நேர்காண்டவர்: விபுலன்
அண்மைய காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் அதிகமாக பேசப்பட்ட பெயர்களில் ஒன்றான அன்வர் எம் முஸ்தபா வை எமது நிருபர், சாய்ந்தமருது சிம்ஸ் கேம்பஸ் வளாகத்தில் சந்தித்தார்.அவருடனான எமது நிருபரின் சந்திப்பில் அவர் கூரிய கருத்துகளையும் அவர் பற்றிய சிறிய அறிமுகத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
நிருபர்: சலாம்,உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் இந்த செவ்வியை ஆரம்பிக்க உள்ளோம் அதனால் உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை தாருங்கள்.
முஸ்தபா: அம்பாறை மாவட்டத்தில் மாளிகைக்காடு கிராமத்தில் பிறந்த நான் சம்மாந்துறையில் திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஆரம்ப கல்வியை சாய்ந்தமருது மஸ்ஹருஸ் ஷம்ஸ் வித்தியாலத்திலும் உயர்கல்வியை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் நிறைவு செய்து பின்னர் கணனித்துறையில் பிரித்தானிய கணனித்துறை சங்கத்தின் தொழில்சார் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டதுடன் பாகிஸ்தானிலுள்ள ஹம்டாட் பல்கலைகழகத்தில் கணணித்துறையில் முதுமாணிப் பட்டத்தை பெற்றதோடு பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் இராஜந்திர உத்தியோகசார் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்துள்ளேன்
நிருபர்: உங்கள் தொழில் சார் அனுபவங்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முஸ்தபா: நான் ஒருபிரபலமிக்க தனியார் கல்விநிலையத்தில் விரிவுரையாளராக எனது பணியை ஆரம்பித்து, பிற்காலத்தில் NIBM (தேசிய வியாபார முகாமைத்துவ கற்கை நிலையம்)இல் பணிப்பாளராக இளம்வயதில் பொறுப்பேற்று கொண்டதுடன் இன,மத,பிரதேச எல்லைகளை தாண்டி நாட்டின் சகல பிரதேச மாணவர்களுக்கும் உயர் கல்வியை பெற்றுகொடுக்க முழுமூச்சாக செயற்பட்டேன்.அத்துடன் ஒரு முக்கிய தனியார் வங்கி ஒன்றில் சிரேஷ்ட மென்பொருள் பொறியலாளராக கடமையாற்றியதுடன் ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனமான USAID இல் உயர்ந்த முக்கிய பதவி ஒன்றினை வகித்து எமது நாட்டின் பல பகுதிகளின் அவிபிருத்திக்கும், முன்னேற்றதிட்க்கும் எனது பாரிய பங்களிப்பை வழங்கி இருந்தேன்.கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் எனது முழு அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்ட சிம்ஸ் கேம்பஸ் மூலம் நாடு முழுவதும் உள்ள சகல மக்களுக்கும் இளம் சமுதாயத்தினருக்கும் என்னாலான பாரிய உதவிகளை வழங்கி வருகிறேன்.
நிருபர்: உங்களது மர்ஹூம் முஸ்தபா புலமைப்பரிசில் பற்றி சொல்லுங்கள்
முஸ்தபா: மறைந்த எனது தந்தையின் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழே எனது கல்லூரியின் மூலமும் எனது கல்லூரிக்கு அப்பாலும் பல கல்விசார் உதவி வழங்கும் திட்டமே அது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 3000 க்கு மேற்பட்ட மாணவர்கள் தமது உயர்கல்வியை கற்றுள்ளனர் அத்துடன் இந்த திட்டத்தின் மூலம் தமது பாடசாலை மாணவர்களுக்கும் சில உதவிகள் வழங்கப்பட்டு கல்வியை கற்று வருகின்றனர்.இந்த திட்டத்தை வெற்றிகரமாக செய்வதற்கு எனக்கு உதவியாக இருக்கும் எனது குடும்பத்தினருக்கும்,எனது கல்லூரி உத்தியோகத்தர்களுக்கும் இந்த சந்தர்பத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நிருபர்: உங்கள் சமூகப்பணி பற்றி நாங்கள் அறிந்துள்ளோம் .அந்தவகையில் உங்களின் சமூகப்பணியை பற்றி சற்று விரிவாக எடுத்துரைக்க முடியுமா?
