இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தம்புள்ளையில் இடம்பெற்றது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப்பெற்றது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சந்திமல் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களையும் மெத்தியுஸ் மற்றும் டில்ஷான் ஆகியோர் தலா 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் மொஹமட் ஹாபீஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில் 256 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி மொஹமட் ஹாபீஸின் சதத்தின் உதவியுடன் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
பாகித்தான் அணி சார்பாக ஹாபீஸ் 106 ஓட்டங்களையும் மாலிக் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தானின் மொஹமட் ஹாபீஸ் இப் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இப் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி பல்லேகலயில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.