சரத் பொன்சேக்காவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டது

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பாராளுமன்ற உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் தாக்கல்செய்யப்பட்ட ரீட் மனு, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் எச்.ஜீ.ஜே மடவல ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணை நிறைவடையும் வரையில், சரத் பொன்சேக்காவிற்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ள மனு மீதான இடைக்கால தடை உத்தரவு தொடர்பில், மார்ச் 09 ஆம் திகதி பரிசீலனை செய்யப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள 08 பேரையும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துலேகொட, முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க, தற்போதைய பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, தெரிவத்தாட்சி அதிகாரி எச்.ஜி கமல் பத்மசிறி, லக்ஸ்மன் நிபுணஆராச்சி மற்றும் தற்போது பொன்சேக்காவின் பதவி வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜயந்த கெடகொட மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தற்போது சரத் பொன்சேக்காவிற்கு ஜனாதிபதி நிபந்தனைகளற்ற பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும், அவர் பாராளுமன்ற உறுப்பினர் எனவும், மனு தொடர்பில் விடயங்களை முன்வைத்து, பொன்சேக்கா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா தெரிவித்தார்.

இராணுவ நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆகியன வழங்கிய இரண்டு சிறைத் தண்டனைகளால், 98,450 வாக்குகளைப்பெற்ற பொன்சேக்காவின், பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் சட்டத்தரணி தெளிவூட்டினார்.

அவரின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டதன் பின்னர், அவரையடுத்து பட்டியலில் முன்னிலையில் இருந்த லக்ஷ்மன் நிபுணஆராய்ச்சி நியமிக்கப்பட்ட போதிலும், அவர் அதனை ஏற்றுக்கொள்ளாது, சரத் பொன்சேக்கா நேர்மையான ஒருவர் என அவர் கூறியதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அந்த பாராளுமன்ற வெற்றிடத்திற்கு உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜயந்த கெட்டகொட பாராளுமன்றத்திற்கு புதியவர் எனவும், அந்த பதவியில் இருப்பதற்கு எவ்வித அதிகாரமும் அவருக்கு இல்லை எனவும் சட்டத்தரணி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.