பள்ளிவாசல் நிருவாகிகள், சம்மேளனங்கள் தேர்தல்களில் மாத்திரம் விழித்துக் கொள்ளும் நிலை மாற வேண்டும் !

parliament-new_Fotor
சபீக் ஹுசைன்  
 தேர்தல் காலம் வந்துவிட்டால் பள்ளிவாசல்கள் விழித்துக் கொள்வது வழமையாகி விட்டது. சமூக முன்னேற்றத்தில் பள்ளிவாசல்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருந்த போதிலும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல் நிருவாகிகள், சம்மேளனங்கள் தேர்தல்களில் மாத்திரம் விழித்துக் கொள்வதானது  பிரதேசவாத தீ பரவுவதற்கு பிரதான காரணியாக  அமைந்து விடுகின்றது.
ஒரு சமூகத்தின் பிரதான கட்டமைப்பு அப்பிரதேச பள்ளிவாயல் என்பது. அந்த சமூகத்தின் எல்லா வகையான பிரச்சினைகள், சவால்கள் பற்றியும் அங்கு பேசப்பட வேண்டும்.
அந்த பிரதேசத்தின் வளங்கள், பற்றாக்குறைகள், அத்தியாவசிய தேவைகள், சமூக ஒழுங்கீனங்கள், கல்விசார் நடவடிக்கைகள், நிரந்தர நோயாளிகள் பற்றிய விபரங்கள், அனாதைகளுக்கான உதவிகள், ஏழைகளின் வாழ்வாதார வசதிகள், பெண் பிள்ளைகளின் விவகாரங்கள் போன்று அனைத்து விடயங்களும் அலசப்படும் ஒரு மைய நிலையமாக பள்ளிவாயல்கள் மாறவேண்டும், அதற்காக இயங்க வேண்டும். அதற்கான தீர்வுத்திட்டங்கள் பற்றி யோசிக்க வேண்டும். அதற்கான முயற்சிகள், நிதிசார் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். சகாத் சதகா திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.
பள்ளிவாசல்களின் கடமைகளாக மேற்சொன்ன பல விடயங்கள் இருந்த போதிலும் அவற்றில் போதிய அக்கறை கவனம் செலுத்தாமல் தேர்தல்களில் மாத்திரம் விழித்துக் கொள்வதானது  ஆரோக்கியமாகாது. எங்கள் ஊருக்கு எம்.பி. தேவை என்ற கோஷம் நியாயமாக இருந்தாலும் அடுத்த ஊர்களின் நியாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். சாதாரண பாமரன் சிந்திப்பது போன்று பள்ளிவாசல் நிருவாகிகள், சம்மேளனங்கள் சிந்திப்பது எந்த வகையில் நியாயம். முன்மாதிரியாக இருப்பவர்களே பிழை விட்டால் மற்றவர்களுக்கு வழிகாட்டுவது யார்?
அரசியல்வாதிகளின் எடுபிடிகளாகவே பள்ளிவாசல்களின் பல நிருவாகங்கள் இருக்கின்றன. அரசியல்வாதிகள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே பள்ளிவாசல் நிருவாகிகள், சம்மேளனங்களை பயன்படுத்துகின்றனர் என்பது கசப்பான உண்மை. அதிகமான பள்ளிவாயல் நிருவாகிகள்  தங்களது சுயநலங்களை அடைந்து கொள்வதற்காக ஊரின் தேவை என்ற கோஷத்தை கையில் எடுத்துள்ளனர். இவர்களுக்கு மத்தியிலும் சமூக சிந்தனையோடு பணி செய்கின்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.
எனவே   ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல் நிருவாகிகள், சம்மேளனங்கள் தேர்தல்களில் மாத்திரம் விழித்துக் கொள்ளும்  நிலை மாற வேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.