அரிசித்த தட்டுப்பாட்டுக்கு இனி முற்றுப்புள்ளி : அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

 

சுஐப் எம் காசிம்

அரிசித் தட்டுப்பாட்டை காரணம் காட்டி அரிசியைப் பதுக்கி வைத்து அதன் விலையை இனிமேல் அதிகரிக்காதவாறு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளாதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் சிந்தக்க லொக்கு ஹெட்டி தலைமையில் பாகிஸ்தான் மற்றும் பர்மாவுக்குச் சென்ற தூதுக்குழு அந்த நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடித்து விட்டு இன்று காலை நாடு திரும்பியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

பாகிஸ்தானிலிருந்து 25000 மெற்றிக் தொன் அரிசியையும் பர்மாவிலிருந்து 30000 மெற்றிக் தொன் அரிசியையும் இறக்குமதி செய்வதற்கு அந்த நாடுகளின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், இலங்கையிலிருந்து சென்ற அதிகாரிகளின் மட்டத்திலான தூதுக்குழுவின் முயற்சிகளுக்கு தமது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் முதல் வாரமளவில் பாகிஸ்தானிலிருந்து 25000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுமென அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

இன்று காலை நாடு திரும்பிய அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், இரண்டு நாடுகளிலுமுள்ள அதிகாரிகள் மட்டத்தில் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அவ்வவ் நாடுகளில் அரிசி மாதிரிகளைப் பெற்று தாங்களே சமைத்து சாப்பிட்டதாக தெரிவித்தார்.

அரிசியின் விலை தொடர்பில் அந்த நாடுகள் அந்த நாடுகள் சமர்ப்பித்த விலைப்பட்டியலை விட குறைந்த விலையில் தாங்கள் அரிசியை கோரியதனால் அதனை, அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதி கிடைத்த பின்னர், உரிய விலைக்கு தருவதாக அந்தந்த நாடுகளின் அதிகாரிகள் இலங்கைத் தூதுக்குழுவிடம் தெரிவித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.