அப்துல் கலாம் அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது !

unnamed

 மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நல்லுடல் ராமேஸ்வரம் அருகிலுள்ள பேக்கரும்பு மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அப்துல் கலாம் அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கலாமின் நல்லடக்கத்தில் அவரது மூத்த சகோதரர் உட்பட நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக பேக்கரும்பு மைதானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கலாம் அவர்களது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முழு ராணுவ மரியாதையுடன் கலாமின் உடல் மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திடலில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். ராமேஸ்வரம் நகரில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமே காணப்பட்டது.  

முன்னதாக ராமேஸ்வரத்திலுள்ள அவரது இல்லத்தில் இருந்து அவரது உடல்  மதச்சடங்குகள் செய்வதற்காக ஜன்சா பள்ளிவாசலுக்கு எடுத்து செல்லப்பட்டது. கண்ணீர் மல்க அப்துல் கலாமுக்கு அவரது உறவினர்கள் பிரியாவிடை கொடுத்தனர். கலாம் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மீது பச்சை நிற மலர் போர்வை போர்த்தப்பட்டிருந்தது. பின்னர் கலாம் உடல் வைக்கப்பட்ட பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்திய பின் இஸ்லாமிய முறைப்படி அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இதன் பின்னர் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுப்பதற்காக சாலையின் இருபுறமும் மக்கள் அலைகடலென திரண்டிருந்தனர். இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.