மகிந்தவுக்கு முடியுமானால், அவர் தான் ஜனவரி எட்டு அன்று பெற்ற 58 இலட்சம் வாக்குகளில் 25 இலட்சத்தையாவது பெற்று காட்டட்டும் – மனோ

images

மகிந்தவுக்கு முடியுமானால், அவர்  தான் ஜனவரி எட்டு அன்று பெற்ற 58 இலட்சம் வாக்குகளில் 25 இலட்சத்தையாவது பெற்று  காட்டட்டும். அவரை சுற்றி இன்று இருக்கும் அரசியல் கோமாளிகள், இனவாதிகள், மதவாதிகள், கூட்டுக்களவாணிகள், தமிழ்-முஸ்லிம் துரோகிகள் ஆகியோரை வெற்றி பெற செய்துக்காட்டட்டும்.  இந்த முறை மகிந்தவுக்கு கிடக்கப்போவது பிரியாவிடை இல்லை. அது அதிர்ச்சிவிடை. அதை தரப்போவது, தமிழ் பேசும் மக்கள் அல்ல. மகிந்தவுக்கு எதிர்வரும் தேர்தலில் அதிர்ச்சி தரப்போவது, இந்நாட்டு சிங்கள மக்கள் ஆகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி  தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
  
நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில் கட்சி தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
 
புதிய நிலைமைகள் இந்நாட்டு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமது மக்கள் ஆணைக்கு மதிப்பு என்ன என்பது பற்றி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள். இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல. இனவாதத்துக்கும், மதவாதத்திற்கும், அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக தாம் வழங்கிய ஆணையை தமிழ் பேசும் மக்கள் ஒருபோதும் வாபஸ் வாங்கிக்கொள்ள போவது இல்லை.  புதிய நிலைமைகளை கண்டு நாம் அஞ்சப்போவதும் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் தந்த நாகரீகமான பிரியாவிடை தனக்கு போதவில்லை என்று மகிந்த மீண்டும் வருகிறார். அவர் அவரட்டும். வந்து வாங்கி செல்லட்டும். எதிர்வரும் பொது தேர்தலில் அவருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத பதிலை தர நாம் தயாராகவே இருகின்றோம்.

எனவே இனவாதத்திற்கு எதிராக தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனவரி எட்டாம் திகதி சிங்கள மக்களுடன் சேர்ந்து வழங்கிய மக்களாணைக்கு அர்த்தம் என்ன என்பது பற்றியும், தமிழ் பேசும் மக்கள் இனியும் சிங்கள அரசியல்வாதிகளையும், சிங்கள பெரும்பான்மை கட்சிகளையும் நம்பலாமா? கூடாதா? என்பது பற்றியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
 
இன்று, நாடு முழுக்க சிங்கள மக்கள் மத்தியிலும்  மிகப்பெரும் அதிருப்தி மகிந்தவின் மீது ஏற்பட்டுள்ளது என்பதான  செய்திகள் நாடெங்கும் இருந்து வந்துக்கொண்டிருக்கின்றன.  கடந்த தேர்தலில் அவர் பயன்படுத்திய அரச வளங்கள், போலிஸ், இராணுவம், அரச ஊடகங்கள் இன்று அவர் வசம் இல்லை. மகிந்தவுக்கு முடியுமானால், அவர்  தான் ஜனவரி எட்டு அன்று பெற்ற 58 இலட்சம் வாக்குகளில் 25 இலட்சத்தையாவது பெற்று  காட்டட்டும். அவரை சுற்றி இன்று இருக்கும் அரசியல் கோமாளிகள், இனவாதிகள், மதவாதிகள், கூட்டுக்களவாணிகள் ஆகியோரை வெற்றி பெற செய்துக்காட்டட்டும்.  இந்த முறை மகிந்தவுக்கு கிடக்கப்போவது பிரியாவிடை இல்லை. அது அதிர்ச்சிவிடை. அதை தரப்போவது, தமிழ் பேசும் மக்கள் அல்ல. மகிந்தவுக்கு எதிர்வரும் தேர்தலில் அதிர்ச்சி தரப்போவது, இந்நாட்டு சிங்கள மக்கள் ஆகும்.  
 
ஜனவரி எட்டாம் திகதி இந்நாட்டு மக்கள் வழங்கிய மக்கள் ஆணை தொடர்பில் தமது இன்றைய நிலைப்பாட்டை இனியும் தாமதியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உடன் அறிவிக்க வேண்டும். மகிந்தவை உள்வாங்கும் எந்த ஒரு தீர்மானத்துக்கும் ஜனவரி எட்டு அன்று ஆணையை வழங்கிய மக்கள் உடன்பட மாட்டார்கள் என்பதை ஜனாதிபதி அறிந்துக்கொண்டுள்ளார் என்றும், தனது கட்சி எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும், மகிந்தவை உள்வாங்கும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி இல்லை என்றும் நாம் நம்புகின்றோம்.