மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் தலைமைத்துவ மட்டத்திற்கு வர இடமளிப்பது மக்களின் நோக்கத்திற்கு எதிரானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
நீர்கொழும்பில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி உலர் உணவுப் பொருட்களை நீர்கொழும்பில் இன்று பகிர்ந்தளித்தார்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்ததாவது;
கடந்த குறுகிய காலப்பகுதியைத் தவிர, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமே நாட்டிலுள்ள கட்சிகளுள் எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தத்தை பிரயோகிக்காத கட்சியாகும். அதுவே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மரபு. கடந்த ஒரு தசாப்த காலமாக அந்த மரபு பாதிக்கப்பட்டிருந்தது. மீண்டும் அதனை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்காக ஜனவரி மாதம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
என்றார்.
அத்துடன், நீதிமன்றம் முறையாக செயற்பட்டிருந்தால் இன்று பிரதமர் பதவியைக் கோருபவர்கள் சிறையில் இருந்திருப்பார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அவ்வாறானவர்களை மீண்டும் தலைமைத்துவ மட்டத்திற்கு வர இடமளித்தால் மக்களின் அபிலாஷைகள் மீண்டும் தூக்கியெறியப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.