வெளிநாட்டுத் தூதுவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் – ஜனாதிபதி

images

 

வெளிநாட்டுத் தூதுவர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றும் விதம் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தமக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் ஊடாக அது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கென தனியானதொரு அலுவலகத்தை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், தாய்நாட்டின் விம்பத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லல் உள்ளிட்ட, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து அந்த அறிக்கையில் விபரமாக தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

33 நாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (03) நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைக் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டை உரியவாறு கையாள்வதுடன், தமக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள நாடுகளில் தூதரக சேவைகளை பயன்மிக்க வகையில் முன்னெடுப்பதற்கு புதிய தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.