சமூக நலன்களை மழுங்கடித்து, தனிப்பட்ட சொகுசுகளுக்கு முன்னுரிமை வழங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏமாற்று அரசியல் பயணத்தில் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டுமா என்று எனது மனச்சாட்சி உறுத்திக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளரும் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
உம்ரா கடமையை மேற்கொள்வதற்காக புனித மக்காவுக்கு சென்றுள்ள ஏ.எம்.ஜெமீல், அங்கிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“புனித உம்றா கடமைக்காக எனது குடும்பத்துடன் புனித கஃபத்துல்லாஹ்வுக்கு வந்து அக்கடமையை நிறைவேற்றிய பின் இப்புனிதமிகு மண்ணிலிருந்து இம்மடலை எழுத வேண்டும் என எனக்கு ஏற்பட்ட உந்துதலின் காரணமாக இதை எழுதுகின்றேன்.
எமது நாட்டு முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக்காக மறைந்த மாமனிதர் அஷ்ஷஹீத் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கமானது, அவரது அகால மரணத்தைத் தொடர்ந்து தங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, கடந்த 15 வருடங்களாக நீங்கள் அதற்கு தலைமைத்துவம் கொடுத்து வருகின்றீர்கள்.
என்னைப் பொறுத்தவரையில் மறைந்த தலைவர் அஷ்ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடன் இக்கட்சிக்காக எனது சக்திக்கு உட்பட்ட வகையில் எவ்வாறு அர்ப்பணிப்புடன் செயற்பட்டேனோ அதனை விட அதிகளவு அர்ப்பணிப்புடன் தங்களின் தலைமைத்துவத்தின் கீழ் தங்களுடன் இணைந்து இக்கட்சிக்காக நான் பணியாற்றிக் கொண்டிருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
நான் 2006 ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதிலிருந்து நேரடி அரசியலில் இறங்கி, அதனை தொடர்ந்து 2008ஆம் ஆண்டு முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி, பின்னர் 2012 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் போட்டியிட்டு அதிலும் வெற்றியடைந்து சுமார் 10 வருடங்களாக கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன்.
இருந்த போதிலும் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய வகையில் எனக்கு அதிகாரம் எதுவும் கிடைக்கவில்லை என்பது என்னை நம்பி வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள போதிலும் நான் கட்சி மற்றும் சமூக நலன் கருதி அதனை பொருந்திக் கொண்டுள்ளேன்.
ஆனால் எனது சொந்த ஊரான சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை என்னை வெகுவாக பாதித்துள்ளது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
நமது கட்சியின் மூலம் எனக்கு அரசியல் அதிகாரம் ஏதும் கிடைத்து அதன் ஊடாக நான் எனது ஊருக்காக சேவையாற்றுவதை விட அந்த ஊர் மக்களின் நீண்ட கால தேவையாகவும் நிரந்தரமான அரசியல் அதிகார அலகாகவும் இருந்து வருகின்ற உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கிக் கொடுப்போமானால் நீங்களும் நானும் நமது கட்சியும் அந்த ஊருக்கு செய்கின்ற பெரும் வரலாற்றுப் பேறாக அது அமையும் என நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடன் இணைந்து முஸ்லிம் சமூகத்திற்காக தென் கிழக்கு பல்கலைக் கழகத்தை உருவாக்கியது போன்று தங்கள் மூலம் எனது சொந்த ஊரான சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்ற கனவுடன் இருந்து வந்த எனக்கு இன்று ஏமாற்றமே கிடைத்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நமது கட்சிக்கு 90 வீதத்திற்கும் மேல் வாக்களிக்கின்ற ஒரே ஒரு ஊர் எனது சாய்ந்தமருது என்பதை நான் பெருமையாக பறைசாட்டுவதில் தவறில்லை என நினைக்கின்றேன். அத்துடன் என்னை அந்த ஊர் மக்கள் மூன்று முறை மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்து என் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கு நானும் கட்சியும் அந்த மக்களுக்கு செய்த கைமாறுதான் என்ன என்று என் மனச்சாட்சி உறுத்துகின்றது.
நமது முஸ்லிம் காங்கிரசையும் உங்களையும் என்னையும் ஆதரித்தமைக்காக அவர்கள் நம்மிடம் கேட்பது தனியான உள்ளூராட்சி மன்றத்தை மாத்திரம்தான். அக்கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பதில் நாம் பின்னடிப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று நான் ஆணித்தரமாக கூறுவதற்காக நீங்கள் என்னை கடிந்து கொள்ளலாம். ஆனால் நமது கடமையையும் பொறுப்பையும் அவ்வளவு இலகுவாக தட்டிக் கழித்து விட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் மாற்று அரசியல் தலைமைத்துவத்தினால் அதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில் நமது கட்சி முன்னாள் எம்.பி. ஒருவர் தங்களைக் கொண்டு அதனை தடுத்து நிறுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. அந்த முன்னாள் எம்.பி. சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்திற்கு எதிரானவர்தான் என்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அவரது சித்து விளையாட்டுக்கு தலைவராகிய நீங்களும் துணை போயுள்ளீர்கள் என்பதே எமது மக்களுக்கு ஜீரணிக்க முடியாத கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இக்குற்றச்சாட்டு எந்தளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால் நீங்கள் அதனை நிறைவேற்றித் தருவதாக பொறுப்பேற்று பல மாதங்கள் கடந்தும் அது நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதனால் அந்த சந்தேகம் மக்கள் மத்தியில் வலுத்துள்ளது என்பதை உங்களுக்கு பணிவுடன் தெரியப்படுத்துகின்றேன். இப்போதும் கூட நமது கட்சியினால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பதில் உங்களுக்கு அந்த முன்னாள் எம்.பி.யே முட்டுக்கட்டை போட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.
