விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்களே தெரியும் என்ற சாதனையை ஒரு சிறுமியின் அன்பு தகர்த்தெறிந்துள்ளது. 4 நிமிடத்திற்குள் ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த வீடியோ யூ-டியூபில் வைரல் ஹிட்டாகி தீயாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசித்து வரும் 13 வயது சிறுமி ஸ்டெபனிக்கு அப்பா என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அவரைப் பார்த்து, பேசி பல மாதங்களாகின்றன. காரணம், விண்வெளி வீரரான அவரது அப்பா, சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கிறார். பூமியில் இருந்து கொண்டு அவருடன் எப்படிப் பேச முடியும்? ஆனால் அவளுக்கோ தன் அப்பாவிடம் “நா உன்ன ரொம்ப மிஸ் பண்றேம்பா… சீக்கிரமா விட்டுக்கு வா..ன்னு” சொல்லணும். எப்படி முடியும்?
“முடியும்” என்று முன் வந்தது பிரபல கார் கம்பெனியான ஹூண்டாய். ஸ்டெபனி தனது அப்பாவிடம் சொல்ல நினைத்ததை ஒரு சின்ன கடிதமாக எழுதித்தர சொன்னது அந்த நிறுவனம். அவளுடைய கையெழுத்தை அப்படியே எடுத்துக் கொண்டு பல வாரங்கள் லாஜிஸ்டிக் நிபுணர்களுடன் வேலை செய்தது. அதன்பின் சிவில் என்ஜினீயர்களுடன் இணைந்து அதை லே-அவுட்டாக வடிவமைத்து, ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தில் அதை அப்படியே காரில் பொருத்தியது.
ஸ்டெபனி காகிதத்தில் எழுதியதை பிரம்மாண்டமான பாலைவனத்தில் எழுதுவதே அந்நிறுவனத்தின் திட்டம். அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்தன. இதற்காக நிவேடாவில் உள்ள டிலாமர் என்ற வறண்ட பாலைவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு 11 கார்கள் பிரம்மாண்டமாக அணிவகுத்து நின்றன. அந்த கார்களுக்கு ஆணிகள் பதிக்கப்பட்ட டயர்கள் பொருத்தப்பட்டன. இதனால், காரின் டயர்கள் எழுத்தாணியாக மாறின.
அவள், கடிதத்தில் எழுதியது இதுதான் “Steph loves you!”. புழுதி பறக்கும் அந்த வறண்ட நிலத்தில் துல்லியமாக காரை ஓட்டிய டிரைவர்கள் ஸ்டெபனியின் கையெழுத்தை தத்ரூபமாக எழுதினர். இதை ஹெலிகாப்ட்ரில் சென்ற ஸ்டெபனி பார்த்து ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றாள். சிறிது நேரத்தில் ஸ்டெபனியின் அப்பாவிடமிருந்து வீடியோ அழைப்பு வந்தது.
விண்வெளியில் இருந்து தன் பாச மகள் மண்ணில் எழுதிய கடிதத்தை புகைப்படம் எடுத்த அவர், அங்கிருந்து அதைக் காட்டியபடி மகளுக்கு ஐ லவ் யூ சொன்னார்.
காரால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட புகைப்படம் என்ற வகையில் இது கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளது.