நாட்டின் கறுப்பு பொருளாதாரத்தை சுத்திகரிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
வர்த்தகர்களுடன் நேற்று (27) நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய திட்டத்தின் மனசாட்சி தொனிப்பொருள் திட்டம் மற்றும் கலந்துரையாடல் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது அநுரகுமார மேலும் தெரிவித்ததாவது;
இன்று பிறக்கின்ற சிசு முதல் கட்டிலில் நோய் வாய்ப்பட்டிருப்போர் வரை அனைவரும் 3,55,000 ரூபா கடனாளியாகியுள்ளனர். 2013ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 1183 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. 2013ஆம் ஆண்டு கடனுக்கான தவணையை செலுத்துவதற்காக 1191 பில்லியன் ரூபா தேவைப்பட்டுள்ளது. அவ்வாறென்றால் என்ன? ஆண்டொன்றின் கடன் தவணையைக்கூட செலுத்துவதற்கு அரசாங்கம் உழைத்த வருமானம் போதுமானதாக இல்லை. அதனால் பொருளாதார ரீதியில் நாம் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளோம். இந்த வர்த்தக உலகத்தில் ஏற்பட்டுள்ள கறுப்பு படிமத்தை இல்லாது செய்வோம் என நாம் உறுதி அளிக்கின்றோம்.