20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதலாவது பாராளுமன்ற வாரத்தில் சமர்ப்பிக்கப்படக்கூடும் !

தேர்தல் முறைமை  மாற்றத்துக்கான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதலாவது பாராளுமன்ற வாரத்தில் அதன் முதலாம் வாசிப்புக்கென சபைக்கு சமர்ப்பிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. 
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலமானது கடந்த 15 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு (14 நாட்கள்) பின்னர் பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்கென அந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்க முடியும்.
அந்த வகையில் ஜூலை மாதம் முதலாவது பாராளுமன்ற வாரத்தில் அச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென சபைக்கு சமர்ப்பிக்கப்படக்கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. 
தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று ஆளுந்தரப்பான ஐக்கிய தேசியக் கட்சியே வலியுறுத்தி வரும் நிலையில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரட்னவும் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார். 
இவ்வாறான நிலையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கூடிய விரைவில் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு ஜூலை மாதத்தின் முதலாவது பாராளுமன்ற வாரத்தில் அது சபைக்கு சமர்ப்பிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.  
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தொகுதிவாரி முறையில் தெரிவு செய்யப்படும் 145 ஆசனங்கள், விகிதாசார முறையின் பிரகாரம் தெரிவு செய்யப்படும் 55 ஆசனங்கள் மற்றும் தேசியப்பட்டியலின் மூலமான 37 ஆசனங்கள் என்று அவை பகிரப்பட்டுள்ளன.