தயாவுடன் இணைவாரா ஹக்கீம்.?

சுலைமான் றாபி

ஸ்ரீ.ல.மு. கா வினையும், அதன் தலைமைத்துவத்தினையும் இனவாதியாக தொடர்ந்தும் சித்தரிக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே, ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டுக் கொண்டு வரும் வேளை எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மு.கா தயா கமகேயுடன் இணைந்து செயற்படுமா என்ற கேள்விகள் கட்சி போராளிகள் மத்தியில் வேர்விடத்துவங்கியுள்ளது.  

கிழக்கில் இலகுவாக பாராளுமன்றம் செல்ல பயன்படுத்தும் ஒரு வாகனமாக மு.கா வினை பயன்படுத்தும் அரசியல் வாதிகள் அனைவரும் இனத்துவேஷ நடவடிக்கைகள்  மூலமாகவே பாராளுமன்றம் செல்கின்றனர் என்றும், மு.கா வானது ஒரு இனவாதக் கட்சி என்றும் அதன் தலைமை ஒரு இனத்துவேசி என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே அவர்கள் அண்மைக்காலமாக கூறி வருகின்றார். இதில் மு. கா எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடக்கூடாது என்பதிலும், மு.காவின் செல்வாக்கின் வீழ்சிகளை சரி செய்வதற்காக   ஐ.தே.கட்சியுடன்  வால்பிடிக்கின்றார் என்கின்ற அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைப்பதானால் அவரின் இனவாதக் கருத்துக்களை மக்கள் நன்கு அறியக்கூடியதாய் உள்ளது. 

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித்தேர்தலின் பின்பு கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் தேவை என்கின்ற சந்தர்ப்பம் உருவாகிய வேளை மு.கா உறுப்பினர்களைக் கொண்டு ஐ.தே.கட்சியின் தயவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது  இதே இனவாதக் கருத்துக்களை தெரிவித்த தயாகமகே போன்றோர்களால் மு.காவினர் இறுதித்தறுவாயில்  இரவோடு இரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி கிழக்கில் மு.காவின் தயவில் ஆட்சியமைக்க வழிசமைத்திருந்தனர்.

உண்மையில் அந்த வேளை இனவாதியாக தெரிந்த தயா கமகேயின் இனவாதக் கருத்துக்களால் வெறுப்புற்ற மு.கா தலைமை இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டுமா ? என்கின்ற கேள்விக்கணைகள் எழுந்துள்ளன.  இந்ததேர்தலில் தயா கமகே மற்றும் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமை வகிக்கும் மு.கா ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவார்களாயின் அது மீளவும் இனவாதத்தினை உரக்கச்சொல்லும் சக்தியாகவே மாறப் போகின்றது.

இவ்விடத்தில் மு.கா வானது தயா கமகேயுடன் ஒப்பிடும் போது அதிகளவான வாக்குப் பலத்தினைக் கொண்டுள்ளது.  அதில் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி. தயாரட்ன ஐ.தே.கட்சியுடன் இணைந்து கொண்டதால் கனிசமாக வாக்குகள் அதிகரிக்கப்பட்டாலும், அம்பாறையில் ஐ.தே.கட்சிக்கு 50,000 தொடக்கம் 53,000 வரைக்குமே வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் மு.கா வினைப் பொறுத்த வரையில் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 60,000 தொடக்கம் 63,000 வரைக்குமாக வாக்கு வங்கிகளைக்  கொண்டுள்ளது. 

எனவே இவ்வாறான வாக்கு வங்கிகளைக் கொண்டுள்ள கட்சிகள் தங்களுக்கு சார்பாக கிடைக்கும் ஆசனங்களை அதிகரித்துக் கொள்ளவே விரும்புகின்றன. அதற்காக வேண்டியே  இம்முறை அம்பாறை மாவட்டத்தில் மு.கா ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடக்கூடாது என்பதில் தயா கமகே உள்ளிட்ட சில இனவாதிகள் திரைமறைவில் காய்களை நகர்த்த துவங்கியுள்ளனர்.  இதன் ஒரு வடிவமாகவே அண்மையில் தய கமகே அவர்கள் மு.கா வினையும் அதன் தலைமையையும் கடுமையாக சாடி மு.கா அம்பாறை மாவட்டத்தில் 01 ஆசனத்தினை பெரும் என்றும், ஐ.தே.கட்சி தனித்துக் கேட்டால் இம்முறை 03 ஆசனங்களைப் பெறும் என்று மனக்கணக்குப் போட்டுள்ளார்.

இது தவிர அம்பாறையில் இரண்டு முறை தோல்வியுற்ற தயா கமகே  இம்முறை ஐ.தே.கட்சி 03 ஆசனங்களைப் பெறும் என்று கூறியதையும்,   மு.காவிற்கு ஐ.தே.கட்சியை விடை அதிகளவான வாக்குப்பலம் காணப்படும் போது இவர்களாலும்  ஏன் 03 ஆசனங்களுக்கு குறி வைக்க முடியாது  என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. எது எவ்வாறாக இருந்தாலும் மு.கா தலைமை இன்னமும் இது விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வராதவிடத்து தயா கமகே போன்றோர்களின் இனவாதக் கருத்துக்களால் மு.கா அரசியல் பிரமுககர்களும், அதன் ஆதரவாளர்களும் நொந்து போய் உள்ளனர். எனவே இவ்வாறு இருக்கும் நிலையில் முஸ்லீம்கள் ஐ.தே.கட்சிக்கு வாக்களித்து தயா கமகே போன்ற இனவாதம் பேசுபவர்களுக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

எனவே தேசிய அரசியல் நடவடிக்கைகளிலும் மற்றும் உள்ளூர் நடவடிக்கைகளிலும் மு.காவினை சாடிக்கொள்ளும் இனவாதிகள் அங்கத்துவம் வகிக்கும் கட்சியில் மு.கா இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தங்கள் ஆசனங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டுமா அல்லது தங்களது தனிப்பட்ட வாக்குப் பலத்தினைக்கொண்டு தனித்துப் போட்டியிட்டு தங்கள் ஆசனங்களை அதிகரித்துக் கொள்ளலாமே என்ற வேண்டு கோள்களும் மு.கா தலைவரின் காதுகளுக்கு எட்டத் துவங்கியுள்ளது. 

எது எவ்வாறாக இருந்தாலும் இவைகளெல்லாம் புறந்தள்ளிவிட்டு மு.கா வும் அதன் தலைமையும் அம்பாறையில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் “இவ்வளவு கதைத்தும் ஹக்கீமிற்கு ரோஷம் இல்லை” என்ற கதையே உலாவரும் என்பதில் ஐயமில்லை. எனவே இந்தத்தேர்தலில் அமைச்சர் ரஊப்  ஹக்கீம் தலைமையிலான மு.கா அம்பாறையில் தயாவுடன் இணைந்து தேர்தலில் குதிக்குமா என்பது மூடுமந்திரமாகவே இருக்கின்றது.