மீள்குடீயேற்றம் தொடர்பிலான ஜனாதிபதியின் அறிவிப்பு நம்பிக்கைத் தருகிறது : செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

 

மீள்குடீயேற்றம் தொடர்பிலான ஜனாதிபதியின் அறிவிப்பு
நம்பிக்கைத் தருகிறது!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா
daglas
                 எதிர்வரும் ஆறு மாதங்களில்  இடம் பெயர்ந்துள்ள மக்கள் மீள் குடியேற்றப்பட நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பு நம்பிக்கைத் தருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். 
                 இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த 20ம் திகதி தேசிய நத்தார் தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், யாழ்; ஆயர் வண. ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களது வேண்டுகோளை ஏற்று, யாழ் மாவட்டத்தில் உள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று, இடம்பெயர்ந்த நிலையில் அங்கு வாழ்ந்துவரும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களது துன்ப, துயரங்களை கேட்டறிந்து கொண்டுள்ளார். 
                 இம் மக்கள் கடந்த 25 வருடங்களாக இடம் பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில, பல்வேறு இடர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மீள் குடியேற்றம் குறித்தும், மீள் குடியேற்றப்படும்வரை தற்போது இம் மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களின் அடிப்படை மற்றும் ஏனைய வசதிகள், உலர் உணவு நிவாரணம் என்பன வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். நாம் ஆட்சியதிகாரத்;தில் பங்கெடுத்திருந்த காலத்தில் இம் மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது, 
                     இந் நிலையில், இம் மக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களது நிலைமையினை கண்டறிந்து கொண்ட ஜனாதிபதி அவர்களுக்கும், அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ள யாழ் ஆயர் அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 
                     அத்துடன், தேசிய நத்தார் தின நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் உரையாற்றும்போது, இன்னும் ஆறு மாதங்களில் இம் மக்கள் குடியேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறியுள்ளமை எமக்கு நம்பிக்கையளிப்பதாகவே உள்ளது. எனவே, ஜனாதிபதி அவர்களின் இம் முயற்சி வெற்றிபெற எங்களால் இயன்ற உதவிகளையும் நாம் செய்வோம். இதற்கு ஏனைய அனைத்துத் தரப்பினரும் உதவ முன்வர வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.