கண்ணீர் கடலில் கலாம் உடல்: ஏவுகணை நாயகன் விண்ணுக்கு சென்றார்!

Unknown

83 ஆண்டுகளுக்கு முன்பு…

ராமேஸ்வரம் தீவில் ஒரு சின்ன ஓட்டு வீட்டில் ஒரு குழந்தை அழுதுக்கொண்டே பிறந்தது!அதே குழந்தை பெரியவனாகி… உலகம் போற்றும் மாபெரும் தலைவனாகி அதே தீவில் உயிரற்று சடலமாக கிடப்பதை பார்த்து ஒட்டு மொத்த தேசமும் அழுகிறது.குடும்பத்து உறவினர் ஒருவரை இழந்தது போல் சாதி, மதம், இனம் மொழிகளை கடந்து எல்லா வீடுகளும் சோகத்தில் மூழ்கி கிடக்கின்றன.தங்கள் உள்ளம் கவர்ந்த தலைவரின் உடல் இமயத்தின் அடிவாரமான ஷில்லாங்கில் இருந்து டெல்லி கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ராமேஸ்வரம் கொண்டு வரும் சோக காட்சிகளையும், அந்த அற்புத மனிதரின் சாதனை துளிகளையும் தொலைக்காட்சிகளில் பார்த்தபடியே மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள். இதை தவிர வேறு காட்சிகளை பார்க்க யாருக்கும் மனம் வரவில்லை.சாதாரண மனிதனாக பிறந்து மிக உயர்ந்த ஜனாதிபதி பதவியை வகித்த போதும் தான் பிறந்த ராமேஸ்வரம் மண்ணை சுற்றியே எனது நினைவுகள் இருக்கும் என்றவரின் ஆசைப்படியே இறுதி அஞ்சலிக்காக சொந்த மண்ணான ராமேஸ்வரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

தூக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை தூங்கவிடாமல் துரத்துவதே கனவு என்று கனவுக்கு புதுவிளக்கம் தந்து எந்த நேரமும் இந்த தேசத்தின் வளர்ச்சி பற்றியே கனவு கண்டு தூக்கத்தை தொலைத்து ஓயாமல் உழைத்த மாமனிதர் நிரந்தரமாய் தூங்க சென்று விட்டார்.தேசத்தை அலங்கரித்து அழகு பார்த்தவரின் உடலை தேசிய கொடி அலங்கரிக்க வெற்றுடலாய் கண்ணாடி பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருந்ததை பார்த்து கண்ணீர் சிந்தினார்கள்.மண்ணின் மைந்தர் முகத்தை கடைசியாய் பார்த்துவிட ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் மொத்தமாய் திரண்டு விட்டனர். கைகள் மலர்களை தூவியது. கண்கள் தன்னையும் அறியாமல் கண்ணீர் பூக்களை உதிர்த்தது.பகல் முழுவதும் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தின் ஒட்டு மொத்த அரசியல் தலைவர்களும் அங்கு குவிந்தனர். தலைவர்களுக்கெல்லாம் வழிகாட்டிய தலைவரின் முகத்தை பார்த்து சோகம் தொண்டையை அடைக்க விம்மினார்கள். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.50 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்புயல் தாக்கி தனுஷ்கோடி அழிந்து போனது. அப்போது ஏற்பட்ட சோகத்தை விட பெரும் சோகம் சூழ்ந்தது போல் ராமேஸ்வரம் தீவு மக்கள் கண்ணீரில் மிதக்கிறார்கள்.இந்தியா முழுவதிலும் இருந்து தலைவர்கள் குவிந்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் விடிய விடிய ராமேஸ்வரத்தை நோக்கி மக்கள் படையெடுத்தனர்.தனியார் வாகனங்கள் அனைத்தும் ராமநாதபுரத்திலேயே நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அரசு பஸ்கள் மூலம் ராமேஸ்வரம் சென்றார்கள்.திரும்பும் திசையெல்லாம் ஜன சமுத்திரம். ஒருபுறம் வங்ககடல் வெள்ளம், இன்னொரு புறம் மக்கள் வெள்ளம். நேரம் செல்ல செல்ல அனுமன் வாலைப்போல் மக்கள் வரிசை நீண்டு கொண்டே போனது.இதனால் திட்டமிட்டபடி அப்துல் கலாம் உடல் இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல முடியவில்லை. பொதுமக்கள் விரைவில் அஞ்சலி செலுத்த அங்கிருந்த போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தனர். அவர்கள் விரைவாக பொது மக்களை அஞ்சலி செலுத்த வைத்தனர். ஆனாலும் கூட்டம் குறைந்தபாடில்லை.
மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 1.32 ஏக்கர் நிலப்பரப்பில் கலாம் உடல் அடக்க ஸ்தலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.காலை 11 மணியளவில் தான் அந்த திடலுக்கு கலாம் உடல் வரும் என்று தெரிந்தும் அதிகாலையிலேயே திடலை சுற்றி பெருங்கூட்டம் திரண்டது.பிரதமர் உள்பட இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், உறவினர்கள் அமர தனிதனியாக கேலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன.காலை 10.45 மணியளவில் அடக்கம் நடைபெறும் இடத்துக்கு கலாம் உடலை முப்படை வீரர்களும் தோளில் சுமந்து வந்தனர்.என் பாதுகாப்புக்காக இவ்வளவு நேரம் நின்று கொண்டே இருந்தாயே உனக்கு கால்வலிக்கவில்லையா என்று ராணுவ வீரரிடம் கனிவுடன் கேட்ட சில மணித்துளிகளில் அடங்கி விட்டது கலாமின் உயிர் மூச்சு.அவரது இரக்க இதயத்தை பார்த்து நெகிழ்ந்து போன ராணுவ வீரர்கள், ஐயா, உமது பூத உடலை மணிக்கணக்கில் சுமந்தாலும் எங்கள் நன்றிக்கடன் தீராதே என்பது போல் கனத்த இயத்துடன் கம்பீரமாக சுமந்து வந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடை மீது வைத்தனர்.
சாதி, மதம், இனம், மொழி, அரசியல் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு மனித நேயத்தை தன் கடைசி மூச்சுவரை நேசமுடன் சுவாசித்தவர்.அந்த மனித புனிதருக்கு அஞ்சலி செலுத்த வேற்றுமைகளை மறந்து இந்திய தலைவர்கள் அனைவரும் ஒன்றாய் அணிவகுத்து தங்கள் இதய அஞ்சலியை சமர்பித்தனர்.பாரத தாயின் தவப்புதல்வனுக்கு பாரத பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்கள் சோக கீதம் இசைக்க கலாமுக்கு ‘சலாம்’ செய்தார் மோடி.பின்னர் கலாமின் பாதங்களை வணங்கி விட்டு கூப்பிய கைகளுடன் சுற்றி வந்து வணங்கினார். தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் அடுத்தடுத்து வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மக்கள் ஜனாதிபதி தேசத்து மக்களிடம் விடைபெற்றார்.ஆயிஷாம்மாள் பெற்ற பிள்ளையை – பாரத்தாய் வளர்த்த பிள்ளையை பூமித்தாய் தன் மடியில் ஏந்தி நீங்காது துயில் கொள்ள வைத்தாள்.பாரதத்து ரத்தினம் பாரத தாயின் காலடியில் புதைக்கப்பட்ட மண்ணுக்குள் இருந்தாலும் காலம் உள்ளவரை கலாம் என்ற அற்புத ஒளி இளைஞர்களுக்கு வழிகாட்டும்.