ஆனால் ஒரு அரசியல்வாதிக்காக ஒரு ஊரின் ஒட்டுமொத்த அபிலாஷையை நீங்கள் குழிதோண்டி புதைத்து விட முடியாது என்பதை நான் வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றேன். ஏனென்றால் இவ்விடயத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது நானே என்பதை உங்களுக்கு நான் விபரிக்கத் தேவையில்லை. சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் இழுத்தடிக்கப்படுவதால் எமது மக்கள் மத்தியில் முகம் கொடுக்க முடியாமல் நான் சங்கட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
பாராளுமன்றத் தேர்தல் வந்துள்ள நிலையில் சாய்ந்தமருது மக்கள் மத்தியில் நானும் நீங்களும் என்ன முகத்துடன் செல்ல முடியும் என்று நான் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றேன். கட்சிக்காக மக்களை புறக்கணிப்பதா அல்லது மக்களுக்காக கட்சியை உதறித் தள்ளுவதா என்று தீர்மானிக்குமாறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் எனக்கு பெரும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
கொள்கை, கோட்பாடு மற்றும் வாக்குறுதிகளை மீறி நடப்போருக்கு இதுவெல்லாம் தலையிடியாக அல்லாமல் சகஜமாக இருக்கலாம். முஸ்லிம் தனி அலகு, கரையோர மாவட்டம், முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை, பாதுகாப்பு நெருக்கடி என்று சமூகப் பிரச்சனைகளை பட்டியலிட்டு தேர்தல் காலங்களில் மாத்திரம் கோஷமிட்டு, ஒரு புறம் அரசாங்கத்தை எச்சரித்துக் கொண்டு மறுபுறம் மக்களின் வாக்குகளை சூறையாடுகின்ற நமது கட்சி தலைவர்களுக்கு சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற பிரச்சினை ஒரு பாரதூரமான விடயமாக தென்படாது என்பது எனது அனுமானமாகும்.
நமது கட்சியின் பொக்கிஷம் எனவும் கரையோர மாவட்டம் மற்றும் காணி உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக துணிந்து குரல் கொடுப்பவர் எனவும் நாம் இது வரை காலமும் நம்பியிருந்த செயலாளர் நாயகம் ஹசன் அலி கூட ராஜாங்க அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டதுடன் அடங்கிப் போய்விட்டார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
கடந்த மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்கள் பேரினவாத சக்திகளினால் அச்சுறுத்தப்பட்டு நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட போது எனது அன்புக் கட்டளையை ஏற்று என்னுடன் சவூதி அரேபியா உட்பட அரபு நாடுகளுக்கு வந்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் சில அரபு அமைப்புகளையும் சந்தித்து இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை ஓரளவு உறுதிப்படுத்துவதற்கு முன்வந்த நீங்கள் கூட இன்று எமது சமூகத்தினதும் பிரதேசங்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முன்வராமல் இருப்பது எனக்கு பெரும் கவலையாக இருக்கிறது.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் எந்த நோக்கத்துடன் இக்கட்சியை ஆரம்பித்தாரோ அந்த நோக்கத்தில் இருந்து நமது கட்சி திசைமாறிச் செல்வதை என்னால் உணர முடிகிறது. இந்நிலையில் இத்தகைய ஏமாற்று அரசியல் பயணத்தை இனியும் தொடர வேண்டுமா என்று இப்புனித மக்காவில் இருந்து கொண்டு எனது மனச்சாட்சி கேள்வி எழுப்புகிறது.
நான் அரசியல் பரம்பரையில் வந்தவனும் இல்லை, பணக்கார குடும்பத்தில் பிறந்தவனும் இல்லை. இந்த இரண்டும் இல்லாத நிலையிலேயே அஷ்ரப் அவர்களின் கொள்கை கோட்பாடுகளினால் கவரப்பட்டு போராட்ட குணத்துடன் முஸ்லிம் காங்கிரசில் எனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன். ஆனால் இப்போது நமது கட்சிக்குள் எந்த கொள்கை, கோட்பாடுகளும் இல்லை போராட்ட வழி முறையும் கிடையாது. அதனால்தான் இந்த அரசியல் பயணத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு என் உள்ளம் தூண்டிக் கொண்டிருக்கிறது.
ஆகையினால் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் உட்பட நமது சமூகத்தினதும் பிராந்தியங்களினதும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு அரசியல் தலைமைத்துவம் என்ற ரீதியில் நீங்கள் அவசரமாக முன்வர வேண்டும் என தங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்” என்று ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.