மக்கள் மனதில் இடம் பிடித்த தலைவர் ….

 

r-premadasa-president

அஷ்ரப் . ஏ . சமட்

மே 1 ஆம் திகதி (இன்று) காலை 8 மணிக்கு கொழு ம்பு புதுக்கடையில் பல்வேறு நினைவு தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அத்துடன் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 1500 குடும்பங்களுக்கு வீடமைப்பு மற்றும் சமுர்த்தி சுயதொழில் முயற்சித் திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வுகள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறுகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொள்ள உள்ளனர்.

இலங்கையின் 3வது ஜனாதிபதியாக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாச 1923 ஜூன் மாதம் 23 ஆம் திகதி பிறந்தார். ஜே. ஆர் ஜெயவர்த்தன இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பிரேமதாச பிரதமராகவும் பதவி வகித்தார். 1950 – 1989 காலப் பகுதியில் 39 வருடங்கள் தமது அரசியல் வாழ்க்கையில் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் தன்னையே அர்ப்பணித்ததொரு தலைவர் அவர். 

அதன் பின்னர் 4 வருடங்களும் 4 மாதங்களும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் நிறைவேற்று ஜனாதிபதியாகவும் அவர் பதவி வகித்தார். இவர் தமது 69வது வயதில் 1993 ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதி கொழும்பு ஆமர் வீதியில் வைத்து மே தின ஊர்வலத்தின் போது புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியினால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். அவர் மரணமடைந்து இன்று 22 வருடங்களாகும்.

கொழும்பு புனித ஜோசப் கல்லூரியில் அவர் கல்வி கற்றார். முன்னாள் தொழிற்சங்கவாதியான காலம் சென்ற ஏ. ஈ, குணசிங்கவின் ஊடாகவே தமது அரசியல் வாழ்வை ஆரம்பித்தார். அதன் பின்னர் 1950 ஆம் ஆண்டு ஐ. தே. கட்சியில் இணைந்தார். கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் பிரதி மேயராகவும் கொழும்பு மத்திய தொகுதியில் அரசியலில் பிரவேசித்தார். 

டட்லி சேனாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் 1967 இல் இலங்கை ஒலிபரப்பு சம்பந்தமான அமைச்சராகவும் பதவி வகித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை ஆரம்பித்தார்.

இவர் பிரதமராகவும் வீடமைப்பு உள்ளூராட்சி நகர அபிவிருத்தி நீர்விநியோக வடிகாலமைப்பு பொறுப்பான அமைச்சராகவும் பதவி வகித்தார். இக் காலகட்டத்தில் நாடு முழுவதிலும் 10 இலட்சம் வீடமைப்புத் திட்டம், கம்உதாவ, கிராம எழுச்சித் திட்டம் 200 தொழிற்சாலைகள், டவர் கோல் திட்டம், கெத்தாராம, சுகததாச மைதானங்களின் அபிவிருத்தி, நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் மணிக்கூட்டுக் கோபுரங்களையும் நிறுவுதல் போன்ற பணிகளை நிறைவேற்றினார். 

மகாவலி அபிவிருத்தித் திட்டங்களில் சுதந்திர வர்த்தக வலயங்களையும் அமைத்தார். பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தினையும் ஏற்படுத்தினார். நாடு முழுவதிலும் சகல அமைச்சுக்களையும் திணைக்களத்தினையும் கிராமங்களுக்கு அழைத்து “நடமாடும் சேவையை” ஏற்படுத்தி உடனுக்கு உடன் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தார். கல்விக் கல்லூரிகள் நிறுவும் திட்டம் இவரது காலத்திலேயே ஆரம்பமானது. அத்துடன் நாடு முழுவதிலும் 25 ஆயிரம் ஜனசவிய ஆசிரியர்கள் நியமனங்களை ஒரே நாளில் வழங்கினார். 

