”மஹிந்தவை இறுதி நேரத்தில் நிராகரிக்கும் வேலைத்திட்டங்கள் கட்சிக்குள் இடம்பெறலாம்” – திஸ்ஸ விதாரண

mahinda
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை இறுதி நேரத்தில் நிராகரிக்கும் வேலைத்திட்டங்கள் கட்சிக்குள் இடம்பெறலாம். ஆனால், அதை எம்மால் அனுமானிக்க முடியாதுள்ளது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுவில் மஹிந்த கைச்சாத்திட்டாலும் முடிவுகள் இறுதி நேரத்தில் மாறலாம் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள நிலையில் மஹிந்த ஆதரவு அணியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பலமான கட்சியாகவும் பிளவுபடாத கட்சியாகவும் இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எம்மிடம் இருந்தது. 

அதேபோல் இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் மைத்திரி- மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் மஹிந்த ஆதரவுக் கூட்டணியை உருவாக்கி தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வந்தோம். 

இவ்விரண்டு நோக்கங்களும் இன்று நிறைவேறியுள்ளன. கட்சியையும் ஒன்றினைத்து மஹிந்த ராஜபக் ஷவையம் தேர்தல் களத்தில் இறக்கியுள்ளோம். இது எமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். 

அதேபோல் ஜனாதிபதி எமது தீர்மானத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தேர்தலில் களமிறக்கி கட்சிய வெற்றிப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற முடிவில் அவர் உள்ளார். 

ஆனால் கட்சிக்குள் ஒருசிலர் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்தில் மஹிந்தவின் மீள் பிரவேசத்தை தடுக்க நினைக்கின்றனர். அதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனர். ஆனால் ஏன் இவர்கள் இவ்வாறு நடக்கின்றனர் என்பது எமக்கு தெரியவில்லை. 

முன்னைய ஆட்சியின் போது இவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முக்கிய இடம் கொடுத்து வைத்திருந்தார். இவர்களே கடந்த ஆட்சியில் முக்கிய நபர்களாக செயற்பட்டனர். பல தீர்மானங்கள் இவர்களின் அனுமதியுடன் தான் மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டார். அவ்வாறு இருக்கையில் ஏன் இப்போது இவ்வாறு நடக்கின்றனர் என்பது எமக்கு தெரியவில்லை. அனுமானிக்கவும் கடினமாகவே உள்ளது. 

அதேபோல் இறுதி நேரத்தில் மஹிந்தவை நிராகரிக்கும் கதைகளை இவர்கள் கூறுகின்றனர். இதற்கும் என்னால் தெளிவான பதிலை குறிப்பிட முடியாது. கட்சியில் மஹிந்த போட்டியிடுவர் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேட்புமனுவிலும் அவர் கைச்சாத்திட்டுள்ளார். 

ஆகவே இவை அனைத்தும் ஜனாதிபதியின் அனுமதியுடன் தான் நடைபெற்றன. இந்த நிலையில் மஹிந்தவை மீண்டும் நிராகரிக்க ஏதேனும் திட்டம் இருக்குமா என்பதை எம்மால் அனுமானிக்க முடியாது. 

எனினும் அவ்வாறு ஏதேனும் இருக்குமாக இருந்தால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாகிவிடும் என்பதையும் ஜனாதிபதி தெரிந்து கொள்ள வேண்டும். 

கட்சியை ஒன்றிணைத்து பலமான கட்சியாக களமிறங்குவது என்பதே எம் அனைவரினதும் தீர்மானமாகும். அதை யாரும் சீரழிக்க ஜனாதிபதி இடமளிக்க மாட்டார் எனக் குறிப்பிட்டார்.