ரிசாத் மீதான கல்லெறிக்கு அம்பாறையெங்கும் கடும் கண்டனம் !

DSCN1199_Fotor
ஏ.எச்.எம் பூமுதீன்
அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற அ.இ.ம.கா வின் கூட்டத்தின் போது அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட கல்லெறித் தாக்குதல் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் முகாவின் ஹக்கீம் தரப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் அம்பாறை மாவட்டத்தில் முகா பாரிய வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதை எடுத்துக்காட்டுவதாகவும் மக்கள் கருத்து வெளிப்படுத்துகின்றனர்.
அ.இ.ம.காவின் அம்பாறை வருகை முகாவுக்கு பாரிய சவாலையும் சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சரிவும் சவாலும் ரிசாத் பதியுதீனின் கடந்த சனி  ஞாயிறு தினங்களில் அம்பாறைக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் மூலம் மேலும் வலுவிழந்துள்ளது.
இதன் உச்சக்கட்ட வெளிப்பாடே ரிசாத் மீதான கல்லெறித் தாக்குதலாகும்.
அட்டாளைச் சேனையில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பிரதேச மக்களையும் குறிப்பாக உலமாக்கள் புத்தி ஜீவிகளையும் மிகவும் வேதனையடையச் செய்துள்ளது.
அட்டாளைச் சேனை பிரதேசத்தை ஏனைய முஸ்லிம்கள் மத்தியிலும் ஏனைய பிரதேசங்கள் மத்தியிலும் கலங்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஹக்கீம் தரப்பு குழுவால் இந்தச் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கடும் தொணியில் தமது கண்டனத்தை வெளிப்படுத்துகின்றனர்.
அட்டாளைச் சேனை மக்கள் தேசியப்பட்டியல் ஒன்றினூடாக தமது பகுதிக்கு எம்பிப் பதவி ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக ஹக்கீமுக்கு கொடுக்கும் அழுத்தம் ஹக்கீமை மிகவும் அவமானச்சிக்கலுக்குள் தள்ளியுள்ளது.
 இந்த அவமானத்திற்கு பழி தீர்க்கும் வகையில் தான் – அட்டாளைச்சேனை என்னும் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதனை காரணமாக முன்வைத்து தேசியப்பட்டியல் வழங்காமல் மறுதலிப்பதே ரிசாத் மீதான இத்தாக்குதலில் ஹக்கீம் தரப்பு ஈடுபட்டமைக்கான பின்னணி என்று அட்டாளைச் சேனை முகா பிரமுகர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
நாடு பூராகவும் முகா இரண்டே ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொள்ளும் என புலனாய்வுத் தகவல்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஹக்கீமின் நெருங்கிய சகாவான சட்டத்தரணி சல்மான் தொலைபேசியூடாக கருத்து வெளிப்படுத்தியிருக்கும் நிலையில் ஐதேக ஒரே ஒரு தேசியப்பட்டியலை மாத்திரமே இதன் மூலம் வழங்க சாத்தியமுள்ளது.
இவ்வாறான நிலையில் தோல்வியுறும் தனது எம்பி மார்களுக்கு வழங்காமல் புதிதாக ஒரு அட்டாளைச்சேனை நபருக்கு ஹக்கீம் வழங்குவாரா என்ற நியாயமான கேள்வி இன்று அட்டாளைச் சேனை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் நேற்றிரவு(27) அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் ‘ அட்டாளைச் சேனைக்கு தேசியப்பட்டியல்’ என்ற அப்பிரதேச மக்களின் கூக்குரலுக்கு ஹக்கீம் நழுவல் போக்கான பதிலை கூறியதன் மூலம் ஊர்ஜிமாகின்றது.
ரிசாத் மீதான கல்லெறித் தாக்குதல் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வேதனையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ள செய்தி முகா தலைமைக்கும் முகா வேட்பாளர்களுக்கும் பாரிய சரிவை தோற்றுவித்துள்ளது. 
இதனை உணர்ந்து கொண்டுள்ள இத் தரப்பினர் ரிசாத் மீது முகா போராளிகள் கல்லெறித் தாக்குதல் நடத்தவில்லை என நேற்று அட்டாளைச் சேனை கூட்டத்தில் பகிரங்கமாக மறுதலித்து அட்டாளைச் சேனை உட்பட ஏனைய முஸ்லிம் மக்களினதும் நல்லபிமானத்தை பெற்றுக் கொள்ள நாடகம் ஒன்றை அரங்கேற்றி தோல்வியுற்றனர்.
ரிசாத் பதியுதீன் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை கூட்டத்தில் பெரும் திரளானோர் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமலேயே ரிசாத் மீது குறித்த கல்லெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அட்டாளைச் சேனையை சேர்ந்த முகா வின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் நேற்று நள்ளிரவை தாண்டி அமைச்சர் ரிசாதை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கவலையை வெளிப்படுத்தி மன்னிப்பையும் கோரியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.