மஹிந்த அரசாங்கம் நோன்பு காலங்களில் கிறீஸ் பூதங்களை ஏவி முஸ்லிம்களை அச்சுறுத்தியது !

 Aswan moulana_Fotor
 
 கடந்த நோன்பு காலங்களில் மஹிந்த அரசாங்கம் கிறீஸ் பூதங்களை ஏவி விட்டு முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளை சீர்குலைத்து அச்சுறுத்தியதை எவரும் மறந்து விட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார இணைப்பு செயலாளர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்துள்ளார். 
மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவிக்காக வீதிகளில் இறங்கி மண்டியிடுவதானது அவருடைய பதவி மோகத்தையே காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாய்ந்தமருதில் பேரிச்சம்பழம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
“மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் நிம்மதியாக நோன்பு நோற்க முடியவில்லை. கடந்த சில வருடங்கள் நோன்பு காலங்களில் கிறீஸ் மனிதர்கள் முஸ்லிம் பிரதேசங்களினுள் புகுந்து மக்களை அச்சுறுத்தினர். அவ்வாறு கிறீஸ் பூதங்களை ஏவி முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளை மஹிந்த அரசாங்கம் சீர்குலைத்திருந்ததை மறந்து விட முடியாது. தற்போது நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ள அமைதியான சூழலில் முதன்முறையாக ரமழான் நோன்பை மிகவும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் அனுஷ்டிக்கின்றோம்.   . .
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் இந்த நல்லாட்சி நீடிக்க வேண்டும். நல்லாட்சியை உருவாக்க பெரும் பங்காற்றிய முஸ்லிம்கள் அதனைப் பாதுகாப்பதிலும் கரிசனை செலுத்த வேண்டும்.
அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. எமது ஐ.தே.கட்சியில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் நிறைந்து முண்டியடிக்கின்றனர்.
அதனால் இன்று எதிர்க்கட்சி பயப்புடுகிறது. எந்த முறையில் தேர்தல் நடந்தாலும் ஜ.தே.கட்சியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ளும். இதற்காக பங்களிப்பு செய்வதற்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களும் தயாராக வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப்போன அனைவரும் ஒதுங்கி கொள்ள வேண்டும். இன்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி இரு கூறுகளாக பிரிந்து விட்டது. அவர்களுக்கு தேர்தலில் 30 ஆசனங்களை கூட பெற முடியாது. மஹிந்தவை பிரதமராக்கி மீண்டும் சர்வதிகார ஆட்சியை ஏற்படுத்த சில பேரினவாதிகள் பகற்கனவு காண்கிறார்கள்.
சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தேர்தல் மாற்றத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் துணை போகாது. அதில் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் உறுதியாக இருக்கின்றார். எந்தவொரு விடயத்திலும் சிறுபான்மை மக்கள் பிரதமர் ரணிலை நம்ப முடியும். அவர் ஒருபோதும் எமது தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதியிழைக்க  மாட்டார்.
இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலையில் தேர்தல் திருத்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. ஆகையினால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து அவசரமாக பொதுத் தேர்ததை நடாத்த வேண்டும். அதன் மூலமே ஜ.தே.க. பெரும்பான்மை பலத்தை பெற்று ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை அமைத்து நல்லாட்சி தொடர வாய்பேற்படும்’ என்று குறிப்பிட்டார்.