையாகச் சொல்லப்போனால், முஸ்லிம் காங்கிரஸ் என்ற தனித்துவ கட்சி உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்ததை விட மோசமான அரசியல் கலாசாரமும் கையறுநிலையுமே முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. இலட்சங்களையும் கோடிகளையும் எழுதி மக்களுக்கு ஆசைகாட்டிவிட்டு, கடைசியில் பூச்சியத்தால் பெருக்கி விடுகின்ற கேடுகெட்ட அரசியலையே முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இன்றுவரை செய்து கொண்டிருக்கின்றனர்.

 

கூட்டமைப்பின் பலம்

இந்தப் பின்னணியில், முஸ்லிம் கட்சிகளிடையேயான இந்த பிளவும், கூட்டு உடன்பாடின்மையும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை சாத்தியமற்றதாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும், பெருந்தேசியவாதம் இந்;த பிளவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றது என்பதையும் கடந்த 17 வருடங்களில் முஸ்லிம்கள் நல்ல தெளிவாக பட்டுணர்;ந்து கொண்டிருக்கின்றனர்.

 

சமகாலத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் ஆயுதங்களால் கூட செய்ய முடியாத பல விடயங்களை கூட்டமைப்பு என்ற ஒன்றிணைந்த பலம் சாதித்திருக்கின்றது என்பதை முஸ்லிம்கள் கண்கூடாக கண்டனர். முஸ்லிம் கட்சித் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் போல பட்டம் பதவிகளுக்காக பிழைப்புவாத அரசியல் நடத்திக் கொண்டு ஆளுக்கொரு நிலைப்பாட்டை எடுப்பதால் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதை சிவில் சமூகம் உணர்ந்து கொண்டிருக்கின்றது.

 

குறிப்பாக இனமோதல் காலத்தில் இருந்து இனப் பிரச்சினை தீர்வு, சட்டத் திருத்தங்கள், தேர்தல் முறைமை மாற்றம், அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான இடைக்கால அறிக்கை, இனவாத செயற்பாடுகள் வரை கிட்டத்தட்ட எல்லா விடயங்களிலும் முஸ்லிம்கள் சந்தித்துள்ள இழப்புக்களை பார்க்கும் போது, தமிழ் கூட்டமைப்பு போல முஸ்லிம்களுக்காக ஒரு கூட்டமைப்பு இல்லையே என்ற மனக் குறை ஏற்பட்டிருந்தது. ஆனால், பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதும் மணி கட்ட முடியாத பூனைகளும் பெரும் சிக்கலாக இருந்தன.

 

பூனைக்கு மணிகட்டுதல்

இந்நிலையில், மு.கா.வில் இருந்து எம்.ரி.ஹசன்அலி, பசீர் சேகுதாவூத் அணியினர் பிரிந்து செயற்படத் தொடங்கிய பிறகு களநிலையில் ஒரு சடுதியான சாதகநிலை ஏற்பட்டது எனலாம். அந்த அணியினர் ஒரு கூட்;டமைப்பை நிறுவுவதற்கான எண்ணத்தை வெளிப்படுத்தியதுடன் சில முயற்சிகளையும் மேற்கொண்டனர். பல வருடங்களாக முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றியும் முஸ்லிம்களுக்காக ஒரு அரசியல் கூட்டு உருவாக வேண்டுமென்றும் நீண்டகாலமாக எழுதியும் பேசியும் வந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முக்கிய ஊடகவியலாளர்கள் சிலரும் தமது பங்களிப்பை வழங்கினார்கள்.

 

முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு ஹசனலி உள்ளடங்கலாக பல தரப்பினரும் அழைப்புக்களை விடுத்தனர். பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகளுடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. முஸ்லிம் கூட்டமைப்பு கோட்பாட்டுக்கு ஆதரவாக ஒரு சமிக்கையையேனும் மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் வெளிப்படுத்தியிருக்காத காரணத்தினால், அக்கட்சியுடன் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் விரிவான பேச்சுவார்த்தை எதனையும் நடத்தவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

 

அந்த வகையில் மக்கள் காங்கிரஸிற்கு கூட்டமைப்பு அவசியமாக இருக்கவில்லை என்றாலும், அவ்வாறு ஒன்று உருவாக்கப்பட்டால் அதில் தமது கட்சி உள்ளடங்கியிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை றிசாட் பதியுதீன் எடுத்தார். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் ஏறுமுகத்தில் இருந்தபோதும,; திடீரெனச் சறுக்கின. தாம் உருவாக்க நினைக்கி;ன்ற அரசியல் கலாசாரத்தை மாமூல் அரசியல்வாதிகளுடனான இக்கூட்டு சாத்தியமற்றதாக்கி விடுமா என்று அக்கட்சி பயந்தது எனலாம். அத்துடன், கட்சி அங்கீகரிக்கப்பட்ட பின்னர் முதலாவது தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடவும் விரும்பியது. எனவே கூட்டமைப்பில் அக்கட்சி இடம்பெறவில்லை.

