தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி முஸ்லிம் லிபரல் கட்சியை இணைத்து களமிறங்குகிறது !

Ismail_Fotor_Collage_Fotor

-எம்.வை,அமீர்-

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 465757 பேர் வாக்களித்து 7 ஆசனங்களை பெறுவதற்காக பல்வேறு கட்சிகள் போட்டியிடுவதற்கான முஸ்தீபுகளை செய்துவரும் இவ்வேளையில் தனது கன்னித் தேர்தலை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி முஸ்லிம் லிபரல் கட்சியை இணைந்து தேர்தலை சந்திக்கவிருக்கின்றது.

தேர்தல் அபேட்சகர்களை ஒழுங்கு செய்துகொண்டிருந்த வேளையில் முஸ்லிம் லிபரல் கட்சியின் தலைவர் சிரேஷ்ட கணக்காளர் எம்.இஸ்மாயில் அவர்களை பிரத்தியோகமாக சந்தித்தோம்.

  • தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் இஸ்தாபகர் எம்.முகைதீன்பாவா அவர்களின் மூலக்கொள்கைகளான கிழக்கை ஒரு ஏற்றுமதி வலயமாக்குதல், வெளிநாட்டு முதலிட்டாளர்களின் உதவிகளுடன் பாரிய தொழிற்சாலைகளை அமைத்தல். 
  • பிரதேச அபிவிருத்தி. 
  • வேலைவாய்ப்பு. 
  • கல்வி.
  • பொருளாதார முன்னேற்றம்.
  • வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள மக்கள் தேர்தல்களில் பங்குகொள்ளும் விதம் போன்ற உண்மையாக அவரவரது உரிமையை பயன்படுத்தும் விதத்தை அறிமுகம் செய்தல்.

 

மேற்சொன்ன இலக்குகளை அடைவதற்காக தங்களது கட்சிகள்  இம்முறை அபேட்சகர்களை களத்தில் இறக்கவுள்ளதாக முஸ்லிம் லிபரல் கட்சியின் தலைவர் எம்.இஸ்மாயில் குறிப்பிட்டார்.

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் இஸ்தாபகர் எம்.முகைதீன்பாவா அவர்களின் மூலக்கொள்கையான கிழக்கை ஒரு ஏற்றுமதி வலயமாக்குதல், வெளிநாட்டு முதலிட்டாளர்களின் உதவிகளுடன் பாரிய தொழிற்சாலைகளை அமைத்தல் என்ற கொள்கைகளில் கவர்ந்ததன் காரணமாகவே தாங்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாகவும் பிராந்தியத்தின் அபிவிருத்தியை நேசிக்கும் எவரும் தங்களது கொள்கைகளை எதிர்க்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

உலகம் வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில் நமது நாடும் குறிப்பாக இப்பிரதேசம் அரசியல் ரீதியில் பின்னிலையிலேயே இருப்பதாகவும் தேர்தல்களை எதிர்கொள்ளும் கட்சிகளும் தனிநபர்களும் பணமூட்டைகளுடனேயே மக்களை சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நமது நாட்டிலும் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிலையை மாற்றி புதிய கருத்துக்களுக்கும் பிராந்திய அபிவிருத்திக்கும் வாக்களிக்கக் கூடிய சிறந்த சமூதாயத்தை உருவாக்குவதே தங்களது தலையாய கடமை என்றும் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் இஸ்தாபகர் எம்.முகைதீன்பாவா அவர்களின் வழிநடத்தலில் பிராந்தியத்தில் அபிவிருத்தியில் புதிய புரட்சி ஒன்றை செய்வதற்கு தாங்கள் தயாராகி வருவதாகவும் தங்களது திட்டங்களை நமது நாட்டில் நடைமுறைப்படுத்த மக்கள் தங்களது அங்கீகாரத்தை எங்களது கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மக்கள் வீண் வாக்குறுதிகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அடிபணியாது, தேர்தல் காலங்களில் வேட்பாளர்களால் வழங்கப்படும் ஐந்துக்கும் பத்துக்கும் தங்களது உரிமையை விற்றுவிடாது ஜனநாயக முறையில் கட்சிகளால் அல்லது குழுக்களால் வைக்கப்படும் தேர்தல் விஞ்ஞாபனங்களை கூர்ந்து கவனித்து அவற்றின் சாத்தியப்பாடுகளை கருத்தில்கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சன்மானங்களைக் கொடுப்பவர்கள் தேர்தல் முடிந்ததும் அவர்களது கடைகளை மூடிவிடும் விடயத்தை மக்கள் பின்னர்தான் யோசிப்பது கவலையான விடயம் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்களையும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களையும் ஒதுக்கிவிட்டு புதிய சிந்தனையுடைய புதியவர்களை மக்கள் ஆதரிக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நல்ல சமூக சிந்தனையுள்ள இளையவர்களை இம்முறை தங்களது கன்னிப்பயனத்தில் இணைத்துள்ளதாகவும் அவர்கள் மக்களால் தெரிவுசெய்யப்படுமிடத்து பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்றும் அம்பாறை மாவட்டத்தின் நாலாபக்கங்களில் இருந்தும் வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளதாகவும் அவகளினூடாக தங்களது கட்சி கணிசமான வாக்குகளை பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தங்களது கட்சிகளின் ஒன்றிணைந்த தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.