வீசி இஸ்மாயில் அவர்கள் மயில் சின்னத்தில் போட்டியிட்டிருக்காவிட்டால் மயில் ஒரு பேசுபொருளாக இத்தேர்தலில் இருந்திருக்கமாட்டாது!

 

 

கடந்த பொதுத்தேர்தலில் மயில் சின்னத்துக்கு அம்பாறை மாவட்டத்தில் கிடைத்த வாக்குகளுக்கு சொந்தக்காரர் யார்? கட்சிக்காகவா ? தலைவருக்காகவா? அல்லது மு. காங்கிரஸ் மீது உள்ள அதிருப்தியா?   

மழை நின்றாலும் தூவானம் விடவில்லை என்பார்கள். அதுபோல பொதுத்தேர்தல் நடைபெற்று பல மாதங்கள் கடந்தும், மயில் கட்சிக்காரர்கள்  அம்பாறை மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளதாக புகழ் பாடித்திரிவதனை  இன்னும் நிறுத்தவில்லை. இது விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்பதனை காட்டுகின்றது.

முஸ்லிம் காங்கிரசுக்கு போட்டியாக அதன் கோட்டைக்குள் களமிறங்கிய மயில் கட்சியானது, முஸ்லிம் காங்கிரசின் வாக்குகளை தன் பக்கம் சூறையாடி அவ்வாக்கு வங்கியில் சரிவினை ஏற்படுத்தியிருந்தால் இவர்களது கருத்தினை ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரையில் அதன் வாக்குகள் அதிகரித்து செல்கின்றதே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் குறைவடையவில்லை. 

அந்தவகையில் 1989 ஆம் ஆண்டு மு. கா எதிர்கொண்ட  முதலாவது பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 61325   வாக்குகளையும்,  மரச்சின்னத்தில் இறுதியாக போட்டியிட்ட 2012 இல் நடைபெற்ற  மாகாணசபை தேர்தலில் 83658 வாக்குகளையும் மு. கா பெற்றிருந்தது. எந்த தேர்தல்களிலும் நூறுவீதமான மக்கள் மு. காங்கிரசுக்கு வாக்களித்திருக்கவில்லை. ஒவ்வொரு தேர்தல்களிலும் 35000 க்கு மேற்பட்ட வாக்குகள் மு. கா அல்லாத கட்சிக்கோ வேட்பாளருக்கோ அளிக்கப்படுவது வழமையாகும்.

இறுதியாக 2015 இல் நடைபெற்ற போதுதேரத்லில் யானை சின்னத்தில் போட்டியிட்டாலும் இம்மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய எமது மூன்று தொகுதிகளையும் வென்றதுடன், கிடைத்த மொத்த வாக்குகள் 91731 ஆகும். எனவே மயில் கட்சிக்காரர்கள் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டு மு. கா க்கு எதிராக களம் இறங்கினாலும், எந்தவொரு இலக்கினையும் அவர்களால் அடைய முடியவில்லை. 

இங்கே அம்பாறை தொகுதியில் சில கிராமங்களில் தயா கமகே அவர்களுக்கு இருந்த எதிர்ப்பலைகளை மு. கா வேட்பாளர்கள் தங்கள்பக்கம் ஆதரவாக திரிப்பியதனால் பல ஆயிரம் வாக்குகள் வெற்றிலை சின்னத்துக்கு அளிக்கப்படுவது தடுக்கப்பட்டது. அந்த எண்ணிக்கை இங்கே குறிப்பிடவில்லை. 

பல எதிர்பார்ப்புக்களுடன், பெருமெடுப்பில், ஏராளமான ஊடக விளம்பரங்களுடனும், முஸ்லிம்களுக்கான புதிய மாற்றுத்தலைமை என்று கூறிக்கொண்டு முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் உறுப்பினர்களை மயில் கட்சியினர் பணமூட்டைகளுடன் அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கினார்.

அந்தவகையில் சாய்ந்தமருதிலிருந்து மு. கா மூலம் கல்முனை மாநகர முதல்வராக இருந்த சிராஸ் மீராசாகிப் அவர்களும், முஸ்லிம் காங்கிரஸ் மூலம் கிழக்கு மாகான சபை உறுப்பினராக இருந்த ஜமீல் அவர்களும்  பெரும் சக்தியுள்ளவர்களாக கான்பிக்கப்பட்டதுடன், சாய்ந்தமருதில் மு. கா சார்ந்த வேட்பாளர் ஒருவர் இல்லாத நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த இவ்விருவரும் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டனர். 

