யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியா !

yoga-15

 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்தியா ஏற்பாடு செய்த  யோகா நிகழ்ச்சி டெல்லி ராஜபாதை பகுதியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி  2 வகையில் கின்னஸ் உலக சாதனை படைத்தது.

ஒரே இடத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு யோகா பயிற்சி வழங்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், என்சிசி படையினர், ராணுவ அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட 35,000 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடியுடன் பல அதிகாரிகளும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கின்னஸ் உலக சாதனை அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கூறும்போது, “டெல்லி ராஜ பாதையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் 84 நாடுகளைச் சேர்ந்த 35,985 பேர் கலந்துகொண்டனர். இதன் மூலம் இந்த நிகழ்ச்சி 2 உலக சாதனைகளை படைத்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் அதிக நாடுகளைச் சேர்ந்த மற்றும் அதிகம் பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சி என்ற சாதனைகளை படைத்துள்ளது” என்றார்.