 

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியுடன் கடைசி வரையும் பேச்சுக்கள் இடம்பெற்றன. ஒரு கட்டத்தில் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு அதாவுல்லா விரும்பியிருந்தார். ஆனால், பின்னர் அவரது அரசியல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுத்த முடிவால் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளவில்லை.

 

கொள்கைப் பிரகடனம்

இந்தப் பின்னணியில் தேர்தல் ஒன்று நெருங்கி வந்தமையால் ஒரு கூட்டமைப்பை நிறுவுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மொஹிதீனின் சிந்தனையால் தோற்றுவிக்கப்பட்டு பலரது கைமாறி வந்து கடைசியாக, ஹசனலி–பசீர் அணியினரால் தம்வசப்படுத்தப்பட்டுள்ள ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றாக இணைந்து முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பை பிரகடனம் செய்திருக்கின்றன.

 

இம்மாதம் 10ஆம் திகதி கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, கூட்டமைப்பு பிரகடனம் செய்யப்பட்டதுடன் அதன் தலைவராக பங்காளிக் கட்சியான ஐ.ச.கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன்அலி அறிவிக்கப்பட்டார். அதேநேரம் 12 கொள்கைப் பிரகடனங்களை முன்னிறுத்தி செயற்படப் போவதாகவும் கூட்டமைப்பு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கின்றது.

 

முஸ்லிம்கள் தனியான இனம் என்பதையும் சுயநிர்ணயத்தையும் உறுதிப்படுத்தல், வடக்கு – கிழக்கு இணைப்பை நிராகரித்தல், அதிகாரப் பகிர்வை உள்ளுராட்சி சபைகளுக்கும் விஸ்தரித்தல், அரச உயர் நிர்வாக பதவிகளில் முஸ்லிம்களையும் நியாயமான வீதத்தில் நியமித்தல், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை தொடர்ந்து பேணுதல், மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், வடக்கு, கிழக்கில் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விடுவித்தல், முஸ்லிம்களை மீள்குடியேற்றல், விகிதாசார அடிப்படையிலான காணிப்பகிர்வு, அம்பாரை மாவட்டத்திற்குள் போதுமான நிலத்துடன் இன்னுமொரு மாவட்டத்தை உருவாக்கல் போன்றவ இவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

 

இவ்வாறாக, முஸ்லிம்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த ஒரு விடயம் நடைபெற்றிருக்கின்றது. அதுவும், ஒரு கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் இயங்க ஆரம்பித்திருக்கின்றமை வரவேற்கத்தக்கதாகும். இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது என்பதுடன் ஏனைய அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள வேண்டும். அதன்மூலம் இன்னும் சரியாக இதனை வழிப்படுத்த முடியும்.

 

தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பெரிய கட்சியான தமிரசுக் கட்சியின் சின்னத்தில் அவர்கள் போட்டியிடுவது போன்ற ஒரு விடயமே, முஸ்லிம் கூட்டமைப்பு மயில் சின்னத்தில் களமிறங்கியுள்ள விடயமும் என்பதை மறந்து அடிப்படையற்ற விதத்தில் விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல. கூட்டமைப்பை விரும்பாதவர்கள், கூட்டமைப்பு உருவானால் தமது அரசியல் வியாபாரங்களை இழுத்துமூட வேண்டி வருமோ என அஞ்சுகின்றவர்களின் உள்மனக் கோபத்தை வெளிப்படுத்துவதாகவே இவ்வாறான விமர்சனங்களை கணிப்பிட வேண்டியிருக்கின்றது.

 

அதற்காக றிசாட் பதியுதீன் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் என்றோ, பசீர் சேகுதாவூத் நூறுவீதம் சரியானவர் என்றோ ஹசன்அலி வானத்தில் இருந்து இறங்கியவர் என்றோ சொல்ல வரவில்லை. அதேபோல் அரசியல் தவறுகளைச் செய்தவர்கள் யாரும் இக் கூட்டமைப்பில் இல்லை என்று சொல்லவும் முடியாது. இந்தக் கூட்டமைப்புக்கு முன்னதாக மிக மோசமான அரசியல் கலாசாரத்திற்குள் ஊறிக் கிடந்தவர்கள்தான் இன்று இந்த கூட்டினை தோற்றுவித்திருக்கின்றார்கள் என்பதை மறுக்கவும் இயலாது.

