‘மகிந்தவை எதிர்த்து பிறிதொரு சிக்கலில் வீழ்ந்துள்ளோம்’ – ஹக்கீம்

rauff-hakeem-575-01er

மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து அவரை நிராகரித்து தற்போது பிரிதொரு சிக்கலில் வீழ்ந்துள்ளோம். அமைச்சரவையில் எதேச்சாதிகாரமாக செயற்படும் சிலர் சுதந்திரக்கட்சியில் ஒட்டி ஜனாதிபதியின் ஆசனத்தை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இவ்விடயத்தில் சு.க விழிப்பாகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்  என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்தார். 

மஹிந்த ராஜபக்ஸவின் அமைச்சரவையில் அவருடன் எனக்கு முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும் தற்போதைய அமைச்சரவையில் பேசுவதற்குக்கூட எமக்கு சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்ற வகையில் சர்வாதிகாரம் தலைதூக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். 

அவர் இங்கு மேலும் கூறுகையில், 

புதிய தேர்தல் முறைமையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு சர்வாதிகார போக்குகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அமைச்சரவையில் பல சந்தர்ப்பங்களில் எனக்கும் அவருக்கும் இடையில் பல்வேறு முரண்பாடுகள் இருந்து வந்தன. எனினும் இன்றைய அமைச்சரவையில் எமது குரல்கள் நசுக்கப்படுகின்றன. எமது கருத்துக்களை, ஆலோசனைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை. தான் தோன்றித்தனமாக செயற்படுகின்ற சிலர் அமைச்சரவைக்குள் உள்ளனர். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து நிராகரித்த நாம் தற்போது வேறு ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். 

அமைச்சரவைக்குள் இருக்கும் சிலர் சுதந்திரக் கட்சியில் ஒட்டிக் கொண்டு ஜனாதிபதியின் ஆசனத்தை ஆக்கிரமிப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் சுதந்திரக் கட்சி விழிப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருத்தல் வேண்டும் என்றார்.