இந்திய அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணிக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது.
பங்களாதேஷ் க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இதில் இரு அணிகளுக்குமிடையில் மிர்புரில் இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி இந்திய அணியை 79 ஓட்டங்களால் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இந்திய அணிக்கு ஆரம்ப ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் தவான் களமிறங்கினர். முதல் ஓவரின் 2 ஆவது பந்திலே ரோஹித் சர்மா ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து வந்த விராட் கோஹ்லி 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தவானும் தன்பங்கிற்கு அரைசதம் பெற்று அரங்கு திரும்பினார்.
ராயுடு வந்த வேகத்தில் ஓட்டங்கள் எதுவும் பெறாது அரங்கு திரும்ப, இந்திய அணி 28 ஓவர்கள் நிறைவில் 132 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் டோனி (30) மற்றும் ரெய்னா (17) ஆகியோர் நிதானமாக விளையாடினர்.
இந்திய அணி 43.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டு போட்டி பாதிக்கப்பட்டதால் போட்டி 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
மழை ஓய்ந்ததும் களமிறங்கிய இந்திய அணி 44.6 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .
இதையடுத்து ‘டக் வெர்த் லுயிஸ்’ முறைப்படி பங்களாதேஷ் அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 38 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
முதலாவது போட்டியில் பந்துவீச்சில் அசத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்ட முஸ்தாபிகுர் ரஹ்மான் இப் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.
இந்திய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.