 

சாதகமான களம்

ஆனால் எந்த முஸ்லிம் அரசியல்வாதிகளையும் ஒருபுள்ளியில் சந்திக்க வைக்கவே முடியாது என்ற கற்பிதத்தையும் கூட்டமைப்பு உருவாகவே முடியாது என்ற முன்னறிவிப்புக்களையும் மீறி இதை சாத்தியப்படுத்தியிருப்பது, ‘ஒன்றுமில்லாதிருப்பதை என்பதை விட ஏதாவது இருப்பது சிறப்பானது’ என்ற ஆங்கிலப் பழமொழியை ஞாபகப்படுத்துகின்றது.

 

மிக முக்கியமாக கூட்டமைப்பு உருவாகி விட்டது என்பதற்காக எல்லாம் நடந்து விட்டது என்றோ, முஸ்லிம்களின் அபிலாஷைகள் நிறைவேறி விடும் என்றோ கருதுவதற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை அடிக்கோடிட்ட வார்த்தைகளால் குறிப்பிட விரும்புகின்றேன். இரண்டு மூன்று கட்சிகள் ஒரு ஒப்பந்தம் செய்வதையும் கொள்கைப் பிரகடனம் செய்வதையும் வைத்துக் கொண்டு 100 புள்ளிகள் போட்டுவிடவும் முடியாது.

 

இப்போது மக்கள் சார்பு அரசியல் களம் என்பது கூட்டமைப்பு என்ற கோட்பாட்டுக்கு மிகவும் சாதகமாக இருக்கின்றது. கூட்டமைப்பு பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் பிரதான முஸ்லிம் கட்சியின் முக்கியஸ்தர் ஹனிபா மதனி தலைமையிலான ஒரு குழுவினர் தூய முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அணி என்ற பெயரில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளனர். மேலும் ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் கட்சியும் இளைஞர் அமைப்புக்களும் முன்வந்திருப்பதாக அறிய முடிகின்றது. எனவே இந்த களச்சூழலை ஹசன்அலி தலைமையிலான கூட்டமைப்பு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

சரி பிழைகளுக்கு அப்பால், முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பை எவ்வகையிலேனும் நிறுவியமை இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு மைற்கல்லாகும். ஆனால், சில அரசியல்வாதிகளால் நடப்பட்ட அடிக்கல் போல அதையும் அதனது நோக்கங்களையும் காலவோட்டத்தில் மறந்து விடக் கூடாது. பழைய பாணியில் கேடுகெட்ட அரசியல் செய்வதற்கான ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட கூடாரமாக கூட்டமைப்பை பயன்படுத்தக் கூடாது. சீன தயாரிப்பான கைத்தொலைபேசியை ‘சைனா ஃபோன்’ என்று சொல்லி விற்பனை செய்வதை விட, அது ‘ஒரிஜினல் நொக்கியா ஃபோன்’ என்று விற்பது மிக மோசமான குற்றம் என்பதை கூட்டமைப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

அஷ்ரஃப், முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பிக்க போது இருந்த நிலையில்தான் கிட்டத்தட்ட முஸ்லிம்கள் இன்று இருக்கின்றார்கள். அவர் மரணித்த பின்னர் முஸ்லிம் அரசியல் பயணம் பின்னோக்கி நகர்ந்து ஆரம்பித்த இடத்தை அடைந்திருக்கின்றது. எனவே, தமது சுய விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நின்று முஸ்லிம்களின் அபிலாஷைகளை – முஸ்லிம்களின் அபிலாஷைகளை மட்டும் வென்றெடுப்பதற்கான தனித்துவ அடையாள வழித்தடத்தில் போராடும் ஒரு கட்டமைப்பாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இருக்க வேண்டும்.

 

முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அரசியல் அரங்கில் ஏற்பட்டிருக்கின்ற அலையைப் போல சில விமர்சனங்களும் சந்தேகங்களும் கூட மக்களிடையே ஏற்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் செயற்பாட்டை ஒழுங்கமைப்பதன் மூலம் இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து, மக்களை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். பெருந்தேசியத்திற்கு ஒத்து ஊதாது, யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கும் பின்னால் பயணிக்காது, முஸ்லிம் கூட்டமைப்பு தனக்கான வழியில் முன்னோக்கி பயணிக்குமாக இருந்தால், அதற்கு வெளியில் இருந்து அரசியல் செய்வது பெரும் சிரமமாகிப் போய்விடும். மறுபுறத்தில், கூட்டமைப்பு என்ற ஒரு நல்ல கோட்பாடு எவ்விதத்திலேனும் கறைப்படுத்தப்படுமாக இருந்தால் அதைவிட கேவலமான அரசியல் வேறொன்றும் இருக்காது.
முஸ்லிம் கூட்டமைப்பு என்பது, இன்னுமொரு ‘அரசியல் கூத்துக்கான அமைப்பாக’ இருக்கக் கூடாது!

 

– ஏ.எல்;.நிப்றாஸ் (வீரகேசரி 19.12.2017)