புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கிய பெருமிதத்தில் நாங்கள் இருக்கின்றோம் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து ஓராண்டு நிறைவடையப் போவதையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்; அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அரசாங்க தகவல் திணைக்களத்தினூடாக தெரிவித்துள்ள செய்தி,

rauf hakeem
கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மூலம் பெற்ற நல்லாட்சியானது ஒரு வருட நிறைவை எட்டியுள்ள நிலையில், நிறைய மாற்றங்களை இந்த நாட்டில் சகல சமூகங்களும் திருப்திகொள்ளும் வகையில் புதியதோரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கிய பெருமிதத்தில் நாங்கள் இருக்கின்;றோம். எங்களுடைய அரசிற்கு ஒரு வருடம் நிறைவடைகின்ற நிலையில், நாங்கள் மிகுந்த திருப்தியோடு ஓர் யுகத்தை உருவாக்கியிருக்கிறோம் என மிக மகிழ்ச்சியோடு கூறிக்கொள்ளலாம்.

 
யுத்தத்திற்கு பின்னரான கடந்த ஆட்சி காலத்தில் நாள் தோறும் ஏதாவது ஓர் இடத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான சமய ரீதியான, இன ரீதியான வன்முறைச் சம்பவங்களும், அசம்பாவிதங்களும் இடம்பெறுகின்ற மிகவும் விசித்திரமான பயங்கரகரமான சூழலையே அனுபவித்தோம். ஆனால், இன்று இந்நிலைமை தலைகீழாக மாறி அவ்வாறான எந்தவொரு அசம்பாவிதங்களும் இடம்பெறாத ஒரு புதிய அமைதியான சூழலை எல்லோரும் அனுபவிக்கின்றோம்.

 
இணக்கத்தின் அடிப்படையிலான ஓர் அரசியல் கலாசாரத்தை இரண்டு பிராதானமான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற ஒரு தேசிய அரசியல் நிலவரம் நாட்டில் உருவாகி இருக்கிறது என்பது மாத்திரமல்லாமல், அபிவிருத்தியை கூட வெளிப்படையாக திறந்த அடிப்படையிலே எவ்வித ஒழிவு மறைவுமில்லாமல் தேவையற்ற ஊழல், கப்பம், நிதிமோசடி போன்ற விடயங்கள் இல்லாமல் புதியதொரு அபிவிருத்தி கலாசாரத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.

 

எமது இம் முயற்சிகளுக்கு மூலாதாரமாக அமைவது கடந்த வருடம் ஆரம்பித்த 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த சற்று கால எல்லை தேவைப்பட்டாலும் கூட, 19 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம், முதன் முறையாக இந்நாட்டில் நிறைவேற்று அதிகாரத்தை அனுபவித்த ஒரு ஜனாதிபதி தன்னுடைய சுய விருப்பத்திற்கிணங்க தன்னுடைய அதிகாரங்களை குறைத்துகொண்டது மாத்திரமல்ல, பாராளுமன்றத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தது.

 

எதிர்வரும் புதிய வருடத்தில் நல்லாட்சியில் மக்களுக்கு வழங்கி நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையிலும், எஞ்சியிருக்கின்ற அரசியல் யாப்புக்களில் திருத்தங்களை அமுல்படுத்துவதற்கான, முழு பாராளுமன்றத்தையும் அரசியல் யாப்பு சபையாக மாற்றி அதனூடாக இந்நாட்டுக்கு ஒரு புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகப்படுத்தி புதிய தேர்தல் முறையும், நிறைவேற்று ஜனாதிபதி முறையும் இல்லாமல் ஒழிக்கப்படுகின்ற புதிய யாப்பு திருத்தமும், இவ்வருடம் நடைமுறைப்படுத்த இருக்கின்றது. அதற்கு நாங்கள் எல்லோரும் கட்சிகளுக்கு மத்தியில் சமாந்தரமான பேச்சுவார்த்தைகளை நடத்திகொண்டிருக்கின்றோம்.

 
இந்நாடு பல வருட காலமாக அனுபவித்த பலவிதமான கஷ்டங்கள், துயரங்கள் அகன்று கடந்த ஒரு வருட காலத்திற்குள் புதியதொரு அரசியல் கலாசாரம் நிம்மதியோடு சமாதானமாக வாழ்கின்ற ஒரு சூழல், இனங்களுக்கிடையே ஒற்றுமை அத்தோடு இழந்த இடங்களை மீட்டிக்கொள்வதற்கு மாத்திரமல்லாமல், இடம்பெயர்ந்தவர்கள் என்ற அடைமொழியோடு இருந்தவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமைக்கு முழுமையாக மாறியுள்ளது.
அனைவரும் மகிழ்ச்சியோடு இந்நாட்டு பிரஜைகளாக வாழக் கூடிய ஒரு சுபீட்சமான சூழல் அமையப்பெற்றிருப்பதையிட்டு நாங்கள் எல்லோரும் பெருமை அடைகின்றோம்.