எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஏனைய சமூகத்தைவிட அதிகளவில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது முஸ்லிம் சமூகம் என்பதை எந்த ஒரு வாக்காளரும் மறந்து விடவோ, மறுத்துவிடவோ முடியாது !

கலைமகன் 
 நாடு விரைவில் பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் ஏனைய சமூகத்தைவிட அதிகளவில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது முஸ்லிம் சமூகம் என்பதை எந்த ஒரு வாக்காளரும் மறந்து விடவோ, மறுத்துவிடவோ முடியாது. 
இந்த சிந்தனை மாற்றத்தை, சிந்தனை வெள்ளோட்டத்தை அரசியல் யாப்பிற்கு கொண்டுவரப்படவுள்ள 20ஆவது திருத்தத்தின்மீது தாராளமாகக் காணமுடிகின்றது. வரவேற்கத்தக்கது. வளமாக்க வேண்டியது. இதில் பிரதான இடம்பிடித்திருப்பது ஆசனங்களின் எண்ணிக்கையும், வாக்குகளின் எண்ணிக்கையுமே என்று சொன்னால், அதில் மாற்றுக் கருத்திற்கு இடமிருக்காது.
இந்நிலையில், அம்பாறை நிர்வாக மாவட்டத்தின் கீழ்வரும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் அம்பாறை, பொத்துவில், சம்பாந்துறை, கல்முனை ஆகிய 04 தேர்தல் தொகுதிகளையும், அவை முறையே 161.999, 152.147, 80.357, 71.254 என 465.757 வாக்குகளையும். இவற்றுள் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தெரிவான 03 சிங்கள, 03 முஸ்லிம். 01 தமிழ் என 07 பாராளுமன்ற உறுப்பினர்களையும், விகிதாசார வாக்குகளின் அடிப்படையில் தெரிவான முஸ்லிம் மற்றும் சிங்கள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர்களையும் கொண்டுள்ளது.
அத்தோடு, இவர்களில் சிரேஷ்ட அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர்கள் என அமைச்சுக்களை அலங்கரித்தவர்களும், தற்போதும் அலங்கரித்து வருபவர்களும் உள்ளனர்.
இத்தனை பெருமைக்கும் உரிய இம்மாவட்டம். எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலிலும், அதன் பின்னரும், சிந்தனையற்ற வாக்களிப்பால், ஏற்படும் வாக்குச் சிதறல்களால் இந்த அந்தஸ்த்துக்களை இழந்து விடக்கூடாது என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும். 
தற்போது. பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ.சு.கட்சி, ஐ.தே.கட்சி, ஸ்ரீ.மு.காங்கிரஸ், த.தே.சுட்டமைப்பு என்பவற்றால் மட்டுமே எதிர்காலத்திலும் ஆசனங்களைக் கைப்பற்றும் வாய்ப்புக்களை அதிகம் கொண்டுள்ளன. ஏனைய கட்சிகளின் நிலைமை தேர்தலின்பின் தெரியவரும். 
இங்கு நாம் அவதானம் செலுத்த வேண்டிய, சிந்தித்துச் செயலாற்ற விடயம் என்னவென்றால், சிங்கள வாக்காளர்கள் எவரும் ஸ்ரீ.சு.கட்சி, ஐ.தே.கட்சி தவிர்ந்த வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதுபோல், தமிழ் வாக்காளர்கள் எவரும் த.தே.கூட்டமைப்பு தவிர்;ந்த வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள். அவ்வாறு வாக்களித்தாலும் அது ஆசன ஒதுக்கீட்டில், எண்ணிக்கையை அதிகரிக்கும் அளவிற்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 
ஆனால், முஸ்லிம் வாக்காளர்களோ இந்த நான்கு கட்சிகளுக்கு மட்டுமின்றி, தேர்தலில் களமிறங்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் வாக்களிக்கத் தவற மாட்டார்கள். இங்குதான் எமது சிந்தனை மாற்றம் அவசியமாகின்றது. 
எமது ஆசனங்களை, எண்ணிக்கையை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால், இத்தகைய வாக்குச் சிதறல்கள் இன்றி வாக்களிக்கும் வகையில் எமது சிந்தனை மாற்றம் மிகவும் அத்தியாவசியமாகின்றது. 
ஏந்த ஒரு கட்சியிலும் கால ஓட்டத்தில் அதிருப்தியாளர் வாக்குகளைத் தவிர்க்க முடியாது. ஆனால் அந்த அதிருப்தியாளர் வாக்குகள் இனத்திற்கான வாக்குச் சிதறல்களாக மாறி, அது ஆசன இழப்பிற்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதே எனது எச்சரிக்கையாகும். இவ்விடயத்தில் முஸ்ஸிம் வாக்காளர்கள் அதீத கவனம் செலுத்தி, சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்  .