வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குறிய வெகுமதியான வோட்டுகள் விற்பனைக்கல்ல…

Graphic1
ஜீஷான் அசீர்
**எமது வெகுமதியான வோட்டுகள் விற்பனைக்கல்ல…**
01. பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு இலங்கையரும் வாக்களிக்க வேண்டும். அதே போல, 18 வயது நிரம்பிய அனைவரும் பெயரை வாக்காளராக இணைத்துக்கொள்ள வேண்டும். பணத்திற்காக விலைமதிப்பற்ற ஓட்டுகளை விற்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்.
02. ஓட்டு விற்பனை என்பது அரசியலை பீடித்த புற்றுநோய். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் இழிசெயல் அனைத்து ஊழல்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது.
03. நியாயமான, பாகுபாடில்லாத, சமவாய்ப்பளிக்கக் கூடிய தேர்தல் நடைபெற வேண்டும் என்பது பன்னாட்டளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு நெறிமுறை ஆகும். எந்த ஒரு கட்சியும் அளவுக்கு அதிகமாக பணத்தை செலவிடுவதன் மூலம், மற்றவர்களை விட கூடுதலான விளம்பரத்தையோ, வாய்ப்பையோ பெறுவதை தடுக்க வேண்டும் என்பதும் ஏற்கப்பட்ட விதி ஆகும்.
04. ஐநா மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள பொதுக் கருத்து ஆவணத்திலும் தேர்தல் செலவுகளில் நியாயமான கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமானது. இல்லாவிட்டால் வாக்காளர்கள் வேட்பாளரை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் சூழல், அதிகமாக செலவிடும் வேட்பாளரால் பாதிக்கப்பட்டுவிடும் எனக் கூறப்பட்டுள்ளது.
05. வாக்களிக்கப் பணம் கொடுப்பது தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படையையே முற்றிலுமாகத் தகர்க்கும், சகிக்கவே முடியாத கொடுங்குற்றம் ஆகும். ரகசியமாக வாக்களித்தல் மற்றும் அளவுக்கு மீறிய வலியுறுத்தல் ஏதுமின்றி சுதந்திரமாக வாக்களித்தல் என்கிற தேர்தலின் மிக முக்கிய அடிப்படை கோட்பாடுகளுக்கு இது எதிரானதாகும்.
06. தேர்தல் என்பது சட்டத்தை உருவாக்கும் இடத்துக்கான போட்டியாகும். சட்டத்தையே உருவாக்கும் பணிக்கு செல்ல விரும்பும் கட்சிகள், அந்த சட்டத்தை மதிப்பவையாகவும் இருக்க வேண்டும். இது ஒரு மிக அடிப்படையான, மிக இயல்பான, மிக நியாயமான, கட்டாய எதிர்பார்ப்பாகும்.
07. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும், அந்தக் கட்சியின் தலைமையும் – 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட லஞ்சமாக கொடுக்க மாட்டோம் என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
08. இத்தகைய செயல்களில் எந்த ஒரு வேட்பாளரோ, கட்சித் தொண்டரோ ஈடுபட்டால் – அவர்களை உடனுக்குடன் தங்கள் கட்சியில் இருந்து நீக்க அரசியல் கட்சிகள் உறுதி ஏற்க வேண்டும்.
09. இலங்கை சட்டங்களின் கீழ் வாக்களிக்கப் பணம் கொடுப்பதோ, வாங்குவதோ குற்றம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டிய கடமை இலங்கை தேர்தல் ஆணையகத்துக்கு இருக்கிறது.
10. வாக்களிக்க பணமோ, பொருளோ கொடுப்பவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் தொகுதிகளின் தேர்தல் முடிவை செல்லாததாக அறிவித்து மறுதேர்தல் நடத்த வேண்டும்.
11. வாக்களிப்பது ஒரு அடிப்படை உரிமை. அதனை காசுக்கு விற்கக் கூடாது. இதன் ஒரு அடையாளமாக, ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் – எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்று எழுதி வைக்க வேண்டும். 
ஒவ்வொரு ஊரும் எங்கள் ஊரில் வாக்கு விற்பனைக்கு அல்ல என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு சொல்வதை எல்லோரும் பெருமையாக கருத வேண்டும்.
12. 1948/02/4 அன்று வெள்ளையனே வெளியேறு என்று போராடியது போல இன்று ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் – கொள்ளையனே வெளியேறு என்று மக்கள் ஒன்றுபட வேண்டும்.
13. அனைத்து ஊழல்களின் தாய் எனப்படும் இந்தக் கொடிய கேட்டை ஒழித்து, ஜனநாயகத்தையும் இலங்கையின் எதிர்காலத்தையும் காப்பாற்ற வேண்டியது பொறுப்புள்ள ஒவ்வொரு இலங்கை குடிமக்களின் கடமையும் ஆகும்.
நன்றி