ஐக்கிய தேசியக் கட்சியின் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை நானும் எனது முஸ்லிம் சமூகமும் அந்த ஐ.தே.க. வாகனத்தில் ஒரு போதும் ஏறப்போவதுமில்லை, ஏறவுமாட்டோம். என்று தலைவர் மர்ஹும் அஸ்ரப் அன்று கூறினார். அதனால்தான் தலைவர் அஸ்ரப் அவர்களின் பாசறையில் படம் போட்டவர்கள் என்ற வகையில் அந்த பஸ்ஸில் நான் ஏறப்போவதில்லை. என்று தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
பொத்துவில் பிரதான வீதியில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் தேர்தல் பிர்ச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி வென்றதுமில்லை, நாங்கள் தலைவர் அஸ்ரப் விட்ட இடத்திலிருந்து எமது பணியைத் தொடங்கியுள்ளோம். மஹிந்த ராஜபக்ஸவை நாம் ஆதரித்தோம். இரண்டு முறை வாக்களித்தோம். ரணிலுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்காக அல்ல. 30 வருட காலம் புரையோடிப் போயிருந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக. மஹிந்த ராஜபக்ஸ 2009 இல் பயங்கரவாதத்தை ஒழித்து வடக்கையும், கிழக்கையும் பிரித்துத்தந்தார்.
தொடர்ந்து 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில். காரணம் ரவுப் ஹக்கீம். சரத் பொன்சேகாவைக் கொண்டு வந்து முஸ்லிம் சமூகத்திடம் இவர்தான் எமது வேட்பாளர் என்று கூறி நாம் வாக்களிக்க வேண்டிய ஒருவருக்கு வாக்களிக்காமல் ஆக்கினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைத் தேவையில்லை என்று ஒதுக்கி நுஆவை உருவாக்கினார். தலைவர் தேவையில்லை என்று ஒதுக்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வைத்துக் கொண்டு பாரிய இனப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கின்றார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஒரு தேவை ஏற்பட்டது. முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நன்றிக் கடன் இருந்தது. நாம் இன்று சுதந்திரமாக உலாவக்கூடிய சூழலை ஏற்படுத்தியமைக்காக ஒரு கூடைககுள் எல்லா முட்டைகளையும் போடாமல் பாதுகாப்புக்காக வேறு வேறு கூடைகளில் போடவேண்டும் என்பதற்காகவும், முஸ்லிம்கள் எப்போதும் ஏமாற்றுக்கார்கள் தொப்பி திரும்பும் பக்கம் திரும்பிப் போபவர்கள் என்கின்ற ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காகவும் முஸ்லிம்கள் வேறு தீர்மானம் எடுத்த சூழ் நிலையிலும் நாங்கள் உங்களுக்காக அதனைச் செய்ய வேண்டிய ஏற்பட்டது.
உதாரணமாக 2 இலட்சம் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மேலதிகமாகக் கிடைத்து அவர் வென்றிருந்தால் எமது நிலை என்னவாக இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். அதுவம் உங்கள் பாதுகாப்புக்காக்தான். நாங்கள் அந்த முடிவினை எடுத்திருந்தாலும் இறைவனுடைய நாட்டம் மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியானார்கள்.
வெற்றிலைச் சின்னம் மஹிந்த ராஜபக்ஷவினுடைய சின்னமல்ல. அது சந்திரிக்கா உருவாக்கிய சின்னம். அது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூடட்மைப்பின் சின்னம். அதிலே பல தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அதிலும் பல தேர்தல்கள் சந்திரிக்கா காலத்திலும், மஹிந்த ராஜபக்ஸ காலத்திலும் நடைபெற்றுள்ளன.
இப்போது ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன அவர்கள் வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பு என்பவற்றிற்கு தலைவராக இருக்கின்றார். இப்போது வெற்றிலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் சின்னமாகும்.
இப்போது மஹிந்த ராஜபக்ஷவைப்பற்றி எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள்தான் அவரைத் தோற்கடித்து விட்டோம். இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் இருக்கின்றார். நாங்களும் அவர்களுடன் இணைந்துள்ளோம். மஹிந்தவும் இருக்கின்றார்.
ரணில் விக்கிரம சிங்க அவர்கள் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வர எந்தவிதமான தகுதியும் இல்லை. கட்சிக்குள்ளும் அவருக்கு ஆதரவு இல்லை. மக்கள் மத்தியிலும் ஆதரவு இல்லை. மக்கள் கொடுத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர் துஷ்பிரயோகம் செய்தார்.
