முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) அவர்களின் ஆதங்கம் !

unnamed_Fotorபாரூக் சிஹான்
இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் வேட்பு மனுவுக்கான விண்ணப்பம் கையளிக்கப்பட்ட நிலையில் அவ் விண்ணப்பம் பற்றி கருத்துக்கள், பதிலளிப்புக்கள் எதனையும்  மேற்கொள்ளாது இருட்டடிப்புச் செய்யப்பட்டமைக்குக் காரணம் என்ன? நாம் முன்னாள் போராளிகள் என்பதா? என முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களிடம்  எனது வேட்பாளருக்கான விண்ணப்பத்தினை நேரில் சமர்ப்பித்திருந்தேன். அத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளருக்கான விண்ணப்பத்தினை பதிவுத்தபால் ஊடாக அனுப்பியிருந்தேன். கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயாவுக்கான விண்ணப்பத்தினை, கட்சியின் உப தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இன்றைய வேட்பாளருமான துரைரட்ணசிங்கத்திடமும் சமர்ப்பித்திருந்தேன். இதனைக் காட்டிலும் வேட்பு மனுக்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் உத்தியோகபூர்வமான வழிமுறைகள் இல்லை என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், எம்மால் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போது குறிப்பாக சகல ஊடகங்களிலும் செய்திகள் முழுமையாக வெளியாகியிருந்தன. இவற்றுக்கு மேலதிகமாக, போரின் பின்பான நிலையில் என்னை ஜனநாய அரசியலில் ஈடுபட வலியுறுத்திய எமது திருகோணமலையில் தமிழ்த் தேசியத்தின்பால் இயங்கும் பொது அமைப்புக்கள், புத்திஜீவிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் குறுகிய கால நேரத்திற்குள் தமது கையெழுத்து மனுவை தமிழரசுக் கட்சியிடம் கையளித்திருந்தனர். இக் கையெழுத்து கோரிக்கையில் ஆயிரம் பேர் வரையில் கையொப்பமிட்டு இருந்தனர். இவ்வாறாக கையெழுத்திட்டவர்கள் நான் தேர்தலில் போட்டியிட முன்வந்ததை வரவேற்றும் எனது கடந்த கால சேவைகாரணமாக எனது தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடத் தயாராக இருக்கின்றோம் எனத்தெரிவித்தும் உறுதியளித்திருந்தனர். இக் கையெழுத்துக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களிடமும் திருகோணமலை மாவட்ட கட்சித் தலைவர் தண்டாயுதபாணி அவர்களிடமும், சம்மந்தன் ஐயாவிற்கு அனுப்பிவைப்பதற்காக சமர்ப்பித்திருந்தனர்.
மேற்படி விடயங்கள் ஏற்கனவே ஊடகங்களில் அவ்வப்போது உடனடியாகவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிக்கொண்டுவரப்பட்டிருந்தன. எனினும் கட்சியானது இது காலவரையில் எமது விண்ணப்பத்தின் பின்னர் எந்தக் கருத்துப் பரிமாற்றங்களையும் எம்முடன் மேற்கொள்ளவில்லை. எந்தவித நேரடியான பதிலளிப்புக்களும் எமக்குக் கிட்டவில்லை. 
இதுகாலவரையில் நாம் சிறையில் இருந்தபோதும், நீதிமன்றத்தின் ஊடாக விடுவிக்கப்பட்ட போதும் எமது அரசியல் தலைவர்கள் எந்த வகையிலும் எம்மை அணுகவும் இல்லை. தொடர்பு கொள்ளவும் இல்லை. இந்த விடயத்தில் இன்றுவரையில் எத்தனையோ போராளிகள், மாவீரர் குடும்பங்கள் எமது அப்பாவிப் பொதுமக்கள் தலைமைகளுடன் தொடர்புகொள்ள முடியாதவர்களாக திண்டாடுவதை நாம் தினமும் கண்கூடாக கண்டு வெந்துபோயிருக்கின்றோம். 
முன்னாள் போராளியான நான,; ஒரு காலத்தில் எமது தேசியத்தலைவரால் ஒருங்கிணைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதாலும் நான் தமிழரசுக் கட்சி பரம்பரையில் தொடர்ந்து வந்தவன் என்பதாலும் தமிழரசுக் கட்சியில் ஆயுள் கால உறுப்பினர் என்ற காரணத்தினாலுமேதான் தமிழரசுக் கட்சியில் வேட்பாளராக நிறுத்தக்கோரி எனது விண்ணப்பத்தினை முறைப்படி சமர்ப்பித்தேன்.
ஆனால் எமக்கான தேர்தல் அரசியல் ஏற்றுக்கொள்ளத்தக்க எந்தக் காரணமும் இல்லாமலும் மக்களின் விருப்புக்கோ அவர்களின் கருத்துக்கோ எந்த மதிப்பும் அளிக்கப்படாமலும் தனியொரு மனிதனால் மறுக்கப்பட்டுள்ளது. 
இதன் மூலம் எமது போராளிகள், மாவீரர்களின் தியாகங்களையும் துன்பங்களையும் எம்மவர்கள் பலர் புரிந்து கொள்ளாத நிலைமையிருப்பது தேசியத்தினையும் தியாகத்தினையும் அபாயகரமான சூழலுக்குள் தள்ளுகின்றது என்பது கவலைக்குரியது என்பதோடு  தங்கள் சுயநல அரசியலுக்காக வாக்கு வாங்கும் ஓர் தந்திரமாக மட்டுமே பயன்படுத்தினார்கள் என்ற உண்மை இன்று முழு உலகிற்கும் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது. 
இருப்பினும் என் மேல் நல்லபிப்பிராயம் கொண்டு எனதுசேவையினை தமிழ்த் தேசியத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அபிலாசையில் ஆதரவுக் குரல் கொடுத்து கையெழுத்துப் போராட்டம் நடாத்தி எங்களை உற்சாகப்படுத்திய அனைத்து மக்களுக்கும் என் சம்பந்தப்பட்ட செய்திகளை பிரசுரித்த பத்திரிகைகள், இணையத்தளங்கள், வானொலி மற்றும் காணொளி ஊடகங்கள் மற்றும் நேரிலும் தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தோர், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்தோர் என எமது நியாயபூர்வமான விடயத்திற்கு ஒத்துழைத்த  உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.