அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தை பயன்படுத்தி, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்கும் சதித்திட்டத்தை முறியடிப்பதற்கு உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று வலியுறுத்தியுள்ளது.
அடுத்த பொதுத்தேர்தலின் போது சிறு பான்மைக் கட்சிகளின் ஆதரவுடன், யானைச் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கும் செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை வேட்புமனு குழு அமைப்பதற்கான முழுமையான அதிகாரத்தை கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு செயற்குழு வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று காலை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் கூடியது. இதன்போதே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த செயற்குழு கூட்டத்தின்போது பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று கூடிய செயற்குழு கூட்டத்தின் போதும் பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு முன்பு குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு சதித்திட்டம் தீட்டுப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சியின் குறித்த சதித்திட்டத்தை முறியடிப்பதற்கு உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்றும் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அனைவரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு உடனடியாக தயாராகுமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழுக் கூட்டத்தின் போது கோரியுள்ளார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையை 225க்கு அப்பால் அதிகரிக்க கூடாது என்றும் உறுதியான தீர்மானத்தை செயற்குழு எடுத்துள்ளது.
இதற்கமைய அடுத்த பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து தொகுவாரியாக பல்வேறு வேலைத்திட்டங்களை தாமதப்படுத்தாமல் ஆரம்பிக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன் போது வலியுறுத்திக் கூறியுள்ளார்.
கட்சி சம்மேளனம்
இதேவேளை தேர்தலை இலக்கு வைத்து அவசரமாக கட்சியின் சம்மேளன மொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த சம்மேளனத்திற்கான திகதி செயற்குழுவில் தீர்மானிக்கப்படவில்லை.
யானை சின்னத்தில் போட்டி
அத்துடன் அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் போது எந்த சின்னத்தில் களமிறங்குவது என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன்போது பெரும்பான்மையான செயற்குழு உறுப்பினர்கள், அடுத்த தேர்தலின் போது யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளனர். குறித்த யோசனை நேற்றைய குழுக் கூட்டத்தின் போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும், நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க தற்போதைய அரசியல் நிலைவரத்தினை கருத்திற் கொண்டு அன்னம் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என கோரியுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வினவிய போது, அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது குறித்தான கலந்தாலோசனை அடுத்த செயற்குழு வரை பிற்போடப்பட்டதாக குறிப்பிட்டார்.
வேட்புமனு குழு
இதேவேளை அடுத்த தேர்தலை இலக்கு வைத்து, வேட்புமனு குழு அமைக்கும் அதிகாரம் செயற்குழுவிடமே இருப்பதனால் அதற்கான அதிகாரத்தை நேற்றைய தினம் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கு செயற்குழு முழுமையாக வழங்கியுள்ளது.இதன்பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு தயாரிப்பு குழு விரைவில் நியமிக்கப்படவுள்ளது.
தொழில் வாய்ப்பு பிரச்சினை
இதேவேளை நேற்றைய செயற்குழுக் கூட்டத்தின் போது, கிராமிய பகுதிகளில் தொழில் வாய்ப்பினையே அதிகமான இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே குறித்த பிரச்சினை பெரும் தலையிடியாக மாறியுள்ளதாக அமைச்சரகள் பிரதமர் ரணிலிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிரந்தர அரசாங்கம் அமைக்காமல் எமக்கு தொழில் வாய்ப்பினை வழங்க முடியாமல் உள்ளது. சிறுப்பான்மை அரசாங்கம் எமக்கு பெரும் தடையாக உள்ளது. எனவே தொழில் வாய்ப்பினை பெற்றுத்தருவதற்கு நிரந்தர ஆட்சியை ஏற்படுத்தி தருமாறு மக்களிடம் கோருமாறு பிரதமர் கூறியுள்ளார்.இந்நிலையில் அடுத்த தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.