இலங்கை அகதிகள் மீளக் குடியமர்வதைத் தடுக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளை மீள்குடியமர்த்துவது, இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு எதிரானது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிற்கு திரும்பி வருவதை தடை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிலளித்துள்ளது.

ஜாதிக்க ஹெல உறுமயவின் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்திருந்ததாவது;

1983 ஆம் ஆண்டு சம்பவத்தின் பின்னர் தமிழகத்திற்கு தப்பிச்சென்ற தமிழர்களின் பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டு தீர்க்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு இந்தியாவின் விசேட பிரதிநிதியாக இலங்கையில் இருந்த இந்திய உயர்ஸ்தானிகர், ஜெ.என்.டிக்ஸித் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, இலங்கையில் இருந்து 1983 ஆம் ஆண்டு தமிழகத்திற்குச் சென்ற தமிழர்களை இந்தியா பொறுப்பேற்கவும், இலங்கையில் பிரஜாவுரிமையை இழந்திருந்த இந்திய தமிழர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கு அன்று தீர்மானிக்கப்பட்டது. அதனால், தமிழகத்திலுள்ள தமிழர்களை நாட்டிற்கு வரவழைத்து மீள குடியமர்த்த வேண்டும் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கின்றார் எனின் அன்று ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை மீறப்படும். அதனால் அதற்கு நாம் முற்றாக எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

இதற்குப் பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இங்கு வந்து குடியேற விரும்புபவர்கள் இந்நாட்டின் குடியுரிமையைத் தொடர்ந்து வைத்திருப்பவர்கள் எனில் அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்றார்.