கல்குடா எதனோல் தொழிற்சாலை தொடர்பாக பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன்…

அஸாஹிம்

கல்குடா எதனோல் தொழிற்சாலை நிதி அமைச்சின் கீழுள்ள ஏனைய திணைக்களங்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியுடனும் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும் என வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

கல்குடா எதனோல் தொழிற்சாலை கட்டடம் அமைப்பதற்கான அங்கீகாரத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபை வழங்கியுள்ளது. கட்டடம் கட்டுவதற்கு பிரதேச சபையில் அனுமதி கோரப்பட்டும் அனுமதி வழங்வில்லை.

ஒருவர் கட்டடம் கட்டுவதற்கு முறையாக விண்ணப்பித்து பதினைந்து நாட்களுக்குள் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் ஆனால் பிரதேச சபை ஒரு மாதமாகியும் அனுமதி வழங்கிவில்லை எனில் பாராளுமன்றத்தின் 15ம் சட்ட இலக்கத்தின் பிரகாரம் அவர்களே தானாக கட்டடத்தை கட்டுவதற்கு சட்டத்தில் இடமுள்ளது.

நிதி அமைச்சின் கீழுள்ள ஏனைய திணைக்களத்தின் அனுமதியுடனும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியுடனும் கட்டட உரிமையாளர் அனைத்து ஆவணங்களுடன் பிரதேச சபைக்கு கட்டட அனுமதி கோறி விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளார்.

பிரதேச சபை கட்டடம் அமைப்பதற்கு அனுமதி வழங்காமல் மாத்திரம் நடவடிக்கை எடுக்கலாமே தவிர வேறு எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆகவே மக்கள் பிரதிநிதிகள் பொதுநலநோன்பு வழக்கை தாக்கல் செய்யுங்கள் என்றார்.