சர்வாதிகார பாதையில் இருந்து விடுபட்டு நாடு இன்று ஜனநாயகத்தின் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. மீண்டும் மஹிந்தவின் கையில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்சயம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் முட்டாள்களாக செயற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஏற்பட்டிருக்கும் பிரதமர் வேட்பாளருக்கான போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
கடந்த பத்து ஆண்டுகளாக இந்த நாடு பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. பயங்கரவாத யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது, அதேபோல் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதேபோல் சர்வாதிகார ஆட்சியாளர்களின் கடும்போக்கு அரசியலுக்கும் நாடு முகம் கொடுத்தது. வெறுமனே யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டை ஆயுத போராட்டத்தில் விடுவித்ததாக கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றிய மஹிந்த கூட்டணி நாட்டை அழிவின் பாதையில் கொண்டு சென்றுவிட்டது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் நாமும் ஆவலோடு இருந்தோம். யுத்தம் நடத்தப்படாது இடைநடுவே புலிகளுக்கு ஆதரவாக அரசாங்கம் செயற்பட ஆரம்பித்த போது ஜாதிக ஹெல உருமையவே தொடர்ந்து யுத்தத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. நாம் கொடுத்த அழுத்தத்தின் காரணத்தினால் தான் அரசாங்கம் தொடர்ந்து யுத்தத்தை முன்னெடுத்தது.
யுத்தம் முடிவடைந்தவுடன் நாட்டை மாற்றுப் பாதையில் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தும் முன்னைய அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் தமது அதிகார ஆசையில் சர்வாதிகார ஆட்சியை கடுமையாக்கியமையும் நாட்டில் அதிகாரக் குவிப்பை மேற்கொண்டமையுமே நாம் மஹிந்தவின் அரசாங்கத்தில் இருந்து வெளியேற பிரதானமான காரணமாக அமைந்தது.
கடந்த ஜனவரி மாதம் இந்த நாட்டில் மிக முக்கிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் சர்வாதிகாரமாக பயணித்த ஆட்சிப் பாதை கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலுடன் ஜனநாயகத்தின் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக ஒன்றிணைத்து ஏனைய தமிழ்,சிங்கள, முஸ்லிம் கட்சிகளையும் ஒன்றிணைத்து இந்த ஆட்சியை அமைத்துள்ளோம்.
இந்த ஆட்சியில் நாடு சரியான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. ஆகவே இப்போது நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுடன் மீண்டும் பல கட்சி அரசியல் முறைமை உருவாக்கும் சர்வாதிகாரப்போக்கு இல்லாத, அனைத்துக் கட்சிகளுக்கும் முன்னுரிமை வழங்கும் வகையில் சரியானதொரு அரசியல் முறைமை உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
கேள்வி :- மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவது சாத்தியமானதா ? ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
பதில்: மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி முயற்சிக்க நினைப்பது மிகவும் முட்டாள் தனமானதொரு செயற்பாடாகும். இத்தனை காலமும் நாம் போராடியதும் சர்வாதிகார குடும்ப அரசியலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காகவேயாகும். அவ்வாறான நிலையில் மீண்டும் மஹிந்தவை ஆதரித்துக்கொண்டு வர நினைப்பது ஏன்? மீண்டும் மஹிந்த கூட்டணியிடம் நாட்டை ஒப்படைத்தால் நாடு அழிவது உறுதி. அதேபோல் மஹிந்தவால் இனிமேல் அரசியலில் கால்தடம் பதிக்க முடியாது. அவரால் மீண்டும் மக்களின் ஆதரவை பெறமுடியாது. மஹிந்த மற்றும் அவரது குடும்ப அரசியல் வாதிகளைப்பற்றி மக்கள் நன்றாக அறிந்துகொண்டுள்ளார். அவ்வாறான நிலையில் மக்கள் மீண்டும் மஹிந்தவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கேள்வி :- பொதுத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமைய தனித்து போட்டியிடுமா?
பொதுத் தேர்தலில் நாம் தனித்து களமிறங்குவதா அல்லது கூட்டணியில் களமிறங்குவதா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானம் இல்லை. இவ்வார இறுதியில் நாம் கட்சி கூட்டத்தில் இறுதி முடிவை எடுப்போம்.