முஸ்தபா: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவையின் உறுப்பினராகவும் கணக்காய்வு முகாமைத்துவத்துவ குழுவின் தலைவராகவும் செயற்பட்டு சிறந்ததோர் நிருவாகம் ஏற்பட முயற்சித்தமையை பல்கலைக்கழக சமூகம் இன்றும் நினைவு கூறுகின்றது..அத்துடன் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத் தலைவரின் கௌரவ ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளேன். இது போன்று தலைநகரில் மட்டுமே இடம்பெற்று வரும் கல்விசார் கண்காட்சிகளை கிழக்கு மண்ணில் 2 தடவைகள் உள்நாட்டு,வெளிநாட்டு பல்கலைகழகங்களின் பங்கு பற்றலுடன் வெற்றிகரமாக நடாத்தி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயன் பெற உதவியது எப்போதும் சந்தோசமாக நினைவு கூற வேண்டியதே .
நிருபர் : சுனாமி அனர்த்தத்தின் போது நீங்களும் உங்களது குடும்பமும் நேரடியாக பாதிக்கப்பட்டும்,பல முக்கிய
குடும்ப உறுப்பினர்களை இழந்தும் உங்களது பங்களிப்பே அம்பாறை மாவட்டத்திற்கு முதலில் வந்தடைந்ததாக சொல்லபடுகிறது இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
முஸ்தபா: எனது பங்களிப்பே முதலில் வந்தது என்பது பற்றி எனக்கு சரியாக கூற முடியாமல் போனாலும்
எனது பங்களிப்பே அங்கு அவசர நிலையில் ஓங்கி காணப்பட்டது எனலாம்.சுனாமி அலை மோசமாக தாக்கிய எனது அம்பாறை மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்க எந்த அரசியல் தலைவர்களும் முன் வராத ஒரு சோக நிலை அங்கு காணப்பட்டது.இதனை தீர்த்து வைத்து மக்களின் பிரச்சினைகளை நான் சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் சாய்ந்தமருது பிரதேச செயலகதில் அம்பாறை அரசாங்க அதிபரையும் ஊடக நண்பர்களையும் அழைத்துவந்து நடாத்திய ஊடக மாநாட்டின் பின்னர் தான் எமது பிரதேசத்தின் அவல நிலைகள் சர்வதேசத்தின் கண்களுக்கு தெரிய வந்தது எனலாம்.இப்போது இந்த செயலை சிலர் தமது வங்கோரோத்து அரசியலுக்கு பயன் படுத்தினாலும் மக்கள் நன்றாக அறிந்தவர்களாக உள்ளனர்.அதனுடன் எமது சமூகத்தின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு எனக்கு சொந்தமான சிம்ஸ் தனியார் உயர் கல்வி நிறுவனத்தின் கிளையை எமது பிரதேசத்தில் நிறுவி 3000 மேற்பட்ட மாணவர்கள் இலவசமாக கல்வி கற்பதற்கும் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்று வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தொழில்வாய்ப்பை பெற்று மிகவும் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுத்தமையை நீங்கள் அறிவீர்கள். நான் USAID நிறுவனத்துடனும் மேலும் பல அரச சார்பற்ற நிறுவன பிரமுகர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி தற்காலிக கூடாரங்கலை அமைத்து கொடுத்ததுடன் நின்று விடாது அவர்களின் பிள்ளைகளினது அவசிய தேவைபாடுகலில் ஒன்றான கல்வி தேவைகளுக்கு என்னால் முடியுமானதை செய்து கொடுத்திருந்தது இப்போது நினைத்தாலும் மனநிறைவாக இருக்கிறது.அந்த சூல்நிலைக்கு எமது பிரதேச மக்களின் அவசர சிகிட்சைகளுக்காக பாகிஸ்தான் அரசின் உதவியுடன் என்னால் பெற்றுகொடுக்கபட்ட அவசர அம்புலான்சி வண்டி இன்றுவரை சேவையில் உள்ளது.
நிருபர்: நீங்கள் மின்னல்,சதுரங்கம்,அதிர்வு போன்ற நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொண்டு உங்களின் கருத்துக்களை ஆணித்தரமாக கூறி வருகிறீர்கள் அதிகமான விவாதங்களில் உங்களை காண முடிகிறது நீங்கள் உங்களது இந்த பணியை எவ்வாறு நோக்குகிறீர்கள்???? உங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கிறதா? இருந்ததா?
