அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ், சாய்ந்தமருது பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.மஜீத், கிராம சேவை தலைமை அதிகாரி எம்.எம்.நளீர், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பி.எம்.ரஜாய், சாய்ந்தமருது விளையாட்டு கழகங்களின் சம்மேளன முக்கியஸ்தர்களான எம்.எம்.றபீக்., ஏ.ஆப்தீன், எம்.எம்.கான், எம்.எம்.ஜஹான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் அவர்களின் முயற்சியினால் கிழக்கு மாகான சபை ஒதுக்கீடு செய்துள்ள நிதியின் மூலம் சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் விசேட திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.
இத்திட்டம் குறித்து இக்கலந்துரையாடலில் அவர் விளக்கமளித்ததுடன் அது தொடர்பான ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டார்.
முதல்வரின் இத்திட்டத்தை வரவேற்ற விளையாட்டு கழகங்களின் சம்மேளன பிரதிநிதிகள், தாம் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தனர்.
இம்மைதான அபிவிருத்தித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வேண்டிய உத்தேச வேலைகள் பற்றியும் தொழில்நுட்ப ஆலோசனைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
எதிர்வரும் இரு வார காலத்தினுள் இவ்வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டதுடன் அதற்கு வேண்டிய ஒழுங்குகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு முதல்வர், அதிகாரிகளைப் பணித்தார்.