இந்த நூற்றாண்டின் ஈடு செய்ய முடியாத இழப்பாக கலாநிதி அப்துல்கலாமின் இறப்பு பதிவாகியுள்ளது!

Dr-Abdul-Kalamஇயற்கை எய்திய இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் தலைசிறந்த விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் பூதவுடல் தற்போது புது டெல்லியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஷிலாங்கில், மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீர் சுகவீனமுற்ற டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மேகாலயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (27) இயற்கை எய்தினார்.

முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாநிதி அப்துல்கலாமின் பூதவுடல் அவர் உயிர்நீத்த பகுதியான ஷிலாங்கில் இருந்து தற்போது புது டெல்லிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

அவரது பூதவுடல் விசேட இந்திய விமானப்படையினரின் ஹெலிகொப்டர் மூலமாக டெல்லி கொண்டு வரப்பட்டது.

இதன்போது கலாநிதி அப்துல் கலாமின் பூதவுடலுக்கு இறுதி மரியாதையும் செலுத்தப்பட்டது.

உயரதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் அவரின் பூதவுடலுக்கு மரியாதை செலுத்தினர்.

1931 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தென்னிந்திய தமிழ்நாட்டில் பிறந்த அப்துல்கலாம் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்த போதிலும் தனது முயற்சியால் பின்னர் உலகமே வியக்கும் மேதையாகவும் இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாகவும் உருவெடுத்ததார்.

இந்த நூற்றாண்டின் ஈடு செய்ய முடியாத இழப்பாக கலாநிதி அப்துல்கலாமின் இறப்பு பதிவாகியுள்ளது.