அம்பாறை மாவட்டத்தில் மு. கா இன் வாக்குகளை தீர்மானிப்பது சாய்ந்தமருது என்பதன் காரணமாக மு. கா கோட்டையாக இருந்த சாய்ந்தமருது, மயில் கோட்டையாக மாறியுள்ளது என்றெல்லாம் கற்பனையுடன் கூடிய பொய்ப்பிரச்சாரத்திணை, சாய்ந்தமருதுக்கு வெளியே உள்ள ஊர்களில் பரப்பி வந்தனர். அத்துடன் பல கோடி ரூபாய் பணமும் தன்நீர் போன்று வாரியிறைக்கப்பட்டது. ஆனாலும் மக்களின் மனங்களை இவர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை. மாறாக இவர்களது அரசியல் வாழ்வே இன்று அஸ்தமனமாகியுள்ளது.   

மயில் கட்சியில் வேட்பாளராக களமிறக்கப்பட்ட தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் அவர்கள், அவரது பதவிக்காலத்தில் ஒரு அரச அதிகாரி என்பதற்கு அப்பால் பல சேவைகளை செய்ததன்மூலம் தனது ஊருக்கு அப்பால் இம்மாவட்டத்தில் தனக்கென்று ஒரு செல்வாக்கினை பெற்றிருந்தார். 

இவர் தனது ஊரான சம்மாந்துறையை சேர்ந்த சுமார் இருநூறு பேருக்கு தனது பதவிக்காலத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தார். சாதாரண அமைச்சரால் செய்ய முடியாததை இவர் செய்து காட்டியதனால் சம்மாந்துறை மக்களுக்கு இவர் மேல் நம்பிக்கை ஏற்பட்டது.   

அத்துடன் சம்மாந்துறையை சேர்ந்த நௌசாத் அவர்கள் தனிப்பட்ட முறயில் சம்மாந்துறை மக்களின் மனங்களை வென்றவர். ஊருக்கு எம்பி பதவி வேண்டும் என்பதற்காக இம்முறை தேர்தலில் போட்டியிடுவதனை தவிர்த்திருந்தார். அதனால் இவரது ஆதரவாளர்கள் அனைவரும் வீசி இஸ்மாயிலை ஆதரித்து இம்முறை சம்மாந்துறையில் களமிறங்கினர். 

கடைசி நிமிடம் வரைக்கும் மயில் சின்னத்தில் போட்டியிட வீசி இஸ்மாயில் அவர்கள் விருப்பத்துடன் இருக்கவில்லை. சமூகத்துக்குள் பிளவினை தவிர்க்கும் பொருட்டு இறுதிவரைக்கும் முஸ்லிம்களின் குரலான முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடுவதற்கே அவர் முயற்சித்தார். 

ஆனாலும் இக்கட்டான நிலைமையில் மு. காங்கிரசை சம்மாந்துறையில் பாதுகாத்து அதற்காக போராடிய முன்னாள் மாகான அமைச்சர் மன்சூர் அவர்களை தவிர்த்துவிட்டு புதியவரான வீசி இஸ்மாயிலுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதனை கட்சியும் அதன் தலைவரும் விரும்பவில்லை. அப்படித்தான் வழங்கினாலும் எதிர்காலங்களில் கட்சிக்குள் அது பாரிய பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என்பதனால் இவருக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை. எனவே தனது எதிர்பார்ப்பு கைகூடவில்லை என்ற கவலையுடனேயே வீசி இஸ்மாயில் அவர்கள் வேறுவழியின்றி மயில் சின்னத்தில் போட்டியிட்டார்.  

எனவே இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தலில் மயில் கட்சியானது 33 102 வாக்குகளை அம்பாறை மாவட்டத்தில் பெற்றிருந்தது. இதில் 14033 வாக்குகள் அதாவது மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட அறைவாசியானது சம்மாந்துறை தொகுதியில் இருந்து பெறப்பட்டிருந்தது. அத்துடன் நிறுத்தப்பட்ட ஏனைய வேட்பாளர்களில் களமிறங்கி கடுமையாக வேலை செய்தவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் முகவரி பெற்றவர்களே.

எனவே அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்துக்கு கிடைத்த வாக்குகள் அதன் தலைவர் ரிசாத் பதியுதீனுக்காகவோ, மயில் சின்னத்துக்காகவோ அல்ல. அது வீசி இஸ்மாயில் இன் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகவே என்பது இதன் மூலம் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. வீசி இஸ்மாயில் அவர்கள் மயில் சின்னத்தில் போட்டியிட்டிருக்காவிட்டால் மயில் ஒரு பேசுபொருளாக இத்தேர்தலில் இருந்திருக்கமாட்டாது. 

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது 

igbal