மக்கள் விரும்பாத இடைத்தேர்தல்: ஜெயலலிதா !

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தல், மக்கள் விரும்பாத இடைத்தேர்தல் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

jaya_310147f
ஆர்.கே. நகர் தொகுதியில் தேவையில்லாமல் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டிருப்பதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் என்று அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது.

இந்த நிலையில், அந்தத் தொகுதியில் தமிழக முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை ஆகிய இரண்டு இடங்களில் அவர் இன்று பிரச்சாரம் செய்தார்.

ஜெயலலிதா தனது பேச்சின் துவக்கத்திலேயே இந்த இடைத் தேர்தல் மக்கள் விரும்பாமல் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தலை தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் குறித்து ஏதும் பேசாமல், அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விரிவாகப் பட்டியலிட்டார்.

திருவொற்றியூரில் பேசிமுடித்த ஜெயலலிதா, அதற்குப் பிறகு எண்ணூர் நெடுஞ்சாலையில் இதேபோல வாக்குசேகரித்தார்.

ஆர்.கே. நகர் தொகுதியில், ஜெயலலிதாவை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகளின் சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி. மகேந்திரன் போட்டியிடுகிறார். ட்ராபிக் ராமசாமி என்ற சமூக ஆர்வலரும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதால், அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். மேல் முறையீட்டில், கர்நாடக உயர் நீதிமன்றம் அவரை விடுவித்ததையடுத்து அவர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.

அதற்குப் பிறகு, அவர் சட்டமன்ற உறுப்பினராவதற்கு ஏற்ற வகையில், ஆர்.கே. நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.