-எம்.வை.அமீர்–
அட்டாளைச்சேனையை பிரதிநிதித்துவப்படுத்திய மறைந்த மர்ஹும் டாக்டர் ஜலால்தீன் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அட்டாளைச்சேனை மண் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்பதாகவும், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் ஊடாக பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்குவதாக வாக்குறுதிகளை வழங்கிய போதும் அவைகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்றும், எதிர்வரும் தேர்தலிலாவது அட்டாளைச்சேனை, தேசியப்பட்டியல் மூலம் பாராளமன்ற உறுப்பினர் ஒருவரை பெறும் என்ற உத்தரவாதத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் பெரிய பள்ளிவாசலுக்கு வருகைதந்து உத்தரவாதமளிக்க வேண்டும் என்றும் அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத் தலைவரும் பெரிய ஜும்மா பள்ளிவாசலின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.ஹனீஸ் தெரிவித்தார்.
பள்ளிவாசலில், பெருநாள் தினத்தன்று கூடிய பெரிய பள்ளிவாசல் நிருவாக சபையினர் மற்றும் மரைக்காயர் சபை உயர் அங்கத்தினர்கள் உள்ளடங்கிய கூட்டத்தில் அட்டாளைச்சேனை மக்களுக்கு பாராளமன்ற பிரதிநிதித்துவ விடயத்தில் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கிவிட்டு பின்னர் அநாதையாக்கப்படுவதாகவும் அவ்வாறன வாக்குறுதிகளை அட்டாளைச்சேனை மக்கள் இனியும் நம்புவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் பின்னர் இதுவிடயமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமை பெரிய பள்ளிவாசலுக்கு அழைத்து வாக்குறுதிகளை பெறுவது எனவும் அதைத்தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களையும் பள்ளிவாசலுக்கு அழைத்து அவர்களிடமும் உத்தரவாதங்களை பெறுவது எனவும் பள்ளிவாசல் எதிர்பார்க்கும் உத்தரவாதங்கள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் மாற்று நடவடிக்கைகள் தொடர்பாக ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் இணைத்துக்கொண்டு பின்னர் கூடி முடிவெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
குறிப்பு: பிந்திக் கிடைத்த செய்திகளின் படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் 2015-07-18 ல் நிந்தவூரில் இடம்பெற்ற கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதிநிதித்துவம் பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் அங்கு றவூப் ஹக்கீமால் குறித்த பிரதிநித்தித்துவம் தொடர்பாக உத்தரவாதம் வழங்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து றவூப் ஹக்கீம் பள்ளிவாசல் தலைவருடன் உரையாடியதாகவும் அறியமுடிகிறது.
தேசியப் பட்டியலில் ஏற்கனவே பெயர் குறிப்பிடப் பட்டவர்கள் பெயரை நீக்கி புதிய ஒருவரின் பெயரை சேர்த்துக்கொள்வதட்கு அரசியல் சட்டத்தில் இடமுண்டா?