20 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கப் போவதில்லை; அதனை சுருட்டிக் கொண்டு போகுமாறு நாம் கோருகின்றோம்!

 

சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் செவிமடுக்காமல் அவற்றை புறந்தள்ளி அவசரமாக வர்த்தமானியில் பிரசுரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 20 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கப் போவதில்லை. அதனை சுருட்டிக் கொண்டு போகுமாறு நாம் கோருகின்றோம் என ஸ்ரீ. ல. முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வளத்துறை அமைச்சருமானு ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

கண்டி குயின்ஸ் ஹோட்டல் மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்டி நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் 

சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துக்களையும் ஆலோசனைகளுக்கும் எந்தவொரு விரிவான பேச்சுவார்த்தைகளுக்கும் செவிமடுக்காமல் அவற்றை புறந்தள்ளி அவசரமாக 20 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை வர்த்தமாணியில் வெளியிட்டு பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவது ஏன்? இதற்கு எமது ஸ்ரீ. ல. முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமன்றி மக்கள் விடுதலை முன்னணி இ.தொ. கா உட்பட 20 சிறுபான்மைக் கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்து வருவதுடன்  போராட்டம் நடத்தவும் தயாராகவுள்ளன. 

இவ்வாறான நிலையில் 19 ஆம் திருத்தச் சட்டத்திற்கு கிடைக்கப் பெற்றதைப் போன்று 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு 2/3 பெரும்பான்மை ஆதரவு பாராளுமன்றத்தில் கிடைக்கப் போவதில்லை. 

எனவே சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் இடமளிக்காமல் கொண்டு வரப்படும் 20 ஆவது திருத்தச் சட்டத்தை சுருட்டிக் கொள்ளுமாறு வர்த்தமாணியில் வெளியிடப்பட்டுள்ளதையும் உடனடியாக அகற்றிக் கொள்ளுமாறும் நாம் கேட்டுக்கொள்வதுடன் இது தொடர்பாக ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கவனத்திற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார். 

 

Tags