2002 ஆண்டு நாங்களும், ரவுப் ஹக்கீமும் சேர்ந்து கொடுத்த ஆதரவை வைத்துக் கொண்டு நோர்வேயிடம் ஒப்பந்தம் செய்தார். எமது நிலபுலன்கள், கால் நடைகள் எல்லாம் கட்டப்பட்டு நாங்கள் அநாதைகளாகவும், நாதியற்றவர்களாகவும் ஆக்கப்பட்டோம். .
அந்த ஆட்சியை மாற்றுவதற்காக நாம் போராடி ஆட்சியை மாற்றி சந்திரிக்காவைக் கொண்டு வந்தோம். நமது மக்களைத் துப்பாக்கி கொண்டு சுடுகின்ற வேளையில் பொலிஸ், இராணுவம் முதலியோர்களால் எதுவம் செய்ய முடியாதிருந்த நேரத்தில் வாழைச்சேனை முதலிய பொலிஸ் நிலையங்கள் எரிக்கப்பட்ட நேரத்தில் நாம் பொத்துவில் மண்ணிலிருந்து மூதூர் வரைப் பாதயாத்திரை சென்றோம். யாருக்காக மக்களுக்காகச் சென்றோம்.
வெற்றிலைக் கூட்டமைப்பை உடைத்தால் தான் மீண்டும் பிரதமராகலாம் என ரணில் விக்கிரமசிங்க நினைத்தார்.வெற்றிலைக் கூட்டை உடைக்கவும் முடியாது. ஆவர் ஒரு நாளும் பிரதமராகவும் வரமுடியாது.அவர் ஏண்ட கணக்கெல்லாம் போட்டுப் பார்த்தார். நாட்டின் ஜனாதிபதியாக வரலாமென்று. அவரால் வரமுடியாத விடயம்.. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிளவுபட்டுப் பொனால் அவருக்கு பிரதமராக வருவதற்கான வாயப்பு இருந்தது. நாங்கள் அதற்கு விடவில்லை.
150 க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள். இன்ஷா அல்லாஹ் அடுத்த பாராளுமன்றம் ஐ.ம.சு.கூட்டமைப்பின் அரசாங்கமாகவே இருக்கும் என்பதில் உங்களுக்கு எந்தவிதமான சந்தேகங்களும் தேவையில்லை. கண்டி உட்பட 2 அல்லது 3 மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறலாம்.
எங்களது சகல செயற்பாடுகளும் மக்களுக்காகவே. 2005 ஆம் ஆண்டு நாங்கள் மஹிந்தவிற்கு வாக்களிக்காமல் ரணிலுக்கு வாக்களித்திருந்தால் புலிகள் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள். பொத்துவிலில் பஸ்ஸிலும் கொலைதான்.பொத்துவிலில் 6 மணிக்குப் பின்னர் கதவை மூடவேண்டிய நிலைதான். வுடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட்டிருக்காது. நூம் எல்லோரும் ஆளப்படுகின்ற சமூகமாக மாற்றப்பட்டிருப்போம்.
ஊர்த் தலைமைகள் இவ்வாறான நேரத்தில் மக்கள் நலன் கருதி தூரதிருஷ்டியுடனான தீர்மானங்களை மேற் கொள்ள வேண்டும். பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். பொத்துவில் பிரதேசத்திற்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பற்றிக் கதைப்பதற்கு நேரம் தருமாறு கேட்டிருக்கின்றேன். நான் பக்கத்து ஊரான் உங்களுக்கு உதவ வேண்டுமென கட்சித் தலைவர் என்ற ரீதியில் நேரம் தருமாறு பள்ளிவாயல் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால் என்ன தலைமைத்துவம் பேச வேண்டிய நேரம் இந்த ஊரின் படித்ததவர்கள், கல்விமான்கள், பள்ளித் தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் எல்லோரும் பேசுவது என்னவென்று கேட்பதற்கு ஒரு சந்தர்ப்பம் தரமுடியாத மிகவும் கேவலமான நிலையிலேயே இந்த தலைமைகள் இருக்கின்றன.
பொத்துவிலுக்கு தேசியப் பட்டியலுமில்லை, வேட்பாளர் போட்டு வெல்லவைப்பதற்குமில்லை மாகாண சபையிலே வேட்பாளர்களைப் போட்டு வாக்குப் போடுவதுமிலலை. இதுதான் உங்களது இன்றைய நிலைமை.
தேசிய காங்கிரஸ் கட்சியைக் பொறுத்தவரையில் அக்கரைப்பற்று. பொத்துவில், இறக்காமம், அட்டாளைச்சேனை ஆகிய கிராமங்கள் ஒனறினைந்து ஐ.ம.சு.கூட்டமைப்பில் போட்டியிடும் மூவருக்கும் வாக்களிப்பதால் மூன்று பிரதிநிதித்துவத்தை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் தேசியப் பட்டியல் மூலமும் ஒரு பிரதிநிதியைப் பெறமுடியும் என்றார்.