கொழும்பு வாழைத்தோட்டத்தில் உள்ள அவரது வீடான “சுச்சரித்த” திட்டத்தினை ஏற்படுத்தி அதிகாலை 4 மணிக்கே மக்கள் சந்திப்பை ஏற்படுத்தினார். மக்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடன் நிவாரணங்களை பெற்றுக் கொடுத்தார்.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் வீடற்ற மக்களுக்காக 225 க்கும் மேற்பட்ட தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணித்து நடுத்தர மக்களது வீடில்லாப் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுத்தார். அவ்வீடுகளில் வாழும் மக்களின் இன்றும் தமது வீட்டின் உள்ளறையில் அவரது உருவப்படம் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் அமையத்தில் சர்வதேச குடியிருப்பு அமையத்தை உருவாக்கி வீடமைப்பு ஆண்டாகவும் 2010 பிரகடனப்படுத்தினார் ரணசிங்க பிரேமதாச.

அத்துடன் நாடு பூராவும் கிராம எழுச்சித் திட்டத்தினால் 4000 க்கும் மேற்பட்ட வீடமைப்பு கிராமங்களை உருவாக்கினார். இதன் மூலம் அப்பிரதேசத்தில் மின்சாரம். நீர், பாதை பாடசாலை, தோட்டம், விளையாட்டு மைதானம், சந்தை, சனசமூக நிலையம், மத நிலையங்களை அமைப்பதற்கு இத் திட்டத்தினைப் பயன்படுத்தினார்.

இந்த நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த மக்களுக்காக ஜனசெவன எனும் உதவித் திட்டத்தினையும் உருவாக்கினார். 

ஏழை மக்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபட்டார். நாடுகளின் கட்டுநாயக்க மற்றும் தென் பகுதிகளிலும் தொழில் பேட்டைகளையும் ஆரம்பித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்போடு கிராமத்து இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பைப் பெறுவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தார். அத்துடன் தாபரிப்பு பெற்றோர் மற்றும் கல்வி, மேம்பாட்டுக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்த ஒரு தலைவர் ஆர். பிரேமதாசா மறைந்து 22 வருடங்களான போதும் அவரது சேவையினால் நன்மையடைந்த மக்கள் மனதில் இன்றும் அவர் நிலை கொண்டுள்ளார்.

இவர் இந்த நாட்டை ஜனாதிபதியாக பாரமெடுக்கும் போது நாட்டில் பாரிய யுத்தமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக்காலத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் நாட்டில் இந்தியப் படையினர் இலங்கையில் நிலை கொண்டிருந்தனர். உடன் செயற்பட்டு இந்தியப் படையினரை இலங்கையை விட்டு வெளியேற்றினார்.

ரணசிங்க பிரேமதாசா தமது ஐ. தே. கட்சியின் தலைவர் பதவியில் இருக்கும் போது அக் கட்சியை சகல தேர்தல்களிலும் வெற்றி கண்டார். கிராமத்து மக்களோடு ஏழையாக பிறந்து அவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு ஐ. தே. கட்சியில் இவருக்கு பின்னால் பாரிய மக்கள் சக்தி திரண்டு இருந்தது. தற்பொழுது அவரது தந்தையின் அடிச் சுவட்டைப் பயன்படுத்தி அவரது மகனான வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். 

தனது தந்தையின் 10 இலட்சம் வீடமைப்புத் திட்டம் போன்றும் ஜனசெவன திட்டம் போன்று செயலாற்றுவதற்காகவே தற்போதைய அரசு வீடமைப்பு சமுர்த்தி அமைச்சு கையளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சமுர்த்தி நிவாரணமும் சுயதொழில் கடன்களாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இன்று கொழும்பு புதுக்கடையில் ரணசிங்க பிரேமதாசவின் 22 வது நினைவு தினம் காலை 08.00 மணிக்கு நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி, அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். 

இந் நிகழ்வில் சமுர்த்தி பெறும் 800 குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும். அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் வீட்டுரிமைப் பத்திரம் பெறாத 1000 குடும்பங்களுக்கு வீட்டுப் பத்திரமும் வழங்கி வைக்கப்படும். திவிநெகும திட்டத்தின் கீழ் கொழும்பில் 100 குடும்பங்கள் நன்மையடைகின்றன. திவிநெகும திட்டத்தின் கீழ் மேலும் 130 குடும்பங்களுக்கு 1 இலட்சம் ரூபா கடன் திட்டம் வழங்கப்படுகின்றன.