எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44, 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் நாடு முழுவதும் 12,021 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் தேர்தலானது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்தார்.
தேர்தலில் மாவட்டங்களின் ரீதியில் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 பேர் கட்சிகளுக்கு கிடைக்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். அந்தவகையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். நாட்டில் 22 தேர்தல் மாவட்டங்கள் உள்ளன.
அதன் படி வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணிகள் கடந்த ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி நிறைவடைகின்றது.
தேர்தல் பணிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அது தொடர்பில் விரைவில் தேர்தல்கள் ஆணையாளர் தமது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளார்.
மேலும் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 14 ஆம் திகதி அனுப்பிவைக்க முடியும். இந்நிலையில் ஆசிரியர்கள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும். ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் ஆகஸ்ட் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.
எதிர்வரும் 13 ஆம் திகதி வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்ததும் 12 மணி முதல் 1.30 மணிவரை ஆட்சேபனை தெரிவிப்பதற்கான நேரம் ஒதுக்கப்படும். அதன் பின்னர் சின்னங்கள் உறுதிபடுத்தப்படும். மாவட்ட ரீதியாக வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு
மாவட்டங்கள் வாக்காளர்களின் எண்ணிக்கை எம்.பி. க்களின் எண்ணிக்கை
கொழும்பு 1586598 19
கம்பஹா 1637 537 18
களுத்துறை 897349 10
கண்டி 1049160 12
மாத்தளை 379675 5
நுவரெலியா 534190 8
காலி 819666 10
மாத்தறை 623818 8
அம்பாந்தோட்டை 462911 7
யாழ்ப்பாணம் 529239 7
வன்னி 253058 6
மட்டக்களப்பு 365167 5
திகாமடுல்ல 465757 7
திருகோணமலை 296852 4
குருணாகல் 1266443 15
புத்தளம் 553009 8
அனுராதபுரம் 636733 9
பொலன்னறுவை 307125 5
பதுளை 620486 8
மொனராகலை 339797 5
இரத்தினபுரி 810082 11
கேகாலை 649878 9
கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.