போலி விமர்சனங்களை தவிர்த்து NFGG போன்று அனைவரும் SLMC இன் கீழ் ஒற்றுமைப்படுவதே எமது சமூகத்துக்கு பலம் !

1505621_1608480072755254_5110394320388592052_n

முகம்மத் இக்பால் 

காத்தான்குடியை மையமாக வைத்து பொறியியலார் அப்துல் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியானது  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து முஸ்லிம் காங்கிரசின் பட்டியலில் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களில் நடைபெற இருக்கின்ற பொது தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்ததன் நோக்கமே நடைபெறுகின்ற ஆட்சிகள் நல்லாட்சி இல்லை என்றும், அரசியல்வாதிகள் தவறிளைக்கின்றார்கள் என்றும்,  குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் நல்லாட்சியை நடத்தவில்லை என்றும் கூறிக்கொண்டு, அதாவது முஸ்லிம் காங்கிரசை பலமிளக்கச்செய்வதுடன் அதற்குரிய மாற்றீடு நாங்கள்தான்  என்ற ரீதியில் முஸ்லிம் காங்கிரசின் தலைவரையும் கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்தவர்களாக தங்களது அரசியல் பயணத்தை முன்னெடுத்து சென்றனர். 

ஆனால் இவர்களால் எதிர்பார்த்த வெற்றியை இவர்களது பிரச்சாரதின் மூலம் அடைந்துகொள்ள முடியவில்லை. முழுக்க முழுக்க முஸ்லிம் காங்கிரசை விமர்சித்தார்களே தவிர, நடைமுறைக்கு சாத்தியமானதும், முஸ்லிம் மக்களினால் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான எந்தவொரு சமூக நலத்திட்டத்தினையும் இவர்களால் முன்வைக்க முடியவில்லை. இறுதியில் காத்தான்குடி நகரசபையில் ஒரு சில உறுப்பினர்களை பெற்றுக்கொண்டதே தவிர, வேறு எதிர்பார்த்த இலக்குகள் ஒன்றையும் இவர்களால் அடைந்துகொள்ள முடியவில்லை. அந்த நகர சபை உறுப்பினர்களும் நல்லாட்சியை நடத்தியதாக தெரியவில்லை.

இக்கட்சியை ஆரம்பித்ததில் இருந்து இவர்கள் செல்லுகின்ற இடமெல்லாம் இவர்களுக்கு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் ஏற்பட்டதே தவிர எதிர்பார்த்த வரவேற்புக்கள் கிடைக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாய்ந்தமருதில் இவர்கள் கொள்கை விளக்கக் கூட்டம்  என்ற ரீதியில் முழுக்க முழுக்க முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைவரையும் விமர்சிக்கப்போய் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, ஆரம்பித்த கூட்டத்தை முடிக்கமுடியாமல் இடைநடுவில் திருபிச்சென்றனர். இதனால் ஏற்பட்ட அவமானத்தினால் ஊடகவியலாளர் மகாநாட்டை கூட்டி முஸ்லிம் காங்கிரஸ் காரர்களை காடையர்கள் என்ற ரீதியில் கடுமையாக விமர்சித்திரிந்தார் அதன் தலைவர். 

இன்று 10. 07. 2015ஆம் திகதி முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரசின் ஊடகவியலாளர் மாநாட்டில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் அப்துல் ரஹ்மான் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இன்று  தான் நல்ல மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், முஸ்லிம் காங்கிரசோடு இணைந்ததும், முஸ்லிம் காங்கிரசின் பட்டியலில் போட்டியிடுவதும் வரலாற்று சிறப்புமிக்க திருப்தி அடைவதாகவும், மற்றும் முஸ்லிம் காங்கிரசையும், அதன் தலைவர் ஹக்கீம் அவர்களையும் புகழ்ந்து பேசியுள்ளார். 

அப்துல் ரஹ்மான் அவர்களின் இந்த உரையின்மூலம் ஒன்றை புரிந்து கொள்ளலாம். அதாவது இவர்களும் பத்தோடு ஒன்றுதான். “நல்லாட்சி” என்ற சொல்பதமானது தனது கட்சிக்கு வழங்கப்பட்ட தலைப்பேயன்றி வேறு ஒன்றுமில்லை. அத்துடன் அப்துல் ரஹ்மான் அவர்களது உரையின்மூலம் தாம் இதுவரை காலமும் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக கூறிய அனைத்து குற்றச்சாட்டுக்களும் அரசியல் ஆதாயத்துக்காகவும் தங்களை பிரபல்யப்படுதிக் கொள்வதற்காகவும் இட்டுக்கட்டி  கூறப்பட்டவை என்பதனை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. 

இவர்கள் மட்டுமல்ல வேறு சிலரும் அரசியலில்  தங்களை பிரபல்யப்படுத்திக் கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைவரையும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விமர்சிகிறார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிரசோ அதன் தலைவரோ இவர்களின் விமர்சனங்களையிட்டு அலட்டிக்கொள்வதில்லை. இவ்விமர்சனங்களை முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கும். இதனால் இவர்கள் பிரபல்யம் அடைந்துகொள்வார்கள். இறுதியில் தங்களது பிரபல்யத்தைக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு பதவியை அடைவதற்காக முஸ்லிம் காங்கிரசினதும், அதன் தலைவரினதும் தயவையே  நாடிச்செல்வார்கள்.  

அது போலவே இன்று முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைவரையும் கடுமையாக விமர்சித்துக்கொண்டு திரிபவர்களும் இறுதியில் நல்லாட்சியை நிலை நாட்ட புறப்பட்டவர்களைப் போலவே எதிர்காலங்களில் முஸ்லிம் காங்கிரசில் தஞ்சம் அடைவார்கள் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மையாகும். 

எது எப்படி இருப்பினும், சிறுபான்மை சமூகமான நாங்கள் ஆயிரம் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். முஸ்லிம் காங்கிரசின் மரத்தில் நாங்கள் அனைவரும் ஒற்றுமைப்படவேண்டும். இன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரை போன்று ஏனைய அனைத்து கட்சியினர்களும் ஒற்றுமைப்பட்டால்தான் எங்களது சமூகத்துக்கு பலம் அதிகரிக்கும். நாங்கள் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து நின்றால் பேரினவாதிகளுக்கே அது இலாபமாக அமையும். 

முகம்மத் இக்பால்