முஸ்தபா: தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவிற்கு பின் எமது அரசியல் தலைமைத்துவங்களின் அசமந்த போக்கினால் நாம் பல துன்பங்களை சந்தித்த போது இவ் அரசியல் தலைமைத்துவங்களுக்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நான் மேற்கொண்டிருந்தமையை நீங்கள் மீட்டிப்பார்ப்பீர்கள் என நினைக்கின்றேன் கடந்த 2004ம் ஆண்டுப்பகுதியில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் தெளிவாக பேசும் நோக்கில் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக நின்று செயற்பட வேண்டும் என வலியுறுத்தி எனது தலைமையில் தவட்டாகாக ஜும்மா பள்ளிவாசல் முன்னாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகரமாக செய்து முஸ்லிம் மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்த போதே
எனக்கு அச்சுறுத்தல்களை சந்திக்க நேரிட்டது.அதன் தொடர்ச்சியாக பல இடங்களில் முஸ்லிம் சமுகத்திற்காக குரல் கொடுத்து வந்த நான் 2003 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் உள்ள சகல முஸ்லிம் தலைவர்களையும் ஓன்று பட வேண்டிய நோக்கங்களை வலியுறுத்தி ஐக்கிய முஸ்லிம் உம்மா எனும் அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் பொது செயலாளராகவும் கடமையாற்றினேன்.அது மாத்திரமின்றி பல சர்வமத அமைப்புக்களின் முக்கிய பதவிகளை வகித்ததன் மூலம் இன ஒற்றுமைக்கும் எனது பங்களிப்புக்களை வழங்கி வருகிறேன். கடந்த சில வருடங்களாக எமது சிறுபான்மை சமுகம் அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்கள் பல பௌத்த பேரினவாத அமைப்புக்களினால் பாரிய சிக்கல்களை அனுபவித்து கொண்டு இருந்த போது எமது மக்களின் வாக்குகளால் நாடளுமன்றம் சென்றவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் எந்தவித சலனமுமில்லாது இருந்த போது காடையர்களின் கண்முடித்தனமான செயல்களை கண்டித்து நான் அதிகலவிலாலான தொலைகாட்சி அரசியல் விவாதத்தில் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை சர்வதேசம் அறிய செய்ய எடுத்த முயற்சிக்கு இன்றும் மக்கள் எனக்கு நன்றி தெரிவிப்பதை எண்ணுகின்ற போது சந்தோசமாக இருக்கிறது.அத்துடன் கடந்த பல மாகாண சபைகள்,உள்ளுராட்சி சபை தேர்தல்களின் போதும் மக்கள் எவ்வாறான தீர்மானக்களை எடுக்க வேண்டும் எனவும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் இப்போதைய ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டிய காரணங்களை பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்தும் வலியுறுத்தி நான் பேசி வந்ததை சகலரும் அறிவர்.இதன் போது பல சிக்கல்கள் எனக்கு வந்திருக்கும் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை.அது போன்று அண்மையில் வில்பத்து,மரிச்சிகட்டி மக்களுக்கு ஆதரவாக நானும் நான் சார்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசும் போராடி வருவதை ஊடகங்களும் மக்களும் நன்றாக
அறிவர்.
நிருபர்: கடந்த காலங்களில் உங்களுக்கு பெரும்பான்மை கட்சிகள் அழைப்பு விடுத்தும் அதனை நீங்கள்
புறகணித்த காரணம் என்ன? நீங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசை தேர்வு செய்த நோக்கம் என்ன?
முஸ்தபா: இலங்கையின் மிகப்பெரிய இரண்டு கட்சிகளிலும் இருக்கின்ற பிரமுகர்களுடன் எனக்கு இருக்கின்ற தனிப்பட்ட உறவுகளின் காரணமாக எனக்கு அழைப்புகள் பல முக்கியஸ்தர்களிடம் இருந்து வந்தாலும் எமது சமுதாயத்திற்கான தனித்துவத்தை நாம் பலப்படுத்த வேண்டிய கட்டாயப்பாடு உள்ளது.அதனுடன் நமது மக்களின் வாக்குகளினால் பெரும்பான்மை சகோதரர்களின் பாராளுமன்ற ஆசனத்தை அதிகரிக்கும் செயலாகவும் அது அமைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதனால் நான் சற்று பின்வாங்கினேன். அதன் பின்னர் எமது தனித்துவத்தை பேணி மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய மறைந்த மர்ஹூம் தலைவர் அஸ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்டு அசைக்க முடியாத மரமாக இருந்து இன்றுபல உட்கட்சி பூசல்களுடனும்,பதவிசார் போட்டிகளுடனும் நெறி தவறி சென்றுகொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைய விருப்பம் இல்லாததால் முஸ்லிம் மக்களின் எந்த பிரச்சினையாக இருந்தாலும் நேரடியாக துணிந்து நின்று இரட்டை நாடகங்கள் போடாது மக்களின் பிரச்சினையை தனது சொந்த பிரச்சினையாக எடுத்து போராடும் இளம் தலைவரான அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைய முடிவு செய்தேன்.தற்போது முஸ்லிம் மக்களின் தேசிய தலைமை அமைச்சர் ரிசாத் அவர்களின் தலைமையிலாலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயற்பாடுகளை கிழக்கு மாகாணத்தில் விஸ்தரிக்கும் பொருட்டு சர்வதேச விவகார பணிப்பாளராகவும்,கிழக்கு மாகான இளைஞர் அமைப்பாளராகவும் இருந்து வருகிறேன்.
நிருபர்: இந்த முறை அம்பாறை மாவட்டத்தில் உங்கள் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசின்
வளர்ச்சியை எவ்வாறு நீங்கள் பாக்கின்றீர்கள்???
முஸ்தபா: இதுவரை எங்களது கட்சி அம்பாறை மாவட்டத்தில் எந்தவித பாரிய முயற்சிகளை யும் எடுக்காது
சிறிய முயற்சிகளை மாத்திரமே எடுத்து வந்தோம்.அதன் பலனாக கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் எங்கள் கட்சி கல்முனை மாநகர சபையில் தனது கணக்கை ஆரம்பித்திருந்தது.தற்போது மிகவும் இஸ்திரதன்மை கொண்ட ஒரு பாரியசக்தியாக உருவெடுத்து வருவதனை காண கூடியதாக உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டைகள் சற்று சரிவை நோக்கி நகர்வதையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் போராளிகள், முக்கியஸ்தர்கள், என சாரை சாரையாக எங்கள் கட்சியை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். முஸ்லிம், தமிழ், சிங்கள,கிறிஸ்தவர்கள் என பலரும் எங்கள் கட்சியை நோக்கி வருவது எங்களுக்கு பாரிய நம்பிக்கையை தந்துள்ளது எனலாம்.புதிய வாக்காளர்கள் கூட எங்களையும் எங்கள் கட்சி தலைமையையும் நம்பி வருவதானது அவர்களது சிந்தனை ஆற்றலை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.எப்படியாக இருந்தாலும் எங்கள் கட்சி தற்போது வேகமாக மக்கள் செல்வாக்கை பெற்று வருவதன் பயனாக விரைவில் நடைபெறப் போகும் தேர்தலில் இம்முறை எங்கள் கட்சியின் சார்பில் மக்கள் மன்றத்திற்கும்,உள்ளுராட்சிசபை களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .இன்சா அல்லாஹ் சத்தியம் வெல்லும்.
நிருபர்: நீங்கள் இம்முறை நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது .இதன் உண்மை தன்மை என்ன?
முஸ்தபா: (சிரிக்கிறார் …..) இன்சா அல்லாஹ் தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவிற்கு பின் எமது பிரதேசத்தில் நிலவுகின்ற சாணக்கியமுள்ள ஊழலற்ற சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டும் மக்களின் நலன் கருதி அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவும் இன்று எமது சமுகத்திற்கு துணிச்சலுடனும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் எமது தேசிய தலைமைத்துவம் கௌரவ றிசாத் பதியுதீன் அவர்களுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகளை; விஸ்தரிக்கும் பொருட்டும் நண்பர்களும், குடும்பத்தினர்களும் நல்ல முடிவையே தந்துள்ளனர்.சிவில் அமைப்புகள் கூட களம் இறங்குமாரும் ஆதரவு தருவதாகவும் கூறி வருகிறார்கள். . இறைவனின் நாட்டம் இருந்தால் மக்கள் ஆணைக்கு செவிசாய்த்து தேர்தலில் களம் இறங்குவேன்.இறுதி முடிவு இன்னும் எட்டவில்லை……அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களில் நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் 077 308 2020 எனும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.